Jr NTR: "தமிழ்நாட்டில் இப்படத்தை திரையிட அனுமதிக்கக் கூடாது!" - சீமான் கண்டனம்
Lissy: 'என் மகளுக்கு ரீல் அம்மாவாக...' - 38 ஆண்டுகளுக்குப் பிறகு ப்ரியதர்ஷன் இயக்கத்தில் லிசி!
38 ஆண்டுகால இடைவெளிக்குப் பிறகு இயக்குநர் பிரியதர்ஷன் இயக்கத்தில் நடித்திருக்கிறார் நடிகை லிசி. அவர் இயக்கியிருக்கும் ஒரு புதிய விளம்பரப் படத்தில் லிசி நடித்திருக்கிறார்.
கடந்த 1988-ம் ஆண்டு மலையாளத்தில் வெளியான 'சித்ரம்' திரைப்படத்திற்குப் பிறகு, பிரியதர்ஷன் இயக்கத்தில் லிசி இப்போது நடித்திருக்கிறார். அதோடு, இவர்களின் மகளும் நடிகையுமான கல்யாணி பிரியதர்ஷனும் இணைந்து நடித்துள்ளார்.

இந்த படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் லிசி, "பிரியதர்ஷனுடன் இணைந்து பணியாற்றி 38 ஆண்டுகள் ஆகிவிட்டன.
மீண்டும் அவருடன் பணிபுரிவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நாங்கள் கடைசியாக 'சித்ரம்' படத்தில் இணைந்து பணியாற்றியிருந்தோம். எல்லாவற்றையும் விட மிகச் சிறந்த விஷயம் என்னவென்றால், இந்த விளம்பரத்தில் என்னுடைய மகள் கல்யாணி பிரியதர்ஷனுக்கு நான் ரீல் அம்மாவாக நடித்திருப்பதுதான்.
பிரியதர்ஷனின் எக்ஸிகியூட்டிவ் டைரக்டரான அபிலாஷ் என்னிடம் வந்து, 'இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு செட்டிற்கு வந்திருப்பது உங்களுக்குப் பதற்றமாக இருக்கிறதா?' என்று கேட்டார். அதற்கு நான், 'இல்லை, ஏனென்றால் பிரியதர்ஷனுக்கு என்னை நன்றாகத் தெரியும்.
என்னுடைய சிறந்த மற்றும் மோசமான முகக் கோணங்கள் என்னென்ன, என்னை எப்படித் திரையில் அழகாகக் காட்ட வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்' என்றேன்.
அப்போது அருகில் இருந்து இதைக் கேட்டுக்கொண்டிருந்த பிரியதர்ஷன் உடனே குறுக்கிட்டு, 'எனக்கு அவளுடைய சிறந்த மற்றும் மோசமான குணங்களும் கூடத்தான் நன்றாகத் தெரியும்' என்று கிண்டலடித்தார்.
ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் எனக்கு ஒரு பிக்னிக் ஸ்பாட் போலவும், பழைய நினைவுகளின் சுழலாகவும் இருந்தது" எனப் பதிவிட்டிருக்கிறார்.

விவாகரத்திற்குப் பிறகு, பிரியதர்ஷனும் லிசியும் மீண்டும் தங்களது தனிப்பட்ட வாழ்க்கையில் இணைந்து வாழ முடிவெடுத்துள்ளதாக அறிவித்திருந்தனர். இதனைச் சமீபத்தில் அளித்த பேட்டியிலும் இயக்குநர் பிரியதர்ஷன் உறுதிப்படுத்தியிருந்தார்.



















