'அமெரிக்கா-ஈரான் இடையேயான அமைதி ஒப்பந்தம் எப்போது கையெழுத்தாகிறது?' - ட்ரம்ப் சொ...
Parvathy: ``கொலை, பாலியல் வன்கொடுமை மிரட்டல்களுக்கு ஆளானேன்" - நடிகை பார்வதி திருவொத்து
எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் 'இந்த விவகாரத்தில் இதுதான் என் கருத்து' என உறுதியாக களமாடுபவர் நடிகை பார்வதி திருவொத்து.
அவரது இந்த வெளிப்படைத்தன்மையால் இணையத்தில் அவருக்கு எதிரான கருத்துடையவர்களின் பல எதிர்ப்புகளையும், வெறுப்புப் பிரசாரங்களையும் எதிர்கொண்டிருக்கிறார்.
இருப்பினும், சற்றும் கலங்காமல் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார். இந்த நிலையில், திரைத்துறையில் விளிம்புநிலை மக்கள், குறிப்பாக பெண்கள் எதிர்கொள்ளும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்ததற்காகத் தனக்கு கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் கூட விடுக்கப்பட்டதாகத் தெரிவித்திருக்கிறார்.

சமீபத்தில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் ஜூம் வழியே கலந்துகொண்டு பேசிய நடிகை பார்வதி திருவொத்து, ``2017-ல் கேரளாவில் நடிகை கடத்தப்பட்டுத் தாக்கப்பட்ட சம்பவத்திற்குப் பிறகு எனது திரைப்பயணத்தில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டது. பெண்ணியம் என்பது குறிப்பிட்ட ஒரு சமூகத்துக்கானது அல்ல.
பல்வேறு சமூகப் பிரிவினரின் உரிமைகளையும் உள்ளடக்கியதாக இல்லாவிட்டால் அது பெண்ணியம் ஆகாது. நான் இன்று இங்கே இருப்பதற்குப் பல ஆதரவாளர்களே காரணம். அவர்கள் எதற்கும் 'முடியாது' என்ற பதிலை ஏற்றுக்கொள்ளாதவர்கள். தங்கள் உரிமைகள் பறிபோக அனுமதிக்காதவர்கள்.
நான் ஒன்றும் பெரிய காரியத்தைச் செய்துவிடவில்லை. சிறிதளவேனும் அதிகாரமும் செல்வாக்கும் கொண்ட ஒரு நபர் செய்ய வேண்டிய மிக அடிப்படையான, கண்ணியமான விஷயத்தையே நான் செய்கிறேன்.
அதேவேளையில், இந்தப் பயணம் எளிதானதாகவும் இருக்கவில்லை. எனது வாழ்க்கையிலும் தொழில் வாழ்க்கையிலும், எனது வலுவான குரல் காரணமாக என்னை ஒடுக்க அல்லது அழிக்க முயன்ற சக்திகள் என்னை அச்சுறுத்தும் அளவுக்கு வலிமையானவையாக இருந்த தருணங்கள் உண்டு.

இருப்பினும், தனது குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் அடங்கிய வலுவான ஆதரவு வட்டம் எனக்கு இருப்பதால், அவர்கள் துணையாக நின்று தன்னை முன்னோக்கிச் செல்ல வைக்கிறார்கள்.
அன்பும் புரிதலும் மிக்க அம்மா - அப்பா, அருமையான உரையாடல்களைப் பகிர்ந்துகொள்ளும் சகோதரன் ஒருவன் இருக்கிறான். அவன் எனக்கு ஒரு சிறந்த நண்பனைப் போன்றவன். நான் துன்புறுத்தப்பட்டபோதும், தாக்கப்பட்டபோதும், கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை மிரட்டல்களை எதிர்கொண்டபோதும் என்னுடன் உறுதியாக நின்ற நண்பர்கள் பலர் உள்ளனர்.
என்னைக் காக்க ஒரு பாதுகாப்புக் கவசமாக ஒன்றிணைந்து நின்ற பெண்களின் சமூகம் ஒன்றும் எனக்கு இருந்தது.
அதேநேரம், எனக்குக் கிடைக்கும் அன்பு, அனுதாபம் மற்றும் ஆதரவு ஆகியவை அனைவருக்கும் கிடைப்பதில்லை. 'விமன் இன் சினிமா கலெக்டிவ்' (WCC) அமைப்புடனான எனது தொடர்பு, இவை அனைத்தையும் ஆழமாகப் புரிந்துகொள்ள எனக்கு உதவியது.
எனது அரசியல் நிலைப்பாடுகள் என் திரைப்பயணத்தை வெகுவாகப் பாதித்துள்ளது. பெரிய திரைப்படங்கள் உட்பட பல வாய்ப்புகள் என்னிடமிருந்து பறிக்கப்பட்டுள்ளன. ஆனால், அந்தப் படங்கள் எனக்குரியவை அல்ல என்பதைப் புரிந்துகொள்ளும் முதிர்ச்சியை எனது 20 ஆண்டுகால அனுபவம் எனக்கு வழங்கியுள்ளது.

மேலும், அவர்களுடன் இணைந்து பணியாற்ற நான் விரும்பவில்லை. நான் செய்வதில் ஏதேனும் சிக்கல் இருப்பதாக அவர்கள் கருதினால், நானும் அவர்களை அதே கண்ணோட்டத்தில் மதிப்பிடுகிறேன்.
அவர்கள் சுரண்டல் மனப்பான்மை கொண்டவர்கள். தங்களுக்குச் சாதகமான ஆதாயங்களைப் பெறுவதற்காக, சிலரை ஒடுங்கிய நிலையிலேயே வைத்திருக்கத் தங்கள் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்துகிறார்கள்" என வெளிப்படையாகவே விமர்சித்திருக்கிறார்.



















