Rishabam 2026 New Year Rasi Palan | ரிஷபம் ஆங்கிலப் புத்தாண்டு பலன் | திருமணம்,த...
கனிமொழியைத் தவிர்த்த பாலாஜி டு அப்செட்டில் நயினார்! | கழுகார் அப்டேட்ஸ்
அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்தையும் டி.டி.வி தினகரனையும், ‘கூட்டணியில்கூட இணைத்துக்கொள்ள மாட்டேன்’ என்று எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து சொல்லிவந்தார். பியூஷ் கோயல் உடனான சந்திப்புக்குப் பிறகு, அவருடைய நிலைப்பாட்டில் மாற்றம் தென்பட்டிருக்கிறது.
ஆனால், ‘எடப்பாடி பழனிசாமியின் தலைமையிலுள்ள அ.தி.மு.க-வில் சேரவே மாட்டோம்’ என்று தினகரனும் பன்னீரும் கூறிவருகிறார்கள். இப்படியான சூழலில், ‘இணைப்பு சாத்தியமில்லை என்றால், வரும் தேர்தலில் அ.தி.மு.க-வுக்குப் பெரும் சவாலாக தென்மாவட்டங்கள் அமைந்துவிடும்’ என்று அச்சப்படுகிறார்கள் தென்மாவட்ட இலைக்கட்சி சீனியர்கள்.

இந்தநிலையில்தான், ‘தி.மு.க-வை வீழ்த்த நினைக்கும் அனைவரும், எடப்பாடி பழனிசாமியின் தலைமையை ஏற்று வரவேண்டும். இந்த அழைப்பு தேவையானவர்களுக்குப் புரியும்...’ என்று கூறியிருக்கிறார் எடப்பாடிக்கு நெருக்கமான முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார். அவர் இப்படி பொடிவைத்துப் பேசியதன் பின்னணியில், ‘விரைவிலேயே இணைப்போ அல்லது கூட்டணியோ நிகழப்போகிறது...’ என்று குஷியாகியிருக்கிறார்கள் தென்மாவட்ட சீனியர்கள்.
ஆனாலும், ‘எடப்பாடிக்கு தெரிந்துதான் உதயகுமார் இப்படி சொன்னாரா... இல்லை, தெரியாமல் சொன்னாரா...’ என்ற விவாதமும் கட்சிக்குள் சூடாகியிருக்கிறது!
திருப்பூரில் நடந்த தி.மு.க மகளிர் மாநாடு, எதிர்பார்த்ததைவிடச் சிறப்பாக நடந்து முடிந்திருப்பதால், தலைமை ரொம்பவே ஹேப்பியாக இருக்கிறதாம். குறிப்பாக, பாலாஜி செய்த மற்றொரு சம்பவம்தான் தலைமையின் மகிழ்ச்சிக்குக் காரணமாம்.
அதாவது, “மாநாட்டு மேடையிலும், முகப்பிலும் மட்டும் கனிமொழியின் படத்தை வைத்துவிட்டு, மாநாடு திடல் முழுக்க முதல்வர் ஸ்டாலினின் படத்தையும் உதயநிதியின் படத்தையுமே இடம்பெற வைத்திருக்கிறார் பாலாஜி.

அவர்களுக்கு இணையாக கனிமொழியின் படத்தையும் போட்டால், கனிமொழிக்கு அதிக முக்கியத்துவம் அளித்ததுபோல் ஆகிவிடும். அதனால், தலைமையின் சங்கடத்துக்கு ஆளாக வேண்டாம் என்று யோசித்து, கனிமொழியின் படத்தை தவிர்த்து ஸ்கோர் செய்திருக்கிறார். ‘நாம் சொல்லாமலேயே நமது எண்ணத்தை பாலாஜி புரிந்துகொண்டுவிட்டாரே...’ என்று, தலைமையும் உற்சாகமாகி அவரை ஏகத்துக்கும் பாராட்டிவிட்டுச் சென்றிருக்கிறது” என்கிறார்கள் கரூர் விவரப் புள்ளிகள்!
சமீபத்தில் கிறிஸ்துமஸ் நிகழ்வு ஒன்றுக்காக, கடைகோடி மாவட்டத்துக்கு விசிட் அடித்தார் சிறுத்தை கட்சித் தலைவர். அவர் வரும் செய்தியைக் கேள்விப்பட்டவுடன், அந்தப் பகுதியிலுள்ள மூன்று மாவட்டச் செயலாளர்களில் ஒருவர், தடபுடலான வரவேற்பு ஏற்பாடுகள், தங்குமிடம், உணவு உபசரிப்பு என்று அட்வான்ஸாக சில லட்டுகளைச் செலவழித்திருக்கிறார்.
ஆனால், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களும், சக மாவட்டப் புள்ளிகளும், சிறுத்தை தலைவரின் அருகிலேயே அந்த மாவட்டச் செயலாளரை நெருங்கவிடவில்லையாம். தலைவரும்கூட அது குறித்து கவலைப்படவில்லையாம். “பட்டியல் சமூகத்தினர் அல்லாதோருக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கிவிட்டதாகப் பெருமிதம் கொள்கிறார்கள்.
ஆனால், பட்டியல் சமூகத்தினர் அல்லாத நிர்வாகிகளால், தலைவரைச் சந்திக்கக்கூட முடியவில்லை. அந்த அளவுக்கு சக மாவட்டப் புள்ளிகள் அராஜகம் செய்கிறார்கள். கடைக்கோடி மாவட்டத்தில் நடந்திருக்கும் இந்த விவகாரத்தில், அப்செட்டாகியிருக்கும் அந்த மாவட்டச் செயலாளர், கட்சியிலிருந்து விலகும் மனநிலைக்கு வந்துவிட்டார்” என்கின்றன சிறுத்தை கட்சி வட்டாரங்கள்!
பா.ஜ.க மாநிலத் தலைவரான நயினார் நாகேந்திரன், ‘தமிழ்நாடு தலைநிமிர தமிழனின் பயணம்’ என்ற பெயரில் தமிழ்நாடு முழுவதும் அரசியல் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
சமீபத்தில், நீலகிரி மாவட்டத்துக்குச் சென்ற அவர், குன்னூரில் கிடைத்த வரவேற்பில் பூரித்துப்போயிருக்கிறார். ஆனால், அதை முடித்துவிட்டு ஊட்டிக்கு சென்ற அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்திருக்கிறது. ஊட்டியில் கான்வாயை மறித்து கருப்புக்கொடி காட்டிய அண்ணாமலை ஆதரவாளரின் செயல், பேசத் தொடங்கியதும் மைக் சொதப்பல், பிரசார வாகனத்தில் நின்று ஓயாமல் எடப்பாடி புகழ்பாடிய அ.தி.மு.க நிர்வாகிகள் என்று, அடுத்தடுத்து நிகழ்ச்சி சொதப்பவும், கடுப்பாகிவிட்டாராம் நயினார்.

அதேசமயம், சொல்லிக்கொள்ளும் அளவுக்குகூட கூட்டத்தைக் கூட்டாமல் ஊட்டி பா.ஜ.க நிர்வாகிகளும் சொதப்பிவிட்டார்களாம். “லேட்டாக என்ட்ரி கொடுத்த அண்ணாமலை, கூடியிருந்த சொச்சக் கூட்டத்தையும் தன் பக்கம் திருப்பிவிட்டார். நன்றியுரை போல கடைசியாக நாலு வார்த்தைகளை நயினார் பேச தொடங்கியதுமே, கூட்டம் கலையத் தொடங்கிவிட்டது. அப்செட்டான நயினார், ஊட்டி நிர்வாகிகளுக்கு அர்ச்சனை செய்துவிட்டு கிளம்பியிருக்கிறார்” என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்!
கரூர் துயரச் சம்பவத்தை விசாரித்து வரும் சி.பி.ஐ., கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை எஸ்.பி உள்ளிட்ட அதிகாரிகளையும்... த.வெ.க நிர்வாகிகளான ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, சி.டி.ஆர்.நிர்மல்குமார், கரூர் மதியழகன் ஆகியோரையும் டெல்லிக்கு அழைத்து விசாரித்து வருகிறது.
கடந்த டிச.29-ம் தேதி நடந்த விசாரணையில், ‘விஜய் எப்போது சம்பவ இடத்துக்கு வந்தார். அதற்கு முன்னதாக என்ன மாதிரியான சூழல் சம்பவ இடத்தில் நிலவியது..?’ என்று சி.பி.ஐ அதிகாரிகள் கேட்டிருக்கிறார்கள்.

அதற்கு, ‘இரவு ஏழு மணியளவில் வேலுசாமிபுரத்திற்கு விஜய் வந்துசேர்ந்தார். அதற்கு முன்னதாகவே கூட்டம் கூடிவிட்டது. மாலை 6 மணிக்கெல்லாம் நிலைமை கட்டுக்கடங்காமல் போனது...’ என்று பதிலளித்தார்களாம் காவல்துறை அதிகாரிகள். உடனே, ‘ஆறு மணிக்கெல்லாம் கட்டுக்கடங்காத அளவுக்குக் கூட்டம் கூடிவிட்டது என்றால், பிறகு எதற்காக விஜய்யைக் கூட்டம் நடத்தும் இடத்திற்கு வர அனுமதித்தீர்கள்... நடுவழியிலேயே தடுத்துத் திரும்பிபோகச் சொல்லியிருக்கலாமே...’ என்று கிடுக்கிப்பிடி கேள்வியைக் கேட்டதாம் சி.பி.ஐ. தமிழகக் காவல்துறையினரிடமிருந்து ஏழு மணிக்கு முன்னதாக த.வெ.க நிர்வாகிகளுக்கு அழைப்பு ஏதும் சென்றதா என்று விசாரணையைத் தீவிரப்படுத்தியிருக்கிறதாம் சி.பி.ஐ.!




















