திருச்சி ஜங்ஷன் இந்தி விவகாரம்: `மத்திய அரசின் தமிழ் மொழி மீதான் பற்றை..!' - எடப...
கன்னி: கண்டகச் சனி - `பதற்றம் வேண்டாம், ஆனால் கவனம்' ஏன்? | 2026 வாக்கிய சனிப்பெயர்ச்சி பலன்கள்
கன்னி - ராசிச் சக்கரத்தின் 6-வது ராசி. ராசிக்கு அதிபதி புதன். சனியும் சுக்கிரனும் இந்த ராசிக்காரர்களுக்கு நன்மை செய்வார்கள். இந்த ராசியில் பிறந்த நீங்கள், புத்திஜீவியாகப் பணம் ஈட்டிப் பெருமையை அடைவீர்கள்; சிரமஜீவியாக மாறமாட்டீர்கள்.

கன்னி ராசிக்காரர்களுக்கான 11 பலன்கள்:
1. உங்கள் ராசிக்கு, வாக்கியப் பஞ்சாங்கப் படி 6.3.2026 முதல் 24.4.2028 வரை, 7-ம் வீட்டில் அமர்ந்து பலன் தரப்போகிறார் சனி பகவான். ஆகவே, எந்தவொரு விஷயத்தில் நிதானம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம்.
2. பலகாலம் நீங்கள் எதிர்பார்த்திருந்த விஷயத்தில் சாதகமான பலன் கிடைக்கும். வீட்டில் பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வார்கள். மகனுக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்கும். நீங்களும் வெளிநாடு சென்று வருவீர்கள். ஆனாலும் மகள் கல்யாண விஷயத்தில் அதீத பிரயத்தனம் தேவைப்படும்.
3. விலையுயர்ந்த பொருள்கள், நகைகளைக் கவனமாகக் கையாளுங்கள். பூர்விகச் சொத்துப் பிரச்னைகள் தலைதூக்கும். பிரபலங்கள், வேற்று மொழிக்காரர்கள் உதவியால் சில காரியங்களைச் சாதிப்பீர்கள். ஒருசிலர், வரும் ஏப்ரல் மாதத்துக்குள் வீட்டைப் புதுப்பிப்பீர்கள். வீடு மாறவும் வாய்ப்பு உண்டு. தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படலாம்.
4. சனி பகவான் உத்திரட்டாதியில் பயணிக்கும்... 2.4.2026 முதல் 14.4.2027 வரை இழுபறியில் இருந்து வந்த வழக்குகள் உங்களுக்குச் சாதகமாகும். பணப்பற்றாக்குறை நீங்கும் அளவுக்கு வரவு உண்டு. சிலருக்குக் குழந்தைப் பாக்கியம் கிடைக்கும்.

5. சனி பகவான் 14.4.2027 முதல் 24.4.2028 வரை ரேவதியில் சஞ்சரிப்பார். அப்போது, உங்களின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அழகு, இளமை கூடும். கௌரவப் பதவிகள், பொறுப்புகள் தேடி வரும்.
6. அதேபோல் இந்த வருடம் ஜூலை 15 முதல் நவம்பர் வரையிலும் சனி பகவான் வக்ரத்தில் செல்கிறார். அப்போது, எதிர்பார்த்திருந்த வகையில் உதவிகள் கிடைக்கும். உடற்பயிற்சி, யோகா செய்வது நல்லது. மறைமுக எதிர்ப்புகள் விலகும். எனினும் சிறுசிறு உடல் உபாதைகள் வந்து நீங்கும்.
7. சனிபகவான் மீனத்தில் அமர்ந்து உங்கள் ராசியைப் பார்ப்பதால், அவ்வப்போது சோர்வும் மறதியும் வர வாய்ப்பு உண்டு. யோகா, தியானப் பயிற்சி எடுத்துக்கொள்ளுங்கள். உணவு விஷயங்களில் அலட்சியம் கூடாது.
8. உங்கள் ராசிக்கு 4 மற்றும் 9-ம் இடங்களும் சனியின் பார்வையைப் பெறுகின்றன. ஆகவே, தாய்வழி உறவினர்களிடையே மனக் கசப்பு கள் ஏற்படலாம். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். சேமிப்புகள் கரையும். வீட்டுச்செலவிலும் தொழில் செலவுகளிலும் திட்டமிடலும் வரையறையும் தேவை.
9. இந்த ராசியைச் சேர்ந்த பெண்களுக்கு உடல்நலக் குறைபாடுகள் ஏற்படலாம். ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசி யம். அலுவலகம் செல்லும் பெண்கள், அடிக்கடி விடுப்பு எடுக்க வேண்டாம். புது முயற்சிகளை இப்போதைக்குத் தள்ளிப்போடுங்கள்.
10. வியாபாரத்தில் எக்காரணம் கொண்டும் அகலக்கால் வைக்கக் கூடாது. புதிதாகக் கடன் வாங்குவதைத் தவிருங்கள். பங்குதாரர்களை இயன்றவரையிலும் அனுசரித்துச் செல்வது நல்லது. அரிசி - பருப்பு மண்டி, கமிஷன், கெமிக்கல் வகைகளால் லாபம் வரும்.
11. உத்தியோகத்தில், திடீர் இடமாற்றம் உண்டு. வேலைச் சிரமங்களைப் பொறுத்துக்கொண்டால், விளைவு உங்களுக்கு நன்மையாக இருக்கும். அதேபோல், அதிகாரிகளிடம் மோதல்போக்கு வேண்டாம். பழைய அதிகாரிகளின் வழிகாட்டுதல் நன்மை அளிக்கும். கணினித் துறை யினருக்கு, வெளிநாடு சார்ந்த ஒப்பந்தப் பணிகள் கிடைக்கும்; எனினும் ஒப்பந்தங்களில் கவனம் தேவை.















