நாயுடன் நடைபயிற்சி; விளையாட்டு வீரர்களை வெளியேற்றிய ஐ.ஏ.எஸ், டெல்லி மாநகராட்சி க...
கறிக்கோழி: `40,000 விவசாயிகள், 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதார விவகாரம்'- வெளிநடப்பு செய்த எடப்பாடி
தமிழ்நாட்டில் கறிக்கோழி பண்ணைகளில் கோழிகளை வளர்க்கும் விவசாயிகளுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் கோழிக்கறி விலை கடுமையாக உயர்ந்து வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, கறிக்கோழி உற்பத்தி நிறுவனங்கள் விவசாயிகளுக்குக் கிலோ ஒன்றுக்கு 6 ரூபாய் 50 காசுகள் வளர்ப்பு கூலியாக வழங்கி வருகின்றன. உற்பத்திச் செலவு அதிகரிப்பைக் கருத்தில் கொண்டு, கிலோ ஒன்றிற்கு 20 ரூபாய் வளர்ப்பு கூலியாக வழங்கவேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை.
இதனை வலியுறுத்தி அவர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வரும் நிலையில், சென்னையில் உள்ள கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவப் பணிகள் இயக்குநர் அலுவலகத்தில் ஜனவரி 21-ம் தேதி (நேற்று) முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் தீர்வு எட்டப்படவில்லை. அதைத் தொடர்ந்து போராட்டம் நடத்திய விவசாயிகளை காவல்துறை கைது செய்தது.
இந்த விவகாரம் தொடர்பாக சட்டமன்றத்தில் கேள்வி எழுப்ப அதிமுக தரப்பில் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு அனுமதி தரவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்திருக்கிறார்.
அதைத் தொடர்ந்து, சட்டமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்த எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, ``இன்றைய தினம் சட்டமன்றத்தின் ஜீரோ அவரில் விவசாயிகளின் பிரச்னை குறித்து விவாதிக்க அவைத் தலைவரிடம் அனுமதி கேட்டோம். எங்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டின் கோவை, திருப்பூர், நாமக்கல், ஈரோடு, விழுப்புரம் உள்ளிட்ட தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில கறிக்கோழி வளர்ப்பு பண்ணை இருக்கிறது.

இதில் சுமார் 40,000 விவசாயிகள் இந்தப் பணியில் ஈடுபட்டிருக்கிறார்கள். இந்தத் தொழிலில் சுமார் 5 லட்சம் பேர் பணியாற்றி வருகிறார்கள். இது ஒரு முக்கிய தொழிலாக கருதப்படுகின்றது. கறிக்கோழி விற்கும் நிறுவனங்களுடன் ஒப்பந்த அடிப்படையில் கோழி வளர்ப்பு தொழில் செய்து வருகிறார்கள். ஒரு கிலோவுக்கு ரூ.6.50 வளர்ப்புக் கூலியாக வழங்கப்படுகிறது. அ.தி.மு.க ஆட்சியில் இதற்கான ஒப்பந்தம் போடப்பட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டது.
கோழிக் குஞ்சு வழங்கும் நிறுவனமே தீனி வழங்கினாலும், கோழி பண்ணை செட், தேங்காய் நார், மின்கட்டணம், தண்ணீர் எனப் பலமடங்கு அதன் விலைகள் உயர்ந்துட்டது. இந்த விலை உயர்வால், கறிக்கோழி வளர்ப்பு பண்ணை உரிமையாளர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே, கறிக்கோழி வளர்ப்பு ஊதியத்தை உயர்த்தி கொடுக்க வேண்டும் என, கடந்த ஆறு மாத காலமாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஆனால் அரசு அதைக் கண்டுக்கொள்ளவில்லை. அரசு 7.12.2026, 21.1.2026 ஆகிய தேதிகளில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் என அறிவித்து, அதை நடத்தவில்லை. சுமார் 40,000 விவசாய குடும்பங்கள், 5 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் ஒரு பிரச்னையை, அரசு வேண்டுமென்றே திட்டமிட்டு தள்ளிப்போடுகிறது. அதன்மூலம் கறிக்கோழி நிறுவனங்களுக்கு சாதகமாக செயல்படுகிறது. இதை ஜீரோ அவரில் பேசக்கொண்டுவந்தும் அனுமதி மறுக்கப்படுகிறது என்றால், எந்த அளவுக்கு இந்த அரசாங்கம் சர்வாதிகார போக்கை கடைபிடிக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். அதனால்தான் வெளிநடப்புச் செய்தோம்." என்றார்.

















