செய்திகள் :

களம் மாறிய அரசியல்... தடம் புரளும் அதிமுக; EPS-க்கு 'செக்'; எம்.ஜி.ஆர் மாளிகையில் என்ன சலசலப்பு?

post image

அ.தி.மு.கவில் தலைமைக்கு எதிராக முன்னணித் தலைவர்கள் போர்க்கொடி தூக்கியுள்ள சம்பவம் தமிழ்நாட்டு அரசியலில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஏற்பட்ட கருத்து முரண்பாடினைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் தனி அணியாகச் செயல்படத் தொடங்கியுள்ளது கட்சி வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சனிக்கிழமை இபிஎஸ் இல்லத்தில் நடந்த கூட்டத்தில், தவெக தலைவர் விஜய் முதல்வராகப் பொறுப்பேற்றதற்கு ஆதரவு தெரிவிப்பது மற்றும் சட்டமன்றப் பொறுப்புகள் குறித்து கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் சி.வி. சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் கூட்டத்தைப் புறக்கணித்து வெளியேறினர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

வெளியேறிய தலைவர்கள் 38 எம்.எல்.ஏ-க்களுடன் தனியாக ஆலோசனையில் ஈடுபட்டனர். சட்டமன்றக் குழுத் தலைவராக எஸ்.பி. வேலுமணியையும், துணைத் தலைவராக சி.வி. சண்முகத்தையும் நியமிக்கக் கோரி கையெழுத்து வேட்டை நடந்ததாகக் கூறப்படுகிறது. தற்போது சுமார் 60% நிர்வாகிகள் சி.வி. சண்முகம் பக்கமும், 40% பேர் மட்டுமே இபிஎஸ் பக்கமும் இருப்பதாகக் கணிக்கப்படுகிறது.

38 எம்.எல்.ஏ-க்கள் அதிருப்தி அணியில் இருப்பதால் இபிஎஸ்-ஸின் தலைமைக்குச் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த இபிஎஸ் அனுப்பிய 5 பேர் கொண்ட தூதுக்குழுவின் சமாதானப் பேச்சை அதிருப்தி தரப்பினர் ஏற்க மறுத்துவிட்டனர்.

நேற்று அவசரமாக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தை இபிஎஸ் கூட்டியுள்ளார். ஒருவேளை அதிருப்தி தலைவர்கள் முதலமைச்சர் விஜய்யைச் சந்தித்து ஆதரவு தெரிவித்தால், அவர்களைக் கட்சியிலிருந்து நீக்கவும் இபிஎஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில் இன்று தவெக முதல்வர் விஜய் தலைமையிலான முதல் சட்டமன்றக் கூட்டம் தொடங்கியது. இந்தச் சட்டமன்றக் கூட்டத்துக்கு அ.தி.மு.க-வினர் ஒரே அணியாக வராமல் தனித்தனி குழுக்களாக வந்தனர். முதலில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு குழுவும், பின்னர் எஸ்.பி. வேலுமணி தலைமையில் ஒரு குழுவும் வந்தன. எஸ்.பி. வேலுமணி குழுவினர் சி.வி. சண்முகத்திற்காகக் காத்திருந்துவிட்டுப் பின்னர் அவைக்குள் சென்றனர்.

எஸ்.பி.வேலுமணி
எஸ்.பி.வேலுமணி

சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கும் நிகழ்வு தொடங்கிய பின்னரே சி.வி. சண்முகம் அவைக்கு வந்தார். அதிமுகவில் உட்கட்சிப் பூசல் நிலவி வரும் நிலையில், சட்டமன்றத்திலேயே எம்.எல்.ஏக்கள் இப்படித் தனித்தனி குழுக்களாகச் செயல்பட்டது கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்தது.

மேலும், தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டம் இன்று தொடங்கிய நிலையில், எடப்பாடி பழனிசாமியை அ.தி.மு.க சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்க வேண்டும் என 17-எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே விருப்பம் தெரிவித்திருக்கின்றனர். இந்த விவகாரம் அரசியல் களத்தில் மீண்டும் அ.தி.மு.க பேசுபொருளாகியிருக்கிறது.

இந்தச் சம்பவத்தின் பின்னணி குறித்து விசாரிக்க ஊடகவியலாளர் ஷபீர் அகமதிடம் பேசினோம். அவர், ``2021 தேர்தலுக்குப் பிறகு அ.தி.மு.க-விற்கு இந்தத் தேர்தல் ஒரு 'வாழ்வா சாவா' போராட்டமாக அமைந்தது. எடப்பாடி பழனிசாமி ஒரு வருடத்திற்கு முன்பே தீவிரப் பிரசாரத்தைத் தொடங்கினாலும், களத்தில் மக்களிடம் பெரிய அளவிலான வரவேற்போ அல்லது எழுச்சியோ ஏற்படவில்லை.

குறிப்பாக, பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்ததும், பின்னர் விஜய்யின் அரசியல் வருகையால் ஏற்பட்ட தாக்கமும் அ.தி.மு.க-வின் வாக்குகளைப் பாதித்துள்ளன. தி.மு.க-விற்கு மாற்றாக மக்கள் அ.தி.மு.க-வை இந்தப் பொதுத்தேர்தலில் பார்க்கத் தவறிவிட்டனர் என்பதையே தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

சிவி சண்முகம்
சிவி சண்முகம்

முன்னாள் அமைச்சர்களின் அதிருப்தி

அ.தி.மு.க-வில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவுக்கு முக்கியமான காரணம், கட்சியின் அனைத்து முடிவுகளையும் இபிஎஸ் ஒருவரே எடுப்பதாகும். கட்சியின் முகங்களாக அறியப்பட்ட எஸ்.பி. வேலுமணி, விஜயபாஸ்கர், சி.வி சண்முகம் போன்ற செல்வாக்கு மிக்க தலைவர்களுக்குப் பிரசாரத்திலோ அல்லது முடிவெடுப்பதிலோ போதிய சுதந்திரம் வழங்கப்படவில்லை.

மேலும், நிர்வாகிகள் சொன்ன கள யதார்த்தத்தை ஏற்காமல், "நாம்தான் ஜெயிக்கிறோம்" என்ற பிடிவாதமான போக்கை இபிஎஸ் கடைபிடித்தது தலைவர்களிடையே கோபத்தையும் வெறுப்பையும் உண்டாக்கியுள்ளது.

கோட்டை விட்ட கோட்டைகள்

அ.தி.மு.க-வின் பலமான கோட்டையாகக் கருதப்பட்ட மேற்கு மண்டலத்திலேயே (கொங்கு பகுதி) இந்த முறை மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. எஸ்.பி. வேலுமணி போன்ற 'ஸ்ட்ராங் மேன்' பிம்பம் கொண்ட தலைவர்களின் தொகுதிகளிலேயே இழுபறி நிலை உருவானது, அவர்களின் செல்வாக்கை கேள்விக்குறியாக்கியுள்ளது.

பா.ம.க கூட்டணியால் வட மாவட்டங்களில் ஓரளவு தொகுதிகளைத் தக்கவைக்க முடிந்தாலும், ஒட்டுமொத்தமாக கட்சி பலவீனமடைந்துள்ளது எம்.எல்.ஏ-க்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 ஷபீர் அகமது
ஷபீர் அகமது

எதிர்காலத் திட்டமும் ஆளுங்கட்சி ஆதரவும்

தற்போது சி.வி. சண்முகம், எஸ்.பி. வேலுமணி போன்றவர்கள் தனிக் கோணங்களில் செயல்படுவது, இபிஎஸ் தலைமையிலான அதிகாரத்தைச் சவால் செய்வதற்கே ஆகும். இவர்கள் சட்டமன்றத்தில் ஒரு தனி அணியாகச் செயல்படவும் வாய்ப்புள்ளது. அதே சமயம், ஆளுங்கட்சியுடன் ஒரு இணக்கமான போக்கை கடைபிடிப்பதன் மூலம், தங்களுக்கு எதிரான சட்டரீதியான நடவடிக்கைகள் அல்லது காவல்துறை அழுத்தங்களிலிருந்து தப்பிக்க இவர்கள் முயலலாம் என்ற சந்தேகமும் நிலவுகிறது.

இதனால், வரும் காலங்களில் கட்சி அலுவலகக் கைப்பற்றல், வங்கிக் கணக்கு விவகாரங்கள் என அ.தி.மு.க-வில் மீண்டும் ஒரு அதிகாரப் போட்டி அரங்கேறுவதற்கான சூழல் உருவாகியுள்ளது" என்றார்.

தொடர்ந்து பத்திரிகையாளர் சுபேரிடம் பேசினோம். அவர், ``அ.தி.மு.க-வில் தற்போது ஏற்பட்டுள்ள பிளவு என்பது தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு திடீரென உருவானதல்ல. அது ஏற்கனவே கட்சிக்குள் புகைந்து கொண்டிருந்த ஒன்றுதான். குறிப்பாக, பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைத்த முடிவே அக்கட்சியின் பல முக்கிய நிர்வாகிகள் வெளியேறக் காரணமாக அமைந்தது.

2019 மற்றும் 2021 தேர்தல்களில் தோல்வியைத் தழுவிய பின்னரும், தொண்டர்களின் விருப்பத்திற்கு மாறாக மீண்டும் பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்தது பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. தமிழகத்தின் 'மதச்சார்பற்ற அரசியல்' என்ற எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் பார்முலாவை இபிஎஸ் தலைமையிலான அ.தி.மு.க கைவிட்டதே இந்த அதிருப்திக்கு அடிப்படை.

ஊடகவியலாளர் சுபைர்
ஊடகவியலாளர் சுபைர்

விஜய் - அதிமுக இடையிலான ரகசியப் பேச்சுவார்த்தைகள்

தேர்தலுக்கு முன்னதாகவே தவெக தலைவர் விஜய்யுடன் அ.தி.மு.க பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அதில் ஆட்சிப் பகிர்வு (முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் பதவி காலப் பகிர்வு) குறித்து விவாதிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. ஆனால், ஏதோ ஒரு அழுத்தத்தின் காரணமாக அ.தி.மு.க மீண்டும் பாஜகவுடன் கைகோர்த்தது.

இந்தத் தவறான கூட்டணி முடிவால், பல தொகுதிகளில் அ.தி.மு.க டெபாசிட் இழந்து மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. இது அக்கட்சி எம்.எல்.ஏ-க்களிடையே ஒரு பாதுகாப்பற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது.

தவெக நோக்கி நகரும் எம்எல்ஏக்கள்

தற்போது எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் தலைமையிலான ஒரு குழுவினர், விஜய்யின் தவெக-விற்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க முயற்சிப்பதாகத் தெரிகிறது. ஆனால், பா.ஜ.க கூட்டணியில் வெற்றி பெற்றவர்களை நேரடியாகச் சேர்த்துக் கொள்ள விஜய் தரப்பு தயக்கம் காட்டுவதாகவும், விருப்பமுள்ளவர்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு 'விசில்' சின்னத்தில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று வர வேண்டும் என்று நிபந்தனை விதிப்பதாகவும் கூறப்படுகிறது.

இபிஎஸ் தன்னை மட்டுமே முன்னிலைப்படுத்திக் கொண்டு மற்ற தலைவர்களை முடக்கியதும் இந்த அதிருப்திக்கு ஒரு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

மாறிவிட்ட அரசியல் தளம்: திராவிடக் கட்சிகளின் சறுக்கல்

விஜய்யின் அரசியல் வருகையை இரு திராவிடக் கட்சிகளுமே மிகக் குறைவாக மதிப்பிட்டுவிட்டன. 2016-க்குப் பிறகு தமிழக அரசியலில் ஏற்பட்ட தலைமுறை இடைவெளியை விஜய் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். திராவிடக் கட்சிகள் இன்னும் பழைய பாணி அரசியல், அடுக்குமொழிப் பேச்சுகள் மற்றும் காசு கொடுத்துக் கூட்டத்தைக் கூட்டுவது போன்றவற்றையே நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இன்றைய இளைஞர்களுக்குத் தேவையான வேகமான மற்றும் எளிமையான அரசியலை விஜய் வழங்கியுள்ளார். அரசியல் வறட்சி நிலவிய நேரத்தில், மக்கள் விஜய்யை ஒரு மாற்றாகப் பார்க்கத் தொடங்கிவிட்டனர் என்பதை இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்துகின்றன" என்றார்.

ஸ்டாலின் - விஜய் சந்திப்பு: ஆரத்தழுவி வரவேற்ற உதயநிதி, கைபிடித்து அழைத்துச் சென்ற ஸ்டாலின்!

தமிழகத்தின் புதிய முதலமைச்சராகப் பொறுப்பேற்றுள்ள தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் சி. ஜோசப் விஜய், முன்னாள் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலினை சந்தித்துப் பேசினார்.நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்... மேலும் பார்க்க

Gold: "ஓராண்டிற்கு தங்கம் வாங்காதீங்க" - மோடியின் ஐடியாவும், அதன் பின்னிருக்கும் உலக அரசியலும் என்ன?

"கச்சா எண்ணெய் விலை உயர்வால், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு பாதிக்கப்படுவதைத் தவிர்க்க, அத்தியாவசியமற்ற செலவுகளைக் குறைக்க வேண்டும். அதனால், தேசத்தின் நலன் கருதி, அடுத்த ஓராண்டிற்குத் தங்கம் வ... மேலும் பார்க்க

சேலம்: மதுபோதையில் மாணவனைக் கொன்று படம் பிடித்த சிறுவர்கள்; போர்க்கால நடவடிக்கை கோரும் அன்புமணி

சேலம் மாவட்டம் சீலநாயக்கன்பட்டியை அடுத்த காட்டுவளவு என்ற இடத்தில் மதுபோதையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரு மாணவர்கள் உள்ளிட்ட மூவர் ஒன்று சேர்ந்து கோகுல் என்ற சக மாணவரைச் சரமாரியாக கத்தியால... மேலும் பார்க்க

மோடி தங்கத்தை தவிர்க்க சொல்வது ஏன்? தங்கத்துக்கும் அந்நிய செலாவணிக்கும் என்ன தொடர்பு? - முழு விவரம்!

"ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீர்கள்; வெளிநாட்டு பயணங்களை தள்ளி வையுங்கள்; முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள்," என பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வேண்டுகோள், நாடு தழுவிய விவாதத்தை ஏற்படுத்தியு... மேலும் பார்க்க

`சிங்கப்பூர் ஏன் உலகில் முன்னோடி நாடு?' | இயக்குநர் சீனு ராமசாமி

நம் தேசத்தில் நாம் 'லஞ்சம்' (Bribery) பற்றி அதிகம் பேசுகிறோம். லஞ்சம் என்பது ஒரு தனிமனிதனின் ஒழுக்கச் சிதைவு; அது திருட்டுத்தனமாக இருட்டில் கைமாறும் ஒரு அழுக்கு நோட்டைப் போன்றது. அதைச் சட்டத்தால் தண்ட... மேலும் பார்க்க

ஒரு வாக்கில் தோல்வி; பெரியகருப்பனின் புகார் - `ஆதாரம் இல்லை' தேர்தல் ஆணையத்தின் பதில் என்ன?

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு பதிவான தபால் வாக்கு, திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தொகுதிக்கு அனுப்பப்பட்டதால், அந்த வாக்கை மீட்டு மறு எண்ணிக்கை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட க... மேலும் பார்க்க