களம் மாறிய அரசியல்... தடம் புரளும் அதிமுக; EPS-க்கு 'செக்'; எம்.ஜி.ஆர் மாளிகையில...
மோடி தங்கத்தை தவிர்க்க சொல்வது ஏன்? தங்கத்துக்கும் அந்நிய செலாவணிக்கும் என்ன தொடர்பு? - முழு விவரம்!
"ஓராண்டுக்கு தங்கம் வாங்காதீர்கள்; வெளிநாட்டு பயணங்களை தள்ளி வையுங்கள்; முடிந்தவரை வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள்," என பிரதமர் நரேந்திர மோடி விடுத்துள்ள வேண்டுகோள், நாடு தழுவிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
டாலர்களை சேமித்து, இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாக்க வேண்டும் என்பதே இதன் முக்கிய நோக்கம். ஈரான் போர் பதற்றம், கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் இந்திய ரூபாய் மீதான அழுத்தம் அதிகரித்து வரும் சூழலில், பிரதமரின் இந்த வேண்டுகோள் புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால், தங்கம் வாங்குவதை தவிர்ப்பதற்கும், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்புக்கும் என்ன சம்பந்தம்? இந்த கேள்விக்கான பதில், சில எளிய கணக்குகளில் மறைந்துள்ளது.

இந்தியாவின் அந்நிய செலாவணி கணக்கு
டிரேடிங் எகனாமிக்ஸ் தரவுகளின்படி, இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் $690.69 பில்லியன் டாலர்களாக உள்ளது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மை அதிகரித்ததால், கடந்த பிப்ரவரியில் $728 பில்லியன் டாலர்களாக உயர்ந்த கையிருப்பு, ஏப்ரலில் மீண்டும் $691 பில்லியனாக சரிந்தது என ரிசர்வ் வங்கி தரவுகள் காட்டுகின்றன.
அதே சமயம், இந்தியாவின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (CAD) 2026-ஆம் ஆண்டில் $84.5 பில்லியன் டாலராக அதிகரிக்கக்கூடும் என சர்வதேச நாணய நிதியம் (IMF) கணித்துள்ளது. நடப்புக் கணக்குப் பற்றாக்குறை அதிகரிப்பது என்பது, நாட்டிற்குள் வரும் டாலர்களை விட, வெளியே செல்லும் டாலர்களின் அளவு அதிகம் என்பதைக் குறிக்கிறது.
இந்த பற்றாக்குறைக்கு தங்கம் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. 2026 நிதியாண்டில் மட்டும் இந்தியா சுமார் $72 பில்லியன் டாலர் மதிப்புள்ள தங்கத்தை இறக்குமதி செய்துள்ளது. இது முந்தைய ஆண்டை விட 24 சதவீதம் அதிகமாகும். உண்மையில், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய தங்கம் வாங்கும் நாடாகும். இதில் பெரும்பகுதி இறக்குமதி செய்யப்படுகிறது, மேலும் ஒவ்வொரு அவுன்ஸ் தங்கத்திற்கும் டாலர்களில்தான் பணம் செலுத்தப்படுகிறது.
இறக்குமதியின் முழு விவரம்:
FY26 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த இறக்குமதி மதிப்பு $775 பில்லியன் டாலர்கள். இதில் நான்கு முக்கிய பொருட்களின் இறக்குமதி செலவு மட்டும் $240 பில்லியனைத் தாண்டுகிறது.
கச்சா எண்ணெய்: $134.7 பில்லியன்
தங்கம்: $72 பில்லியன்
சமையல் எண்ணெய்: $19.5 பில்லியன்
உரங்கள்: $14.5 பில்லியன்
இந்த நான்கு பொருட்களும் இந்தியாவின் மொத்த இறக்குமதியில் 31.1 சதவீதத்தை வகிக்கின்றன. இதில் தங்கம் மட்டும் கிட்டத்தட்ட 10 சதவீதம். இதனால்தான், இந்த பொருட்களின் பயன்பாட்டைக் குறைக்குமாறு பிரதமர் மோடி மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
தங்கத்தின் தேவை குறைந்தால் என்ன நடக்கும்?
இந்தியர்கள் ஓராண்டுக்கு தங்கம் வாங்குவதை கணிசமாகக் குறைத்தால், தங்க இறக்குமதியில் 30-40% சரிவு ஏற்பட்டால் கூட, நாட்டின் அந்நிய செலாவணியில் $20-25 பில்லியன் டாலர்களை சேமிக்க முடியும். ஒருவேளை 50% சரிவு ஏற்பட்டால், சேமிப்பு $36 பில்லியன் டாலராக இருக்கும். இது, கணிக்கப்பட்டுள்ள நடப்புக் கணக்குப் பற்றாக்குறையில் கிட்டத்தட்ட பாதியாகும். எளிமையாகச் சொன்னால், தங்கம் வாங்காமல் இருப்பது, நாட்டின் டாலர் வெளியேற்றத்தை நேரடியாகக் குறைக்கும்.
கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய் $100 டாலருக்கு மேல் விற்கப்படும் சூழலில், இந்தியா தனது எண்ணெய் தேவையில் 88 சதவீதத்தை இறக்குமதி செய்யும் நிலையில், இந்த சேமிக்கப்படும் டாலர்கள் மிகவும் முக்கியமானவை.
போர்ச் சூழலில் இது ஏன் விவாதம் ஆகிறது?
அமெரிக்க, இஸ்ரேல் - ஈரான் மோதல் காரணமாக, முக்கிய எண்ணெய் வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தி வழியாக கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. இது போன்ற போர்ச் சூழலில், தங்கம் ஒரு "பாதுகாப்பான புகலிடமாக" கருதப்படுகிறது. மக்கள் தங்கத்தை வாங்க முற்படுவதால், அதன் விலை மற்றும் இறக்குமதி அதிகரிக்கிறது. இதனால் டாலர் வெளியேற்றமும் கூடுகிறது.
எனவே, இந்தியா ஒரே நேரத்தில் இரண்டு அழுத்தங்களை எதிர்கொள்கிறது: ஒன்று, அதிக விலையில் எண்ணெய் இறக்குமதி; மற்றொன்று, அதிக விலையில் தங்க இறக்குமதி. ஒவ்வொரு முறை தங்கம் வாங்கப்படும்போதும், இறக்குமதியாளர் சந்தையிலிருந்து டாலரை வாங்குகிறார். இது டாலருக்கான தேவையைக் கூட்டி, ரூபாயை மேலும் பலவீனப்படுத்துகிறது. மாறாக, தங்கம் வாங்குவதை நிறுத்தினால், டாலருக்கான தேவை குறைந்து, ரூபாய் மற்றும் ரிசர்வ் வங்கியின் கையிருப்பு மீதான அழுத்தம் குறையும். "இது ஒரு தற்காப்பு பொருளாதார உத்தி, பீதியடைய வேண்டிய அவசியமில்லை," என்கிறார்கள் சர்வதேச அரசியல் பார்வையாளர்கள்.

நிதி ஆலோசகர்கள், `நகைகள் அல்லது தங்கக் கட்டிகளாக வாங்குவதற்குப் பதிலாக, நிதி சார்ந்த தங்க முதலீட்டுத் திட்டங்களுக்கு மாறுமாறு பரிந்துரைக்கிறார்கள். SIP-கள் மற்றும் கோல்டு ETF-கள் (Gold ETFs) மூலம் முதலீடு செய்வதன் மூலம், பணத்தை இந்திய நிதி அமைப்புக்குள்ளேயே வைத்திருக்க முடியும். இது டாலர் வெளியேற்றத்தை ஏற்படுத்தாமல் மூலதனத்தை உற்பத்திக்கு பயன்படுத்த உதவும் என்கிறார்கள்.
மற்ற துறைகளில் தாக்கம்
பிரதமர் மோடியின் வேண்டுகோள் தங்கம் மட்டுமல்லாது, பொருளாதரத்தின் மற்ற முக்கிய துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. வெளிநாட்டுப் பயணங்களைக் குறைக்கும்படி கூறியதால், விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறை பங்குகள் மந்தமடைந்துள்ளன. இதேபோல், எரிபொருள் பயன்பாட்டைக் குறைக்கும்படி விடுத்த கோரிக்கை பெட்ரோலியத் துறை நிறுவனங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. சமையல் எண்ணெய் மற்றும் உரங்களின் இறக்குமதியைக் குறைக்கும் கொள்கை வழிகாட்டுதல்களால், அத்துறைகளிலும் வளர்ச்சி வேகம் குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
INPUT : NDTV












