கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம்: 'ஆட்சியரிடம் இருந்து புகார் வரவில்லை'- காவல்த...
கள்ளக்குறிச்சி எம்.எல்.ஏ விவகாரம்: 'ஆட்சியரிடம் இருந்து புகார் வரவில்லை'- காவல்துறை தரப்பு விளக்கம்!
கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ அருள் விக்னேஷ் மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாசமாக மெசெஜ் அனுப்பியதாக கூறப்படுகிற விவகாரம், தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விவகாரத்தில் ஆட்சியர் தரப்பில் எந்த ஒரு பதிலும் சொல்லப்படாத நிலையில் இச்சம்பவம் தொடர்பாகத் தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரித்து, 7 நாள்களுக்குள் நடவடிக்கை அறிக்கை அளிக்கத் தமிழக டிஜிபி-க்கு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் தொடர்பாக அரசு விளக்கம் அளிக்கும்படி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக ஊடகங்களில் வெளியான தகவல்களின் அடிப்படையில், அவர் மீது வழக்கு பதிவுசெய்யவும் டிஜிட்டல் ஆதாரங்களைப் பாதுகாக்கவும் உத்தரவிடக் கோரி சென்னையைச் சேர்ந்த அதிமுக வழக்கறிஞர் ஆர்.திரிசூலி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த விவகாரத்தில் ஆட்சியரின் புகாரை எதிர்பார்க்காமல் விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளதையும் அவர் தன் மனுவில் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன்பு இன்று (நவ. 23) விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, "வெறும் செய்திகளின் அடிப்படையில் மட்டும் காவல்துறைக்கு எப்படி உத்தரவிட முடியும்? ஆட்சியர் தரப்பில் ஏதேனும் புகார் அளிக்கப்பட்டுள்ளதா? அல்லது அதற்கான ஆதாரங்கள் உள்ளதா?" என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இதற்குக் காவல்துறை தரப்பில் இருந்து, ``மாவட்ட ஆட்சியர் இதுவரை யாரிடமும் புகார் அளிக்கவில்லை" என்று பதிலளிக்கப்பட்டிருக்கிறது.

ஆளுங்கட்சி எம்.எல்.ஏ- வை அனைத்து உயரதிகாரிகளும் பாதுகாப்பதாக மனுதாரர் தரப்பில் குற்றம்சாட்டப்பட்ட நிலையில், புகார் எதுவும் இல்லாததால் இந்த வழக்கை விசாரணைக்கு எடுக்கப் போவதில்லை என நீதிபதி தெரிவித்திருக்கிறார். இருப்பினும், குறுஞ்செய்தி அனுப்பப்பட்டது உண்மையெனில் அது துரதிஷ்டவசமானது எனக் குறிப்பிட்ட நீதிபதி, இது தொடர்பாக அரசு மற்றும் மாவட்ட ஆட்சியரின் கருத்தைக் கேட்டு விளக்கம் அளிக்குமாறு அரசுத் தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்திருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்... https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்...https://tinyurl.com/2b963ppb














