செய்திகள் :

கவின்: `ஒரு பெண்ணை விரும்பினாங்கிறதுக்காக எங்க பிள்ளைய இப்படிக் கொல்லணுமா?' - பெற்றோர் போராட்டம்!

post image

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தைச் சேர்ந்தவர் கவின் செல்வகணேஷ். இவர், நெல்லையைச் சேர்ந்த மாற்றுச் சமூகத்தைச் சார்ந்த பெண்ணை காதலித்ததால் கடந்த 2025-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அப்பெண்ணின் சகோதரர் சுர்ஜித் கைது செய்யப்பட்டார். பின்னர்,  அப்பெண்ணின் பெற்றோரான மணிமுத்தாறு பட்டாலியனில் பணிபுரிந்து வரும் காவல் சார்பு ஆய்வாளர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரி மற்றும் உறவினரான ஜெயபால் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கினை நெல்லை மாவட்ட சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரித்து நெல்லை 2-வது கூடுதல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர்.

கொலை செய்யப்பட்ட கவின்

இந்த வழக்கினை ரத்து செய்யக் கோரி சரவணன், கிருஷ்ணகுமாரி, ஜெயபால் ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.  இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நடந்து வந்த நிலையில்,  நீதிபதி விஜயகுமார் வழங்கிய தீர்ப்பில், ”முதல் குற்றவாளி, மனுதாரர் மற்றும் மூன்றாம் குற்றவாளி ஆகியோருக்குச் சொந்தமான செல்போன்கள் சம்பவம் நடந்தபோது ஒரே செல்போன் கோபுரத்துடன் இணைக்கப்பட்டிருந்தன என்ற அடிப்படையில் சந்திப்பு நடந்ததாக கூறப்பட்டுள்ளது.

செல்போன் கோபுரத் தகவல்கள் அக்கோபுரத்தின் செயல்பாட்டு வரம்பை மட்டுமே குறிக்கின்றன. செல்போனின் இருப்பிடத்தைக் குறிக்கவில்லை. இரு நபர்கள் ஒருவருக்கொருவர் உடனிருந்தனர் என்பதை செல்போன் கோபுர இருப்பிடத் தகவல்களால் உறுதியாக நிறுவ முடியாது. அவை அதிகபட்சமாக, ஒரு கூடுதல் ஆதாரமாக மட்டுமே இருக்கும். மனுதாரர்கள் தன் மகளைத்தான் எச்சரித்துள்ளனர். பள்ளிப் பருவத்தில் காதல் அல்லது உறவு முறையில் ஈடுபடும் மகனையோ அல்லது மகளையோ பெற்றோர் கண்டிப்பது இயல்பானதே. இறந்தவருடன் சரவணன் பேசியதாக போலீஸார் சுட்டிக்காட்டும் செல்போன் உரையாடல் சம்பவ நாளிலிருந்து 7 ஆண்டுகளுக்கு முன்பு நடந்துள்ளது.

கவினின் பெற்றோர்

இவ்விரண்டுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறுவது புலனாய்வு அமைப்பின் அனுமானம் மட்டுமே. வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் வழக்குப் பதியபோதுமான ஆதாரம் இருக்க வேண்டும். குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதால் மட்டுமே அவர் மீது வன்கொடுமை வழக்குப் பதிய முடியாது. கொலைச் செயலில் மனுதாரர்கள் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டு இல்லை. சம்பவ இடத்தில் இருந்ததாகவோ, குற்றச்சதி குறித்து அவருக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கிறது என்றோ குற்றம்சாட்டப்படவில்லை. அரசு தரப்பு சமர்ப்பித்த ஆவணங்கள் மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டுக்கு முரணாக உள்ளது.

எனவே, சாதி ரீதியான குறிப்பு ஏதுமில்லாதது, பொதுவெளியில் குற்றம் நிகழாதது மற்றும் அடிப்படையான குற்றச்செயலில் பங்கேற்பு இல்லாதது ஆகிய காரணங்களால் மனுதாரர்கள் சரவணன், கிருஷ்ணகுமாரியைப் பொறுத்தவரை அவர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது. ஜெயபால் வழக்கைப் பொறுத்தவரை இறந்த கவினை ஏற்கெனவே அவர் சந்தித்து காதலைக் கைவிடாவிட்டால் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அவர் எச்சரித்ததாகவும், அவருடன் 24 நிமிடங்களுக்கு மேல் செல்போனில் பேசியதாகவும் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. இதை பிற சாட்சிகளும் தெரிவித்துள்ளனர்.

கொலைக்குப் பிறகு சுர்ஜித்தின் ஆடைகளை அழித்தல், வாகன எண் பலகையை அகற்றுதல் மற்றும் செல்போனை சேதப்படுத்துதல் ஆகிய செயல்கள் மனுதாரருக்கு சொந்தமான குவாரியில் நடந்துள்ளது. அந்தப் பொருட்கள் குவாரியில் இருந்தே கைப்பற்றப்பட்டுள்ளன. இதிலிருந்து மனுதாரர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு முகாந்திரம் இருப்பது தெரிகிறது. எனவே, மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.” என உத்தரவிட்டார். உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அதிர்ச்சியளிப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "விசாரணைக்குப் பின்னர் ஆதாரங்கள் இல்லையென விடுதலை செய்வதுதான் நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரம். குற்ற விசாரணை தொடங்குவதற்கு முன்பே குற்ற அறிக்கையை 'ரத்து' செய்வது 'தவறான முன்மாதிரி' ஆகும்" என்றார். "தமிழ்நாடு அரசு இதை எதிர்த்து மேல்முறையீடு செய்திட ஆவண செய்ய வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் வலியுறுத்துகிறோம்," என்றும் தனது பதிவில் தெரிவித்துள்ளார். உயர் நீதிமன்றத்தின் உத்தரவு விசாரணையில் தாக்கம் செலுத்தலாம் என்று கூறும் மனித உரிமைச் செயற்பாட்டாளர் எவிடென்ஸ் கதிர், தமிழ்நாடு அரசு இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்த்ல் மேல்முறையீடு செய்ய வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.    

சுர்ஜித்

 இந்த நிலையில், வீட்டின் முன்பு,  உயிரிழந்த கவினின் தந்தை சந்திரசேகர், தாய் தமிழ்ச்செல்வி ஆகிய இருவரும் கவினின் புகைப்படத்தை வைத்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கவினின் பெற்றோரிடம் பேசினோம். ``இவ்வளவு நாள்களாக நாங்கள் போராடியது எதற்காக?  போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. அப்படியானால், எங்களுக்கான நீதி எங்கே? என் பிள்ளையை ஒரு பெண்ணை விரும்பியதற்காக இப்படிக் கொலை செய்ய வேண்டுமா? இது நியாயமா? ஒரு தாயாக என் மகனை எவ்வளவு கஷ்டப்பட்டு வளர்த்தேன் என்பது எங்களுக்குத்தான் தெரியும்.

இனி இது போன்ற சம்பவத்தில் மற்றொரு கவின் பலியாகக் கூடாது.  சி.பி.சி.ஐ.டி போலீஸார் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், மேலும் ஆதாரங்களை சேகரித்து விசாரணையைத் தொடர வாய்ப்பு வழங்க வேண்டும். விசாரணை முழுமையாக நடைபெறாமல் குற்றச்சாட்டுகள் ரத்து செய்யப்பட்டிருப்பது குறித்து எங்களுக்கு உரிய விளக்கம் வேண்டும். வழக்கில் தொடர்புடையவர்கள் காவல்துறை அதிகாரிகளாக இருப்பதால், அவர்களின் பங்கு குறித்தும் முழுமையான விசாரணை நடத்த வேண்டும். எங்களுக்கு யாருடனும் தனிப்பட்ட விரோதம் கிடையாது. நாங்கள் நீதி, நேர்மை என்றுதான் நம்புகிறோம். நீதியின் அடிப்படையில்தான் இதுவரை போராடி வருகிறோம்.

கவினின் தந்தை சந்திரசேகர்

நீதிமன்றத்தின் தீர்ப்பை நாங்கள் மதிக்கிறோம். அதே நேரத்தில், எங்களுக்குள்ள சந்தேகங்களுக்கும் கேள்விகளுக்கும் உரிய விளக்கம் கிடைக்க வேண்டும். தமிழக முதல்வர்  இந்த விவகாரத்தில் தலையிட்டு, அரசு தரப்பில் மேல்முறையீடு செய்து, வழக்கில் தேவையான மேலதிக விசாரணை நடைபெற நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு கவினை  இழந்துவிட்டோம். இனி மற்றொரு கவின் இது போன்ற சம்பவத்தில் உயிரிழக்கக் கூடாது. என் மகனுக்கு நடந்தது இதோடு முடிய வேண்டும். உண்மை வெளிவந்து உரிய நீதி கிடைக்க வேண்டும். உண்மை வெளிவந்து என் மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும். நீதி கிடைக்கும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்றனர். 

புதுச்சேரி: `குற்றத்துக்கு முன்பே சட்ட ஆலோசனை பெறும் ரௌடிகள்'... தலைவிரித்தாடும் `கொலை' கலாசாரம்!

குற்றவாளிகளுக்குத் துணை நிற்கும் சட்டப் பிரிவுகள்புதுச்சேரி மாநிலத்தை ஒட்டியிருக்கும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் பரப்பளவு தலா சுமார் 3,700 சதுர கிலோமீட்டர்கள். அதேசமயம் காரைக்கால், மாஹே, ஏனாம் ... மேலும் பார்க்க

புதுச்சேரி: `என் அம்மா போல இருக்கீங்க!’ -`லிஃப்ட்’ தந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த இளைஞர்

புதுச்சேரியைச் சேர்ந்த 50 வயது பெண் ஒருவர் கீரை விற்கும் வியாபாரம் செய்து வருகிறார். கீரைகளை மொத்தமாக வாங்கி கூடையில் சுமந்து, தினமும் நடந்து சென்று கீரைகளை விற்று பிழைப்பு நடத்துபவர் அவர். அதன்படி நே... மேலும் பார்க்க

பாபநாசம்: மணல் கடத்தலைத் தடுக்கச் சென்ற எஸ்.எஸ்.ஐ; டிராக்டர் மோதியதில் காயம்!

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள மெலட்டூர், கோடுகிழி பகுதியில் விதியை மீறி இரவு நேரத்தில் டிராக்டரில் மணல் கடத்தப்படுவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. மெலட்டூர் காவல் நிலையத்தில் சிறப்பு... மேலும் பார்க்க

குடியாத்தம்: யானை தந்தங்களைக் கடத்திய 3 பேர் கைது - வனத்துறையினர் தீவிர விசாரணை!

ஆந்திர மாநிலத்தில் இருந்து வேலூர் மாவட்டம், குடியாத்தம் வழியாக சட்டத்துக்குப் புறம்பாக யானை தந்தங்கள் கடத்தி வரப்படுவதாக குடியாத்தம் வனச்சரக அலுவலகத்துக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, வனத்துற... மேலும் பார்க்க

வயதை மறைத்து ஆன்லைனில் நட்பு: உண்மை தெரிந்ததும் பிளாக் செய்த சிறுமி... தேடி அமெரிக்கா சென்றவர் கைது!

மும்பையைச் சேர்ந்த பிரீத் பங்கஜ் ஜெயின்(31) என்பவருக்கு மைனர் பெண் ஒருவருடன் சமூக வலைத்தளம் மூலம் தொடர்பு ஏற்பட்டது. சமீபத்தில் அப்பெண்ணுக்கு பிரீத் பங்கஜ் ஜெயின் வயது குறித்த உண்மை தெரிய வந்தது. உடனே... மேலும் பார்க்க

லால்குடி: ஸ்டேஷனில் கத்தியைக் காட்டி போலீஸுக்குக் கொலை மிரட்டல் - இளைஞர் கைது!

திருச்சி மாவட்டம், லால்குடியை அடுத்த கல்லக்குடி அருகே உள்ள மால்வாய் சாலையில், கல்லக்குடி காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் சோபியா தலைமையிலான போலீஸார் இரவு வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது,... மேலும் பார்க்க