`தவெக அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல்; பல கோடி ரூபாய் Party Fundக்கு வாங்கப்பட்...
புதுச்சேரி: `குற்றத்துக்கு முன்பே சட்ட ஆலோசனை பெறும் ரௌடிகள்'... தலைவிரித்தாடும் `கொலை' கலாசாரம்!
குற்றவாளிகளுக்குத் துணை நிற்கும் சட்டப் பிரிவுகள்
புதுச்சேரி மாநிலத்தை ஒட்டியிருக்கும் விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் பரப்பளவு தலா சுமார் 3,700 சதுர கிலோமீட்டர்கள். அதேசமயம் காரைக்கால், மாஹே, ஏனாம் உள்ளிட்ட பிராந்தியங்களைச் சேர்த்தே புதுச்சேரியின் ஒட்டுமொத்த பரப்பளவு வெறும் 490 சதுர கிலோமீட்டர்கள்தான். ஆனால் கொலை, கொலை முயற்சி, அடிதடி உள்ளிட்ட குற்றச் சம்பவங்களில் தமிழ்நாட்டுக்கே சவால் விடுகிறது புதுச்சேரி.

ஒரு கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்குச் செல்லும் கைதி ஒருவர், மூன்றே மாதங்களில் ஜாமீனில் வெளியில் வந்து மற்றொரு கொலையைச் செய்கிறார் அல்லது எதிரணிகளால் இவரே கொலை செய்யப்படுகிறார். அந்த அளவுக்கு சட்டம் ஒழுங்கு சீர்கெட்டுக் கிடக்கிறது. அத்துடன் சட்டத்திலுள்ள சில பிரிவுகளும் அவர்கள் தப்புவதற்கு துணை நிற்கிறது.
பழிக்குப் பழி கொலைகள், பதற்றத்தில் மக்கள்
கோவிந்தசாலைப் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஆனந்த், கடந்த ஆகஸ்ட் 30-ஆம் தேதி இரவு தன் வீட்டு வாசலில் நின்றிருந்தார். அப்போது அவரை ஓட ஓட வெட்டிக் கொலை செய்த கும்பல், ஆளை மாற்றிக் கொலை செய்துவிட்டதாக போலீஸாரிடம் வாக்குமூலம் கொடுத்தனர். அந்தச் சம்பவம் பொதுமக்களுக்கான அச்சுறுத்தல் இல்லையா என்பதற்கு அரசுதான் பதிலளிக்க வேண்டும். நெல்லித்தோப்புத் தொகுதியைச் சேர்ந்த பா.ஜ.க பிரமுகரான விக்கி (எ) விக்னேஷ், கடந்த 2025 அக்டோபர் மாதம் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.

அந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறை சென்ற கருவடிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த முண்டக்கண்ணு ஆனந்த் என்பவர், மூன்றே மாதங்களில் ஜாமீனில் வெளியே வந்துவிட்டார். அவரை கடந்த செப்டம்பர் 18-ம் தேதி ஈ.சி.ஆர் சாலையில் வாகனத்தில் சென்று கொண்டிருந்தவரை, சுற்றி வளைத்துப் படுகொலை செய்து விக்கியின் கொலைக்குப் பழி தீர்த்திருக்கின்றனர் அவரது நண்பர்கள். பட்டப்பகலில் நடந்த அந்தக் கொலையைப் பார்த்த மக்கள், பதறியடித்துக் கொண்டு ஓடினார்கள்.
செவிலியர் படிப்பை முடித்துவிட்டு, தனியார் மருத்துவமனையில் வேலை செய்து வந்த வில்லியனூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது ஜெயஸ்ரீ, அதே பகுதியைச் சேர்ந்த கலைக்குமார் என்பவரைக் காதலித்து வந்திருக்கிறார். ஆனால் கலைக்குமார் ரௌடி என்பதும், அவர் மீது கொலை மற்றும் கஞ்சா வழக்குகள் இருப்பது தெரிய வந்ததால் விலக ஆரம்பித்தார் ஜெயஸ்ரீ.

அதில் கோபமடைந்த ரௌடி கலைக்குமார், கடந்த 26-ம் தேதி துள்ளத் துடிக்க ஜெயஸ்ரீயை தலையிலேயே வெட்டிக் கொலை செய்துவிட்டு தப்பினான். கொலை செய்தால், சிறிது பணம் இருந்தால் ஒரே ஆண்டுக்குள் ஜாமீனில் வெளியே வந்துவிடலாம் என்ற எண்ணம்தான், கலைக்குமாரை இன்னொரு கொலை செய்ய வைத்திருக்கிறது.
குற்றத்திற்கு முன்பே சட்ட ஆலோசனை பெறும் ரௌடிகள்
இதுகுறித்து நம்மிடம் பேசிய தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் புதுச்சேரி தலைவர் லோகு. அய்யப்பன், ``பொறுப்பற்றவர்கள் பொறுப்பான பதவிகளில் அமர்ந்திருப்பதுதான் அனைத்திற்கும் காரணம். காவல் நிலையங்களிலும் குற்றப் பிரிவு காவலர்கள், குற்றவாளிகளுடன் நேரடித் தொடர்பில் இருக்கிறார்கள்.
அவர்களின் நடவடிக்கைகளைக் கண்காணித்தாலே பாதி குற்றங்கள் குறையும். குற்றங்களைத் தடுப்பதற்கான எந்த முன்னெடுப்புகளையும் இந்த அரசு மேற்கொள்வதில்லை. அதனால் பலர் ஊரை காலி செய்து கொண்டு செல்கிறார்கள்" என்றார் காட்டமாக.

காவல்துறை தரப்பில் இதுகுறித்து விசாரித்தபோது, ``குற்றவாளிகளுக்கு சட்டங்களின் மீது பயமில்லாமல் போனதுதான் குற்றங்கள் அதிகரிப்பதற்குக் காரணம். போலீஸால் கைது செய்து சிறைக்கு மட்டும்தான் அனுப்ப முடியும். பல ரௌடிகள் குற்றம் செய்வதற்கு முன்பே சட்ட ஆலோசனைகளைப் பெறுகிறார்கள். அதனால்தான் கொலையே செய்தாலும் மூன்றே மாதங்களில் வெளியில் வந்துவிடுகிறார்கள்" என்று அதிர்ச்சி கொடுக்கின்றனர்.
புதுச்சேரி மக்களின் அச்சத்தைப் போக்கி, அவர்களின் இடப்பெயர்வை தடுக்க நடவடிக்கை எடுக்குமா மத்திய உள்துறை அமைச்சகம்?

















