Gold Rate: சற்று உயர்ந்த தங்கம் விலை; இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?
கார்த்திகை: வீட்டில் தீபம் ஏற்ற நல்ல நேரம் இதுதான்!
தமிழகத்தில் நிலாக்காலங்கள் எல்லாம் விழாக்காலங்கள் என்பார்கள். அதேபோன்று ஒவ்வொரு மாத பௌர்ணமியையும் ஒட்டி ஆலய உற்சவங்களும் வழிபாடுகளும் நடைபெறும். அந்த வகையில் கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தை ஒட்டி பௌர்ணமி வரும். இந்த நாள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இந்த நாளில் கார்த்திகை தீபம் என்று வீடு தோறும் விளக்கேற்றி வழிபடும் வழக்கம் தொன்று தொட்டு இருந்துவருகிறது. ஞானசம்பந்தர் இதை `விளக்கீடு’ என்று குறிப்பிடுகிறார். மேலும் இந்த நாளில் தான் ஈசன் அடிமுடி காண முடியாத அண்ணாமலையோனாகக் காட்சி கொடுத்தார் என்பதால் திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றப்படுவதும் வழக்கம்.
அண்ணாமலையார் அர்த்தநாரீஸ்வரராக எழுந்தருளியவுடன் மலையில் தீபம் ஏற்றப்படும். லட்சக்கணக்கான பக்தர்கள் சூழ்ந்து அண்ணாமலைக்கு `அரோகரா!' என்று முழங்க தீபக்காட்சியை தரிசனம் செய்வதே பரவசமானது. வாழ்வில் ஒருமுறையேனும் அனைவரும் சென்று தரிசனம் செய்யவேண்டிய நிகழ்வு அது. அதே நேரத்தில் அந்தத் தருணத்தில் நம் வீட்டிலும் தீபம் ஏற்ற வேண்டியது அவசியம். தீப ரூபத்தில் நாம் அந்தப் பரம்பொருளை நம் இல்லத்தில் நிறையச் செய்யவேண்டும் என்பதுதான் இந்த விழாவின் தாத்பர்யம்.

கார்த்திகை தீபம்... எப்படி விளக்கேற்ற வேண்டும்?
பொதுவாக நம் வீட்டில் பூஜை அறையில் மட்டுமே தீபம் ஏற்றுவோம். ஆனால் திருக்கார்த்திகை அன்று நம் வீட்டின் அனைத்து அறைகளிலும் தீபம் ஏற்றி வைக்கும் வழக்கம் உள்ளது. சந்திரன் முழு வலிமையோடு இருக்கும் இந்த நாளில் ஏற்றப்படும் இந்த தீப வெளிச்சம் நம்வீட்டின் ஒவ்வொரு அறையிலும் அமைதியையும் சுபிட்சத்தையும் கொடுக்கும். அடுத்த ஓராண்டு நம் இல்லம் சண்டை சச்சரவு இல்லாமல் ஆனந்தமாக வாழத் தேவையான நேர்மறை அதிர்வுகளைத் தங்க வைக்கும். இதை நம் முன்னோர்கள் கடைப்பிடித்து பலனை உணர்ந்து நமக்கும் சொல்லியிருக்கிறார்கள். எனவே வீடுதோறும் நிச்சயம் விளக்குகளை ஏற்றிவைப்போம். அதேநேரத்தில் பலர் மெழுகினால் ஆன தீபங்களை ஏற்றுகிறார்கள். அது நம் மரபில் வழக்கம் இல்லை. எனவே அதைத் தவிர்ப்பது நல்லது. மண் அகல்களே விசேஷம்.
மண் அகலில் திரியிட்டு நல்லெண்ணை விட்டு விளக்கேற்ற வேண்டும். இந்த நாளில் பரிகாரங்களுக்கு உகந்த இலுப்பை எண்ணெய் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. முதலில் பூஜை அறையில் உள்ள குத்துவிளக்கை ஏற்ற வேண்டும். அதற்கு பூக்கள் சமர்ப்பித்து தீபலட்சுமியே இதில் எழுந்தருள்வாயாக என்று மனதாரப் பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு அதற்கு தீபம் காட்டி வழிபட்டு ஒரு வெற்றிலை பாக்கு பழம் ஆகியன நிவேதனம் செய்ய வேண்டும். பிறகு அகல் விளக்குகளை அந்த தீபத்தில் இருந்து ஏற்றினால் விசேஷம். அல்லது ஒரு அகலை குத்துவிளக்கில் இருந்து ஏற்றிவிட்டு அந்த அகலைக்கொண்டு பிற விளக்குகளை ஏற்ற வேண்டும். விளக்குகளை கிழக்கு அல்லது வடக்கு நோக்கியே வைக்க வேண்டும். தெற்கு நோக்கி வைக்கக்கூடாது.

தீபம் ஏற்ற நல்ல நேரம்
தீபம் ஏற்ற விளக்குகளை தயாராக வைத்துக்கொள்ள வேண்டும். திருவண்ணாமலையில் தீபம் ஏற்றப்பட்டவுடன் அல்லது அருகில் இருக்கும் ஆலயத்தில் தீபம் ஏற்றப்பட்டவுடன் நாமும் நம் வீட்டில் தீபம் ஏற்றலாம். இன்று திருவண்ணாமலையில் தீபம் மாலை 6 மணிக்கு ஏற்றப்பட இருக்கிறது. அதை தரிசனம் செய்தபிறகு நம் வீட்டில்தீபம் ஏற்றலாம். 6-7 மணி வரை சூர்ய ஹோரை. 7- 8 மணி வரை சுக்ரஹோரை. இந்த இரண்டு மணி நேரமுமே மிகவும் நல்ல நேரமாகத் திகழ்கிறது. இந்த நேரத்தில் விளக்கேற்றி வழிபட்டால் இறையருள் பரிபூரணமாகக் கிடைப்பதோடு வீட்டில் செல்வ வளமும் சேரும்.
பொதுவாக ஒவ்வொரு பண்டிகைக்கும் ஒரு நிவேதனம் உண்டு. கார்த்திகைக்கு, கார்த்திகைப்பொரி எனப்படும் நெல்பொரி நிவேதனம் செய்வது விசேஷம். பொரி உருண்டை நிவேதனம் செய்தால் வேண்டும் வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.











