கொல்கத்தா: பாஜக தலைவர் சுவந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை; வங்கத்தை உலுக...
குமரி மாவட்டம்: `தாமரை'யை மூன்றாம் இடத்துக்கு தூக்கிப்போட்ட தவெக! - அதிருப்திக்கு காரணம் தான் என்ன?
கன்னியாகுமரி மாவட்டம் தேசிய கட்சிகளின் கோட்டை என்பது இந்த தேர்தலில் நொறுங்கிப்போயுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் காங்கிரஸ், பா.ஜ.க இடையேதான் நேரடி போட்டி நிலவும். காங்கிரஸ் கூட்டணிக்கு கிறிஸ்தவ, இஸ்லாமியர்களின் சிறுபான்மையினர் வாக்குகளையும், பா.ஜ.க பெரும்பாலான இந்து வாக்குகளையும் பெற்று வந்தன.
இதனால் காங்கிரஸ் கூட்டணிக்கும் பா.ஜ.க கூட்டணிக்கும் நேரடி மோதல் ஏற்படும். பெரும்பாலும் காங்கிரஸ் கூட்டணி வெல்வதும், பா.ஜ.க இரண்டாம் இடத்தில் வந்து கெத்தாக நிற்பதையும் பார்க்க முடியும்.
இந்த சட்டசபை தேர்தலிலும் அப்படித்தான் இருக்கும் என எதிர்பார்த்தார்கள். ஆனால், த.வெ.க அலை கன்னியாகுமரி மாவட்டத்தில் தாமரையை மூன்றாம் இடத்துக்கு தூக்கிப்போட்டுவிட்டது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்தம் உள்ள 6 தொகுதிகளில் கன்னியாகுமரி தொகுதியில் மட்டுமே அ.தி.மு.க போட்டியிட்டது.
நாகர்கோவில், பத்மநாபபுரம், குளச்சல், விளவங்கோடு ஆகிய தொகுதிகளில் பா.ஜ.க வேட்பாளர்கள் தாமரைச் சின்னத்திலும், கிள்ளியூர் தொகுதியில் த.மா.க வேட்பாளர் தாமரைச் சின்னத்திலும் போட்டியிட்டனர்.
நாகர்கோவிலில் சிட்டிங் எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி, விளவங்கோடு தொகுதியில் விஜயதரணி என முக்கிய வேட்பாளர்கள் களம் இறக்கப்பட்டனர்.
காங்கிரஸ் கூட்டணி வாக்குகளை த.வெ.க, நா.த.க கட்சிகள் பிரிந்தால் எளிதில் வென்றுவிடலாம் என கணக்குப்போட்டனர் தாமரை சின்னத்தில் போட்டியிட்ட வேட்பாளர்கள். ஆனால், தாமரைச் சின்னம் போட்டியிட்ட 5 தொகுதிகளிலுமே தி.மு.க, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர்கள் வென்றனர்.
தி.மு.க கூட்டணிக்கு கடும் நெருக்கடி கொடுத்து த.வெ.க வேட்பாளர்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்தனர். அதிலும், கிள்ளியூர், குளச்சல் தொகுதிகளில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு பீதி ஏற்படுத்தும் வகையில் த.வெ.க வாக்குகள் மிரட்டலை கொடுத்தன. தாமரைச் சின்னம் குமரியில் போட்டியிட்ட 5 தொகுதிகளிலுமே மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டது.

மத ரீதியிலான அரசியல் காங்கிரஸ் கூட்டணிக்கு கை கொடுத்துள்ளது. ஆனால், பா.ஜ.க-வை கைவிட்டுவிட்டது. அதற்கு தலைமையில் இருந்து வந்த ஸ்வீட் பாக்ஸால் ஏற்பட்ட பிரச்சினைதான் காரணம் என்கிறார்கள். கிள்ளியூர் தொகுதி தவிர மற்ற 4 தொகுதிகளிலும் பா.ஜ.க வேட்பாளர்களுக்கு சுமார் 20 ஸ்வீட் பாக்ஸ் வந்துள்ளதாம்.
அது சில இடங்களில் விநியோகிக்கப்பட்டுள்ளது. ஆனால், பல பகுதிகளில் நிர்வாகிகள் பணத்தை அமுக்கி விட்டார்களாம். தேர்தல் சமயத்தில் பா.ஜ.க ஆதரவளர்கள் தனது சமூக வலைத்தள பக்கங்களில் இதுகுறித்து வெளிப்படுத்தவும் செய்திருந்தனர்.
இது மாவட்டம் முழுவதும் பேசுபொருளானது. எனவே, பா.ஜ.க வலுவாக உள்ள இடங்களிலும் த.வெ.க-வுக்கு வாக்குகள் சென்றுள்ளன. தொண்டர்களையும், கொள்கைகளையும் நம்பாமல், பா.ஜ.க களமாடியதால் மக்களிடம் அதிருப்தி ஏற்பட்டதன் விளைவு மூன்றாம் இடத்துக்கு தூக்கி எறியப்பட்டதாக கூறுகின்றனர் அக்கட்சியினர்.














