ஈரோடு: முதல்வர் ஸ்டாலின் திமுக கூட்டணி வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் | Photo Album
கேரவனில் நடிகையை வன்கொடுமை செய்ய முயன்ற வழக்கு - கேரளா இயக்குநர் ரஞ்சித் சிறையில் அடைப்பு!
கேரள மாநிலம் கொச்சியில் சினிமா படப்பிடிப்பின்போது கேரவனில் வைத்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றதாக இளம் நடிகை ஒருவர் இயக்குநர் ரஞ்சித் மீது புகார் தெரிவித்திருந்தார். இதையடுத்து ரஞ்சித் மீது வன்கொடுமை, பாலியல் அத்துமீறல், சிறைவைத்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
தலைமறைவாக இருந்த ரஞ்சித்தை தொடுபுழாவில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கைதுசெய்த போலீஸார் அவரை கொச்சிக்கு அழைத்து சென்றனர். நேற்று அவர் நீதிபதியின் வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.
ரஞ்சித்தை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அவர் எர்ணாகுளம் சப் ஜெயிலில் அடைக்கப்பட்டார். ரஞ்சித்துக்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாகவும், நடிகை கேரவனில் இருந்து இறங்கி ஓடியதை நேரில் பார்த்த சாட்சிகள் உள்ளதாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் ரஞ்சித் தலைமறைவாக இருக்க உதவியவர்களும் வழக்கில் சேர்க்கப்படுவார்கள் என்றும் போலீஸார் தெரிவித்தனர். மேலும், நடிகையின் புகார், வாக்குமூலம் மற்றும் ஆதாரங்களின் அடிப்படையில் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கொச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காளிராஜ் மகேஷ்குமார் தெரிவித்தார்.

ரஞ்சித்தை போலீஸாரின் காவலில் எடுத்து விசாரணை நடத்துவதற்காக நீதிபதியிடம் மனு அளித்தனர். அதே சமயம் ரஞ்சித் தரப்பு ஜாமீன் கோரி மனு அளித்துள்ளது. இந்த இரண்டு மனுக்களையும் எர்ணாகுளம் முதலாவது வகுப்பு நீதித்துறை நடுவர் நீதிமன்றம் சனிக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது. சம்பவத்தன்று படப்பிடிப்பு தளத்தில் இருந்தவர்களிடம் வாக்குமூலம் பெறப்பட உள்ளது. படப்பிடிப்பு தளத்தில் உள்ள சி சி.டி.வி கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. அதே சமயம் இது தனக்கு எதிரான சதி எனவும், உண்மை வெல்லும் எனவும் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

பாலியல் புகாரைத் தொடர்ந்து பெப்கா எழுத்தாளர் சங்கத்தில் இருந்தும், இயக்குனர் சங்கத்தில் இருந்தும் ரஞ்சித் நீக்கப்பட்டுள்ளார். பாலேரி மாணிக்கம் சினிமா படப்பிடிப்பின்போது பாலியல் தொல்லை செய்ததாக ஒரு பெண் ரஞ்சித்துக்கு எதிராக இதற்கு முன்பு புகார் அளித்திருந்தார். மேலும், மற்றொரு பாலியல் வழக்கும் ரஞ்சித் மீது பதியப்பட்டிருந்தது. அந்த புகார்களை நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், ஆதாரங்கள் கிடைத்ததால்தான் ரஞ்சித் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும், கடும் மன உளைச்சலுக்கு ஆளான நடிகை, கவுன்சிலிங் பெற்ற பின்னரே புகார் அளித்தார் எனவும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.











