தேர்தல் 2026 : `குற்றப்பத்திரிக்கை' வியூகம் - மாநிலத் தேர்தல்களில் பாஜகவின் திட்...
`மருத்துவத்தால் முடியாததை ஜெயின் குரு தீர்த்துவைத்தார்' - மும்பை மேயர் கருத்து; டாக்டர்கள் அதிருப்தி
மும்பை மேயர் ரிது தாவ்டே மும்பை போரிவலி பகுதியில் நடந்த ஜெயின் மத விழா ஒன்றில் கலந்து கொண்டு பேசுகையில் அவர் தெரிவித்துள்ள கருத்துக்கள் டாக்டர்களை அதிருப்தியடைய செய்துள்ளது.
ரிது தாவ்டே இவ்விழாவில் பேசுகையில், ''கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் தீராத தொண்டை பிரச்னையால் அவதிப்பட்டு வந்தேன். டாக்டர்களிடம் சிகிச்சை எடுத்தும் பலனலிக்கவில்லை. இதையடுத்து ஜெயின் மதகுரு ஒருவரிடம் சென்றேன். அவரிடம் டாக்டர்களால் கூட எனது தொண்டை பிரச்னையை சரி செய்ய முடியவில்லை என்று சொன்னேன். அவர் எனக்காக பிரார்த்தனை செய்தார்.
அவரது ஆசிர்வாதத்தாலும் அதிசயத்தாலும் எனக்கு இப்போது பேசுவது போன்று பேச முடிந்தது. எனக்கு இருந்த தொண்டை பிரச்னை சரியாகிவிட்டது. இப்போது நீங்கள் கேட்கும் எனது சத்தம் முன்பு உள்ளது கிடையாது''என்று தெரிவித்தார்.

இதில் மகாராஷ்டிரா பா.ஜ.க அமைச்சர் மங்கள் பிரபாத் லோதா கலந்து கொண்டு பேசுகையில்,''ஜெயின் மதகுரு நம்ரமுனியைச் சந்தித்த பிறகு, ரிது தாவ்டே ஒரு மாநகராட்சி உறுப்பினராகவும், இறுதியில் மும்பையின் மேயராகவும் உயர்ந்தார்.
அவர் ஏற்கனவே ஒரு அற்புதத்தைப் பற்றிப் கூறினார். ஆனால், மற்றொரு அற்புதமும் நிகழ்ந்துள்ளது. நம்ரமுனியைச் சந்தித்த பிறகு, தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அமித் ஷா ஆகியோரின் ஆசியுடன் அவர் மேயராகப் பொறுப்பேற்றார்," என்று அதே நிகழ்வில் லோதா கூறினார். இதனை சிவசேனா (உத்தவ்) கிண்டல் செய்துள்ளது. அக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான சஞ்சய் ராவத், மேயரின் அதிசய குணமடைதலை, சமீபத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ஜோதிடர் அசோக் கராத் போன்ற நபர்களுடன் ஒப்பிட்டு, சில சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தார்.
மேயரின் கருத்து டாக்டர்கள் மத்தியிலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கிறது. இக்கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து அதற்கு ரிது தாவ்டே விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில்,'' நான் செவ்வாய்க்கிழமை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு வீடு திரும்புவதற்கு முன்பாகவே, இது தொடர்பான செய்திகள் வைரலாக பரவத் தொடங்கிவிட்டன. இது மிகவும் இழிவானதும் அருவருக்கத்தக்கதுமாகும். நீங்கள் யாரை யாருடன் தொடர்புபடுத்திப் பேசுகிறீர்கள்? இது குறித்து நான் உண்மையிலேயே வருத்தப்படுகிறேன்.
நான் எனது நம்பிக்கையை மட்டுமே வெளிப்படுத்தினேன்; மூடநம்பிக்கையை நான் ஊக்குவிக்கவில்லை. துரதிர்ஷ்டவசமாக, நான் ஆற்றிய ஆக்கபூர்வமான பணிகளைச் பற்றி எதுவும் சொல்லாமல் எனது கருத்துகள் திரித்துக்கூறப்பட்டும், ஆட்சேபிக்கத்தக்க வகையிலும் சித்தரிக்கப்பட்டுள்ளன. அற்ப ஆதாயங்களுக்காக இத்தகைய விமர்சனங்களில் ஈடுபடும் ராவத் உள்ளிட்டோர், தங்களை சுயபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். சில அரசியல் வாதிகள் எவ்விதக் கட்டுப்பாடும் இன்றிப் பேசுகின்றனர். ஆனால் மத்திய அமைப்புகள் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்போது மட்டும், திடீரென கண்ணியம் மற்றும் மரியாதை குறித்துப் பேசத் தொடங்குகின்றனர்," என்று கூறினார்.

















