மகாராஷ்டிரா மாநகராட்சி தேர்தலில் எதிர்கட்சிகளுக்கு பெரும் பின்னடைவு: பாஜக-வுக்கு...
கோட்டையை போராடி இழந்த உத்தவ்: ஷிண்டேயுடன் சேர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றிய பாஜக!
மும்பை உட்பட மகாராஷ்டிரா முழுவதும் உள்ள மாநகராட்சிகளுக்கு நேற்று தேர்தல் நடந்தது. இத்தேர்தலில் மும்பைதான் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும், ராஜ் தாக்கரே தலைமையிலான நவநிர்மாண் சேனாவும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இது தவிர பா.ஜ.கவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் கூட்டணி அமைத்திருந்தன. அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மும்பையில் தனித்து போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி பிரகாஷ் அம்பேத்கர் தலைமையிலான வஞ்சித் பகுஜன் அகாடியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது.
நேற்றைய தேர்தலில் வாக்காளர்களுக்கு கையில் மை வைக்க மார்கர் பேனா பயன்படுத்தப்பட்டதாகவும், அந்த பேனா மையை அழித்துவிட்டு திரும்ப திரும்ப கள்ள ஓட்டு போட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி இருந்தன.

தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில் மும்பை மாநகராட்சியை பா.ஜ.க கூட்டணி கைப்பற்றும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின் படியே தேர்தல் முடிவுகள் இருந்தது.
ஆரம்பத்தில் இருந்தே பா.ஜ.கவும், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவும் முன்னிலையில் இருந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவும் கடுமையான போட்டியை கொடுத்தது. பா.ஜ.கவுக்கு நிகரான இடங்களில் தொடர்ந்து முன்னிலை பெற்று வந்தது. ஆனால் இறுதியில் பா.ஜ.க 87 இடங்களிலும், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 73 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது. ஏக்நாத் தலைமையிலான சிவசேனா 29 இடங்களில் முன்னிலையில் இருந்தது.
இதன் மூலம் பா.ஜ.கவும், சிவசேனாவும்(ஷிண்டே) சேர்ந்து மும்பை மாநகராட்சியை கைப்பற்றி இருக்கிறது. மும்பை மாநகராட்சி 30 ஆண்டுகளுக்கு பிறகு சிவசேனாவின் கையை விட்டு சென்று இருக்கிறது. அதேசமயம் மும்பை மாநகராட்சியை பிடிக்க வேண்டும் என்ற பா.ஜ.கவின் கனவும் நிறைவேறி இருக்கிறது. அதற்கு ஏக்நாத் ஷிண்டே சகுனியாக இருந்து பா.ஜ.கவிற்கு உதவி செய்துள்ளார்.
இத்தேர்தலில் நவநிர்மாண் சேனா எதிர்பார்த்த இடங்களில் வெற்றி பெறவில்லை. 53 இடங்களில் போட்டியிட்ட நவநிர்மாண் சேனா வெறும் 6 இடங்களில் மட்டும் வெற்றி பெற்று இருந்தது. எப்படியும் மும்பையை தக்கவைத்துகொள்ள வேண்டும் என்பதற்காகத்தான் 20 ஆண்டுகளுக்கு பிறகு ராஜ் தாக்கரேயுடன் உத்தவ் தாக்கரே கூட்டணி வைத்தார். ஆனால் அந்த கூட்டணி எதிர்பார்த்த பலனை கொடுக்கவில்லை.
இதே போன்று காங்கிரஸ் கட்சியும் வெறும் 7 இடங்களில் மட்டும் முன்னிலையில் இருந்தது. இறுதியில் மும்பை மாநகராட்சியை பா.ஜ.க கூட்டணி வெற்றி பெற்றது. இதில் பா.ஜ.க 87 இடங்களிலும், சிவசேனா(ஷிண்டே) 29 இடங்களிலும் வெற்றி பெற்றது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 73 இடங்களிலும் வெற்றி பெற்றது.

ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் சதா சர்வான்கர் மகன் சமாதான் சர்வான்கர் இத்தேர்தலில் தோல்வி அடைந்தார். மராத்தியர்கள் அதிகம் இருக்கும் பகுதியில் உத்தவ் தாக்கரே அதிக அளவில் வெற்றி பெற்றுள்ளார்.
உத்தவ் தாக்கரேயுடன் கூட்டணி அமைத்தபோதிலும் ராஜ்தாக்கரேயிக்கு அது பெரிய அளவில் கைகொடுக்கவில்லை. இதே போன்று பா.ஜ.கவுடன் கூட்டணி சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா 90 இடங்களில் போட்டியிட்டது. ஆனால் 29 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் உத்தவ் தாக்கரேயிடம் ஏக்நாத் ஷிண்டே தோல்வி அடைந்தார். ஆனால் ஏக்நாத் ஷிண்டே தனது சொந்த ஊரான தானேயில் வெற்றி பெற்று தனது செல்வாக்கை தக்கவைத்துள்ளார். ராஜ் தாக்கரே எப்படியாவது இந்த தேர்தலில் செல்வாக்கை நிரூபித்துக்காட்ட முயன்றார். அதுவும் முடியாமல் போய்விட்டது.















