Doctor Vikatan: இரவில் நன்றாகத் தூங்கினாலும், பகலில் அடிக்கடி கொட்டாவி வருவது ஏன...
சமைக்காத தேங்காய்: இதயத்துக்கு நல்லதா; மூளைக்கு நல்லதா? நிபுணர் விளக்கம்
‘‘கடந்த 20 ஆண்டுகளில் ஒரு தவறான பிரசாரம் தேங்காயைப் பற்றி பரவிவிட்டது. தேங்காயை ஒரு வில்லனைப்போல சித்திரித்து விட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்’’ என்கிற சென்னையைச் சேர்ந்த நோய்க்குறியியல் மருத்துவர் அஜிதா பொற்கொடி, தேங்காயின் நற்பலன்களை மருத்துவரீதியான ஆய்வுகளுடன் விளக்குகிறார்.
தேங்காய் இதயத்துக்கு நல்லதா?

''பொதுவாக சாச்சுரேட்டடு ஃபேட் என்கிற நிறைவுற்ற கொழுப்பு உணவுகளைச் சாப்பிடுவது ஆரோக்கியத்துக்கு நல்லதல்ல. குறிப்பாக இதயத்துக்குக் கேடு என்று சொல்கிறோம். அது உண்மைதான். தேங்காயில் நிறைவுற்ற கொழுப்பு இருக்கிறது என்பதும் சரிதான். ஆனால், தேங்காயில் இருக்கும் இயற்கையான நிறைவுற்ற கொழுப்பு நம் ஆரோக்கியத்துக்கு நல்லது. கெடுதல் செய்யாது என்பது சமீபகாலமாக பல ஆராய்ச்சிகளில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
தேங்காய் மூளைக்கு நல்லதா?

தேங்காயின் மகத்துவத்தை விளக்க இன்னொரு விஷயத்தையும் சொல்லியாக வேண்டும். மூளையில் நம்முடைய அறிவாற்றல் திறன் (Cognitive function) இயல்பாகச் செயல்படும் வரையில்தான் நம்மால் ஒரு விஷயத்தைத் தெளிவாக யோசிக்கமுடியும். ஒரு வேலையைத் திறம்பட செய்யமுடியும். விழிப்புணர்வுடன் இருக்கமுடியும். அறிவாற்றல் திறன் குறையும்போது நினைவிழப்பு வரும் அபாயம் உண்டு. பேசுவதில் தடுமாற்றம் வரும். நடத்தை ரீதியான கோளாறுகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
இன்னும் கொஞ்சம் விளக்கமாகச் சொன்னால், கொழுப்பில் இருக்கும் மூலக்கூறுகளின் அடிப்படையில் அவற்றைக் கொழுப்பு அமிலங்கள் (Fatty acid) என்று சொல்கிறோம். இந்தக் கொழுப்பு அமிலங்களில் Long chain fatty acid, Medium chain fatty acid, Short chain fatty acid என மூன்று வகை இருக்கிறது. தேங்காயில் இருப்பது Medium chain fatty acid. இது செரிமானமாகி ரத்தத்தில் கலந்தவுடன் அங்கிருந்து கல்லீரலுக்குச் செல்கிறது. கல்லீரலிலிருந்து உடலின் மொத்தப் பகுதிகளுக்கும் ரத்தத்தின் வழியே பயணிக்கிறது. தேங்காயிலிருக்கும் கொழுப்பு அமிலங்கள் செரிமானமாகி மூளைக்குச் சென்றுசேரும்போது கீட்டோன்ஸ் (Ketones) என்கிற வேதிப்பொருளாக மாறுகிறது. இந்த கீட்டோன்கள் மூளை செயல்பட உதவும் எரிபொருள்போல நமக்கு உதவி செய்கின்றன. தேங்காயில் கீட்டோன் நிறைய இருக்கிறது.
கீட்டோனும் மூளையும்...

இதில் இன்னொரு விஷயத்தையும் நுட்பமாகப் பார்க்கலாம். உடலின், மூளையின் ஆற்றலுக்கு குளுக்கோஸ் என்கிற சர்க்கரைச்சத்து தேவை. அளவுக்கு அதிகமான குளுக்கோஸ் மூளையின் செல்களை சேதப்படுத்தும். ஆனால், கீட்டோன்கள் அதிகமானாலும் செல்களை சேதப்படுத்துவதில்லை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் மூளையை கீட்டோன்கள் பாதுகாக்கின்றன என்று மேலை நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட பல ஆராய்ச்சிகளில் கண்டுபிடித்திருக்கிறார்கள்.
போஸ்ட்பயாடிக் தெரியுமா?

தேங்காயில் இதுபோல் பல நல்ல அம்சங்கள் இருக்கின்றன. காய்கறிகள், பழங்களிடமிருந்து ப்ரீபயாட்டிக் என்கிற ஆரோக்கியம் தரும் நல்ல நார்ச்சத்து கிடைக்கிறது. இதே ஆரோக்கியமான ப்ரீபயாட்டிக்தான் தேங்காயிலிருந்தும் நமக்குக் கிடைக்கிறது. நீரில் கரையும் இந்த நார்ச்சத்து நம் வயிற்றில் இருக்கும் புரோபயாடிக் என்கிற நல்ல கிருமிகளுக்கு உணவாக அமைகிறது. இதனால் போஸ்ட்பயாடிக் என்கிற பொருள் நம் குடலில் உருவாகும். இந்த போஸ்ட்பயாட்டிக் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்பதையும் ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
தேங்காயைப் பயன்படுத்தும் முறைதான் பிரச்னையே...

எனவே, தேங்காய் உள்பட நம் பாரம்பர்ய உணவுகளினால் எந்த ஆபத்தும் இல்லை. அதனைப் பயன்படுத்தும் முறையினால் மட்டுமே அது தவறாக மாறும் வாய்ப்பு உண்டு. உதாரணத்துக்குத் தேங்காயைப் பிழிந்து பால் மட்டும் எடுத்துக் கொண்டு சக்கையைத் தூக்கிப்போடும்போது அந்த நார்ச்சத்தை இழக்கிறோம். அப்படியில்லாமல் தேங்காயை முழுமையாக முடிந்தவரை பயன்படுத்துவது நல்லது. தேங்காயை அரைத்து அப்படியே ஊற்றுவதும் நல்லதே. இதனால் மூளைக்கும் நல்லது. வயிற்றுக்கும் நல்லது. வயிற்றுப் புண்களுக்கும் அருமருந்தாக இருக்கும்.
இதயத்தில் படிந்துவிடும் என்பது ஆதாரமற்ற தகவல்களே.
தேங்காயோ, அதன் எண்ணெயோ செரிக்காமல் போய்விடும், இதயத்தில் சென்று படிந்துவிடும் என்றெல்லாம் சொல்வது ஆதார மற்ற தகவல்களே. ஆனால், பொதுவான எச்சரிக்கை என்னவென்றால் எந்த எண்ணெயையும் அதிகம் சூடுபடுத்தும்போது அந்த எண்ணெயின் இயற்கையான குணம் மாறி கெட்டதாகிவிடும். அப்படி தேங்காய் எண்ணெயையும் அதிகம் சூடுபடுத்தக் கூடாது. நம்முடைய பாரம்பர்ய உணவுப்பொருள்களில் ஒன்றாக இருக்கும் தேங்காயை சாப்பிடலாம். எந்த ஆபத்தும் இல்லை. தேங்காயைப்போலவே முந்திரியும் கெடுதல் என்று சொல்லி வந்தார்கள். இப்போது மக்னீசியம் பற்றாக்குறையால் அவதிப்பட்ட பிறகு முந்திரியைச் சேர்த்துக்கொள்ளுங்கள் என்கிறார்கள்.
வெளிநாட்டு உணவுகள்தான் பிரச்னையா..?
மருத்துவத்திலும், உணவுகளிலும் இதுபோல் பல தவறான நம்பிக்கைகள் பரப்பப்படுகின்றன. அதை மாற்ற வேண்டும். காலம்காலமாக நம் பாரம்பர்ய உணவுகளுக்குப் பழக்கப்பட்டு வந்த நம் உடலுக்கு வெளிநாட்டு உணவுகளைத் திணிப்பதுதான் நோய்களுக்குக் காரணமாக உள்ளது. தேங்காயாலோ, முந்திரியாலோ பாதிப்பு வராது’’ என்கிறார் டாக்டர் அஜிதா பொற்கொடி.














