கொல்கத்தா: பாஜக தலைவர் சுவந்து அதிகாரியின் உதவியாளர் சுட்டுக்கொலை; வங்கத்தை உலுக...
சரிந்த வாக்கு வங்கி; திருமாவின் விசிக சொதப்பியது எங்கே?!
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் தி.மு.க-வுக்கு மட்டுமல்லாது தி.மு.க கூட்டணியில் உள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. இக்கூட்டணியில் 8 தொகுதிகளில் களம் கண்ட வி.சி.க, தற்போது காட்டுமன்னார் கோயில் தொகுதியில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. மற்ற 7 தொகுதிகளிலும் அக்கட்சி பின்னடைவைச் சந்தித்துள்ளது, அரசியல் வட்டாரத்தில் விவாதங்களைக் கிளப்பியுள்ளது.
2021 சட்டமன்றத் தேர்தலில் 4 எம்.எல்.ஏ-களுடன் சட்டமன்றத்தில் நுழைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி, இந்தத் தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது.

இந்தத் தேர்தலில் விசிக தொண்டர்களிடையே ஒருவித சுணக்கம் நிலவியதை மறுக்க முடியாது. இதை விசிக தலைவர் திருமாவளவனே குறிப்பிட்டிருந்தார். குறிப்பாக, தி.மு.க உடனான தொகுதிப் பங்கீட்டின்போது ஏற்பட்ட அதிருப்தி, தேர்தல் களத்தில் கூட்டணிக் கட்சிகளுடனான ஒருங்கிணைப்பு குறைபாடு போன்றவை பின்னடைவுக்கு முக்கியக் காரணமாகக் கருதப்படுகிறது. களப்பணியில் வி.சி.க தொண்டர்களின் முழுமையான ஒத்துழைப்பு இல்லாதது பல தொகுதிகளில் எதிரொலித்துள்ளது.
இந்தத் தேர்தலின் முக்கியத் திருப்புமுனையாகப் பார்க்கப்பட்டது வி.சி.க தலைவர் திருமாவளவன் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்புதான். ஆரம்பத்தில் அவர் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் வெளியான நிலையில், பின்னர் திடீரென அந்த முடிவில் இருந்து அவர் பின்வாங்கினார். இந்த அணுகுமுறை தொண்டர்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் ஒருவித குழப்பத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது. மேலும், தேர்தல் தொடங்கியதிலிருந்தே விசிக தலைவர் திருமாவளவனின் நடவடிக்கையில் சிறு தடுமாற்றங்கள் இருந்ததாக மூத்த ஊடகவியலாளர்கள் கருதுகின்றனர்.
.jpeg)
சமீபத்திய பேட்டி ஒன்றில் திருமாவளவன், "எண்ணிக்கையை விட கொள்கை வெற்றிகளே முக்கியம்" என்று குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், 8 இடங்களில் போட்டியிட்டு 1 இடத்தில் மட்டுமே முன்னிலை என்பது கட்சியின் எதிர்கால சக்தியைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. காட்டுமன்னார் கோயில் தொகுதியில் மட்டும் விசிக முன்னிலை வகிப்பது அக்கட்சிக்கு ஒரு ஆறுதல் பரிசாக அமைந்துள்ளது. உட்கட்சி, கூட்டணி சலசலப்புகளைக் கடந்து, புது வரவான தவெக-வின் தாக்கமும் இந்த தேர்தலில் எதிரொலித்திருப்பது, விசிக-வுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது என்று சொல்லலாம்.













