செய்திகள் :

சேலம் மரபுச்சந்தை: 'நம் தலைமுறைக்கு மரபு சார்ந்த அறிவைக் கடத்தும் முயற்சியே இது'- நிறுவனர் அரவிந்தன்

post image

தற்போது விவசாயமானது செயற்கை ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் மரபணு மாற்றம் செய்யப்பட்ட விதைகள் என நவீன காலத்திற்கேற்ப மாறிவரும் சூழலில், அதே அளவிற்கு இயற்கை விவசாயம் சார்ந்த ஆர்வத்தையும் மக்களிடம் காணமுடிகிறது. ஒரு காலத்தில் நாம் உண்ணும் உணவு முறையே நமக்கு மருந்தாகவும் இருந்தது. ஆனால், நவீன முறை விவசாயம் மற்றும் செயற்கை உரப்பயன்பாடு, பூச்சிக்கொல்லி போன்றவற்றின் பயன்பாடு காரணமாக 'மருந்தே உணவு' என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டிருக்கிறோம். இந்நிலையில் சேலம் மாவட்டத்தில் நம் மரபார்ந்த உணவின் முக்கியத்துவத்தை உணர்ந்து 'சேலம் மரபுச்சந்தை' ஒன்று இயங்கி வருவதை அறிந்து அங்கு சென்று பார்வையிட்டோம்.

இது குறித்து சேலம் மரபுச்சந்தையின் நிறுவனரான ப.அரவிந்தனிடம் பேசும் போது,

"முதன்முதலில் 2024 ஆம் ஆண்டு என்னுடைய வீட்டில் 'மரபு விதை பகிர்வு கூடல்-1 ' நிகழ்வு ஒன்றை நடத்தினோம். இந்நிகழ்வு சேலம் மரபுச்சந்தைக்கான அடிக்கல்லாக அமைந்தது. அதன் பின்பு மரபு விதைகளை வீட்டுத்தோட்டம் மற்றும் மாடித்தோட்ட ஆர்வலர்களுக்குப் பகிர்ந்து அதன் மூலம் பல்கி பெருகி வந்த மரபு விதைகளை இயற்கை விவசாயிகளுக்கு இலவசமாக மற்றும் பரிமாற்ற முறையில் வழங்கி நஞ்சற்ற மரபுக் காய்கறிகளாக விளைவித்து அதை இயற்கை நுகர்வோருக்கு கொண்டு சேர்க்கும் நோக்கில், சேலம் மரபுச் சந்தையை 16.02.2025 ல் தொடங்கினோம். சேலம் மரபுச்சந்தை ஓராண்டு நிறைவையொட்டி 500-க்கும் மேற்பட்ட மரபுக்காய்கறிகள், பழங்கள், மூலிகைகள், கீரைகள், மரபு நெல், சிறுதானியங்கள், நாட்டு மரங்கள் மற்றும் பாரம்பர்ய கிழங்கு வகைகள் என மாபெரும் காய்கறி மற்றும் கிழங்கு திருவிழாவாக 'சேலம் மரபுத்திருவிழாவினை'க் கொண்டாடினோம்.

சேலம் மரபுச்சந்தை ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 07:00 மணிக்கு துவங்கி காலை 12:00 மணி வரை சேலம் சொர்ணபுரி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, ராதை மருத்துவமனை எதிரில், ஸ்வர்ணபுரி-636004 என்ற முகவரியில் தொடர்ந்து ஓராண்டாக நடைபெற்று வருகிறது. நம் தலைமுறைகளுக்கு மரபு ரக விதைகளையும், இந்த மரபு உணவு சார்ந்த அறிவையும் கொண்டு சேர்க்கும் நோக்கில் (25.01.26 ) அன்று 'சேலம் மரபுத் திருவிழா-2026' ஆனது சேலம் மரபுச்சந்தை இயற்கை உழவர்களால் இரண்டாம் ஆண்டாக நடத்தப்பட்டது" என அரவிந்தன் கூறினார்.

சேலம் மரபுச்சந்தையின் துணை ஒருங்கிணைப்பாளரான இராஜராம் நம்மிடம் பேசும்போது,

"இந்த மரபுச் சந்தையிலுள்ள சுமார் 19 விவசாயிகள் இயற்கை விவசாயத்திற்கான அங்ககச் சான்று மற்றும் PGS அங்ககச் சான்று பெற்ற இயற்கை விவசாயிகள். மேலும் சேலம் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தகுதியான இயற்கை விவசாயிகளின் நிலத்தில் நேரடி கள ஆய்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டவர்கள்.

முழுக்க முழுக்க இயற்கை முறையிலான விவசாயம் மற்றும் பாரம்பர்ய மரபு ரகங்களை மட்டுமே பயன்படுத்தி 100% இயற்கையான மரபுக் காய்கறிகளை வழங்கி வருகிறோம். மக்களின் அன்றாட தேவைக்கான இயற்கை காய்கறிகள், கிழங்குகள், பாரம்பர்ய அரிசி வகைகள், சிறுதானியங்கள் மற்றும் இயற்கை விவசாய விளைப்பொருள்கள் வழி மதிப்புக் கூட்டு பொருள்களும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இயற்கை உழவர்கள் நேரடியாக இடைத்தரகர் இன்றி தங்கள் விளைப்பொருள்களை நுகர்வோருக்கு விற்கும் தளமாக இந்த சேலம் மரபுச் சந்தை உள்ளது. ஒவ்வொரு விவசாயியும் பாரம்பர்ய விவசாயம் முதல் நவீன முறையிலான இயற்கை விவசாயம் வரை தேவையான பயிற்சிகள் பெறுகின்றனர்" என்கிறார் இராஜாராம்.

மரபுச்சந்தையின் "டர்ன் ஓவர்" பற்றி மற்ற ஒருங்கிணைப்பாளர்களிடம் கேட்ட போது,

"ஆரம்பத்தில் முதல் இரண்டு வாரங்கள் சுமார் ₹70,000-மாக இருந்தது. பின்னர் ஒரு மாதத்திற்கு பிறகு சுமார் ₹1,50,000 ரூபாயாக தொடர்கிறது. எங்கள் மரபுச் சந்தையின் நிறுவனர் அரவிந்தன் சேலத்தில் அழிவின் விளிம்பிலுள்ள 23 மரபு விதைகளை மீட்டெடுத்து அதை விதைப்பகிர்வு வாயிலாக பரவலாக்கம் செய்து வருகிறார். அதைப்போல மற்றொரு ஒருங்கிணைப்பாளரான கோகுல் 500ற்கும் மேற்பட்ட காய்கறி விதைகளை இனத்தூய்மையோடு உற்பத்தி செய்து விற்பனை வாயிலாக பரவலாக்கம் செய்து வருகிறார். எங்கள் மரபுச்சந்தையானது மரபு விதை முதல் விளைப்பொருள் விற்பனை மற்றும் மதிப்புக் கூட்டல் என மூன்று பகுதிகளாக பிரிக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர்களால் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. வேளாண் கல்லூரி மாணவர்கள், பள்ளிக்குழந்தைகள் மரபுக் காய்கறிகள் குறித்தும் அதனை எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது குறித்தும் கேட்கின்றனர் அது மகிழ்ச்சியாக இருக்கிறது." என ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து சந்தையின் வாடிக்கையாளர்களிடம் பேசிய போது,

" சாதாரண சந்தையைக் காட்டிலும் சேலம் மரபுச்சந்தையானது எங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கிறது. எங்களுடைய உடல் புத்துணர்ச்சியாக இருக்கிறது. முன்பைக் காட்டிலும் உடல் ஆரோக்கியம் கூடுவதை உணரமுடிகிறது." என்கின்றனர்.

சேலம் மரபு சந்தைகளுக்கான விதிமுறைகள் என்னென்ன?

``இந்த மரபுச் சந்தையில் இணைய விரும்பும் இயற்கை விவசாயிக்கு, அரசின் இயற்கை விவசாயத்திற்கான அங்ககச் சான்று அவசியம். செயற்கை உரங்கள், பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் மற்றும் மரபணு மாற்றப்பட்ட மற்றும் கலப்பு ரகத்தை பயிரிடுபவராக இருத்தல் கூடாது. கட்டாயமாக அவர் ஆத்மார்த்மாகச் செயல்படும் இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் வழியில் இயற்கை உழவராக இருக்க வேண்டும். இடைத்தரகராக இருக்கக் கூடாது. மதிப்புக்கூட்டல் பொருள்களுக்கான மூலதனப பொருள்கள் முழுவதும் சேலம் மரபுச் சந்தை விவசாயிகளிடமே வாங்குதல் வேண்டும். விதிமுறைகளை மீறும் பட்சத்தில் ஒருங்கிணைப்புக்குழு நடவடிக்கைகள் எடுக்கும் என்ற கட்டுப்பாட்டிற்குட்பட்ட ஒருங்கிணைந்த மரபுச் சந்தையாகும்.

உழவர் சந்தை மற்றும் இதர வார சந்தைகளைக் காட்டிலும் மரபு வகை விளைப்பொருள்களுக்கான சந்தையாக இது இருப்பதால், மக்களிடையே போதிய வரவேற்பு எங்களுக்கும் கிடைத்துள்ளது. விலை மற்ற விளைப்பொருள்களைக் காட்டிலும் சற்று கூடுதலாக இருந்தாலும் மக்களிடையே இவை மரபு விவசாய விளைப்பொருள்கள் என்பதினால், விலையினாலோ அல்லது மற்ற சந்தைகளினாலோ இந்தச் சந்தையானது பாதிக்கப்படுவதில்லை. இது நம் பாரம்பர்யம் சார்ந்த மரபார்ந்த உணவுமுறைகளை நம் அடுத்த தலைமுறைக்கு கடத்தும் முயற்சியாகும். இப்போது சந்தை செயல்படும் பள்ளி வளாகத்தில் நிரந்தரமாக சந்தை செயல்பட அரசு ஏற்பாடு செய்ய மாவட்ட நிர்வாகமும் உதவ வேண்டும்" என்று கோரிக்கை வைக்கிறார்கள் சேலம் மரபுச்சந்தை ஒருங்கிணைப்பாளர்கள்.