29: 'இந்த விஷயத்தில கமல் சார் தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்!'- லோகேஷ் கனகராஜ்
நாளை நரசிம்ம ஜயந்தி பூஜை செய்ய ஏற்ற நேரம் எது? வழிபடுவது எப்படி?
பகவான் விஷ்ணு எடுத்த அவதாரங்களில் பிரதானமானது நரசிம்ம அவதாரம். ஆபத்துக்காலங்களில் நரசிம்மரை வழிபட்டால் நம் பிரச்னைகள் தீரும் என்பது நம்பிக்கை. காரணம் கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வந்து காத்து அருளியவர் என்பதால் நரசிம்மரிடம் நாளை என்பதே இல்லை என்பார்கள். தென் இந்தியாவில் நரசிம்மத் தலங்கள் ஏராளம் உள்ளன. பல மலைகளில் நரசிம்மருக்கு ஆலயங்கள் அமைந்திருந்தன என்பார்கள். அப்படிப்பட்ட நரசிம்மரை வழிபட மிகவும் உகந்த தினம் நரசிம்ம ஜயந்தி. வைகாஷ மாதம் (வைகாசி அல்ல) சதுர்த்தசி திதி அன்று நரசிம்மர் ஆவிர்பவித்தார். இந்த ஆண்டு நரச்ம்ம ஜயந்தி நாளை (30.4.26) அன்று வருகிறது.

பிரகலாதன் பிறப்பிலேயே விஷ்ணு பக்தியோடு தோன்றினான். ஆனால் அவன் தந்தையான இரண்ய கசுபுவோ, 'தானே மூவுலகுக்கும் கடவுள்' என்று சொல்லிவந்தான். அவனுக்கு பயந்து தேவர்களும் வாய்மூடி இருந்தனர். பிரகலாதன், 'நாராயணனே கடவுள்' என்று சொல்லவும் கோபம் கொண்ட இரண்ய கசுபு அவனுக்குப் பல்வேறு துன்பங்களைக் கொடுத்தார். ஆனால் அவற்றில் இருந்தெல்லாம் பகவான் விஷ்ணு அவனைக் காத்தார். ஒரு கட்டத்தில் தந்தைக்கும் மகனுக்கும் கருத்து யுத்தம் ஏற்பட்டது. ‘பகவான் எங்கிருக்கிறான்?’ என்று கேட்டான் இரண்ய கசுபு. பிரகலாதனோ ‘இறைவன் இந்தப் பிரபஞ்ச வடிவானவன். தூணிலும் துரும்பிலும் நிறைந்திருப்பவன்’ என்று பதில் சொன்னான்.
ஏதேனும் ஒரு தூணை அல்லது ஒரு துகளைக் காட்டி இதில் பகவான் விஷ்ணு இருக்கிறானா என்று அசுரன் கேட்டால் அதற்கு பிரகலாதனும் ‘ஆம்’ என்று சொல்லிவிடுவான் என்பதை பகவான் அறிவார். அதனால் இந்த உலகின் அனைத்துத் துகள்களிலும் அந்தக் கணத்தில் பிரசன்னமாகியிருந்தார் என்கின்றன ஞான நூல்கள்.
இரண்யனோ ஒரு தூணைக்காட்டி,‘இந்தத் தூணில் உன் ஹரி இருக்கிறானா...’ என்று கேட்டான். பிரகலாதனும் ‘ஆம்’ என்று சொன்னான். அந்தத் தூண் அரண்மனையில் தான் அறியக் கட்டிய தூண் என்பதால் அதில் அந்த ஹரி இருக்க வாய்ப்பில்லை என்று நினைத்து இரண்ய கசிபு அந்தத் தூணை உடைத்தான். அப்போது அண்ட சராசரங்களும் கிடுகிடுங்க பகவான் விஷ்ணு நரசிம்மமாய் வெளிப்பட்டு அவனை வதம் செய்தார். இவ்வாறு பக்தனின் வாக்கைப் பரிபாலனம் செய்வதற்காக பகவான் விஷ்ணு புரிந்த அவதாரம் நரசிம்ம அவதாரம். எனவே நரசிம்மரை எண்ணி வணங்கினால் அந்தக் கணத்தில் துன்பங்கள் விலகும் என்பது நம்பிக்கை.
ஒரு சிலருக்கு மன பயம் அதிகம் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் நரசிம்மரை வழிபடுவது சிறப்பு. சுவாதி நட்சத்திர நாளில் ஆலயத்துக்குச் சென்று நரசிம்மரை தரிசித்துவர மன பயம் முற்றிலும் விலகும். நரசிம்மருக்கு சனிக்கிழமைகளில் பானகம் நிவேதனம் செய்து வழிபட்டால் கடன் பிரச்னைகள் தீரும். செந்நிற மலர்கள் சாத்தி வழிபட்டால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியம் மேம்படும் என்பார்கள் பக்தர்கள். அதிலும் நரசிம்ம ஜயந்தி அன்று வழிபட்டால் விரைவில் வேண்டுதல்கள் நிறைவேறும் என்பார்கள்.
நாளை சதுர்த்தசி திதி மாலை 9.50 வரை இருக்கிறது. என்றாலும் நரசிம்மர் அவதாரம் செய்தது சந்தியா காலத்தில் என்பதால் மாலை 6 மணிக்கு மேல் 8 மணிக்குள் பூஜை செய்வது விசேஷம். இந்த நாளின் காலையில் எழுந்து நீராடி விரதம் இருந்து நரசிம்மரை வழிபடுவது மிகவும் விசேஷம். முடியாதவர்கள் நீராகாரமாக எடுத்துக்கொள்ளலாம். மாலையில் நரசிம்மர் படம் அல்லது விக்ரகத்துக்கு சந்தனம் குங்குமம் இட்டும் பூக்கள் சாத்தி பூஜை செய்யலாம்.
நரசிம்மரை ஸ்தோத்தரிக்கும் கராவலம்பம் அல்லது அஷ்டோத்திரங்கள் தெரிந்தால் சொல்லலாம். அல்லது கீழ்க்கண்ட மந்திரத்தை 11 முறை சொன்னாலே நரசிம்மரின் அருள் கட்டாயம் கிடைக்கும்.

நரசிம்ம ஸ்துதி
உக்ரம் வீரம் மஹாவிஷ்ணும்
ஜ்வலந்தம் ஸர்வதோமுகம்
ந்ருஸிம்ஹம் பீஷணம் தம் பத்ரம்
ம்ருத்யும் ம்ருத்யும் நமாம்யஹம்
நாளை வியாழக்கிழமை. இந்த நாளில் செய்யும் வழிபாடுகள் நமக்கு குருவருளைப் பெற்றுத்தரும். லட்சுமி கடாட்சம் நிறையும். கடன் பிரச்னைகளில் இருந்து தீர்வு கிடைக்கும். எதிரிகளின் தொல்லை முற்றிலும் நீங்கும். கல்வியில் மேம்பாடு அடைய விரும்பும் இளைஞர்கள் இந்த நாளில் நரசிம்மரை நினைத்து விரதம் இருந்து வழிபடுவது அவசியம். விரதம் இருப்பவர்கள் பூஜை முடிந்ததும் உணவு எடுத்துக்கொள்ளலாம். சிலர் மறுநாள் காலை உணவு எடுத்துக்கொள்வார்கள். இரண்டுமே விரத முறைக்கு உட்பட்டதுதான். வாய்ப்பிருப்பவர்க்ள் இந்த நாளில் அருகில் இருக்கும் பெருமாள் கோயிலுக்குச் சென்று லட்சுமி நரசிம்மராகக் காட்சி தரும் நரசிம்மரை வழிபட்டு வந்தால் சகல நலன்களும் உண்டாகும்.

















