செய்திகள் :

சொந்த வீடுகளுக்கு செல்ல மாஞ்சோலை மக்களுக்கு அனுமதி மறுப்பு; நெருக்கும் வனத்துறை; வெடித்த வாக்குவாதம்

post image

தேயிலைத் தோட்டத்தின் ஒப்பந்த காலம் நிறைவு பெறுவதற்கு முன்பாகவே அங்கிருந்து வெளியேறுவதற்கு பல குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

நெல்லை மாவட்டம், அம்பாசமுத்திரம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட ஐந்து மலை கிராமங்கள் உள்ளன. அங்குள்ள வனப்பகுதியானது, 1929-ம் ஆண்டில் சிங்கம்பட்டி ஜமீன் மூலம் பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் (BBTC) நிறுவனத்துக்கு 99 ஆண்டுகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. அந்த நிறுவனத்தினர் நிலத்தை சீர்படுத்தி, அங்கு தேயிலைத் தோட்டங்களை அமைத்துப் பராமரித்து வந்தனர். அதற்காக 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பல தலைமுறைகளாக அங்கு தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாகப் பணி செய்து வந்தார்கள்.

பி.பி.டி.சி கட்டுப்பாட்டில் இருந்த நிலம் அனைத்துக்கும் வரும் 2028-ம் ஆண்டு தான் குத்தகை காலம் முடிவடையும். ஆனாலும் அதற்கு முன்பாகவே, பி.பி.டி.சி நிர்வாகம், தேயிலைத் தோட்டத்தை மூடியதுடன் அங்குள்ள அனைத்து நிலங்களையும் வனத்துறையிடம் ஒப்படைத்து விட்டது.

கடந்த மாதம் அதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், நீதிமன்ற அறிவுறுத்தல் படி அடர் வனப்பகுதியில் பொதுமக்கள் வசிக்க தடை இருக்கும் சூழலில் மாஞ்சோலை, காக்காச்சி, நாலுமுக்கு உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களையும் காடுகளை விட்டுக் கீழிறங்க உத்தரவிட்டது.

ஆகவே, பொதுமக்களை வனத்தை விட்டு வெளியேற்றும் முயற்சியில் வனத்துறை தீவிரம் காட்டி வருகிறது.

பாம்பே பர்மா டிரேடிங் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் கட்டுபாட்டில் இருந்த தேயிலைத் தோட்டத்தில் பணி செய்தவர்கள் அங்கிருந்து வெளியேற அறிவுறுத்தப்பட்ட சூழலில், அங்கிருந்த 534 குடும்பங்களில் 150-க்கும் மேற்பட்டோர் வெளியேற ஒப்புக்கொண்டனர். அவர்களில் சிலருக்கு மாற்றுத் தொழில் வாய்ப்பு, சிலருக்கு அரசு நிலம் வழங்குவது மற்றும் வீடுகள் கட்டிக் கொடுப்பது மற்றும் அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வீடுகள் ஒதுக்குதல் என சலுகைகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் சிலர், ஒப்பந்த காலம் நிறைவு பெறுவதற்கு முன்பாக மலையை விட்டு வெளியேற மறுப்புத் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், வனப்பகுதியில் தற்போது வசிக்கும் குடும்பத்தினர் யார், வெளியேறிய குடும்பத்தினர் யார் என்பதைக் கண்டறிவதில் பல்வேறு சிக்கல்கள் வனத்துறைக்கு நிலவி வருவதாகத் தெரிகிறது. அதனால் மாஞ்சோலை மலைப்பகுதிக்குச் செல்லும் பொதுமக்களில், அரசிடம் நலத்திட்டங்களைப் பெற்றவர்கள் மீண்டும் மலைப்பகுதிக்குச் செல்கிறார்களா என்பதைக் கண்காணிக்கும் பணியை வனத்துறை மேற்கொண்டுள்ளது. அத்துடன் ஏற்கெனவே அங்கு குடியிருப்பவர்களையும் எப்படியாவது வெளியேற்றிவிட திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், நெல்லை புதிய பேருந்து நிலையத்திலிருந்து கோதையாறு சென்ற அரசுப் பேருந்தை மணிமுத்தாறு சோதனைச் சாவடியில் நிறுத்திய வனத்துறை அதிகாரிகள், பேருந்துக்குள் இருந்தவர்களின் விவரங்களைப் பரிசோதித்தனர். அப்போது, ஏற்கெனவே அரசிடம் நலத்திட்ட உதவிகள் பெற்ற பலர் பேருந்துக்குள் இருப்பதும் அவர்கள் தேயிலைத் தோட்டப் பகுதியில் உள்ள தங்களின் சொந்த வீடுகளுக்குச் சென்று வருவதும் தெரியவந்துள்ளது. அதனால் அவர்களை வனப்பகுதிக்குள் செல்ல தடை இருப்பதைச் சுட்டிக்காட்டி, பேருந்தைவிட்டு கீழே இறங்குமாறு தெரிவித்துள்ளனர். அதற்கு மாஞ்சோலை உள்ளிட்ட கிராமங்களுக்குச் செல்லும் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து பேருந்திலேயே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சில குடும்பத்தினர், மணிமுத்தாறு சோதனைச் சாவடி முன்பாக அமர்ந்து, தாங்கள் கொண்டுசென்ற உணவுப் பொட்டலங்களைப் பிரித்து உண்ணத் தொடங்கினார்கள்.

பொதுமக்களில் சிலர் வனத்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதனால் அந்தப் பகுதியில் பரபரப்பான நிலைமை ஏற்பட்டது. இது குறித்து அறிந்த மணிமுத்தாறு போலீஸார், பேருந்தில் இருந்த பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அதைத் தொடர்ந்து, மாஞ்சோலை உள்ளிட்ட 5 வன கிராமங்களில் வசிக்கும் மக்கள் அடுத்த 10 தினங்களுக்குள் தங்களுடைய பொருள்களை எடுத்துக் கொண்டு வீடுகளை காலி செய்ய வேண்டும் என வனத்துறையினர் தெரிவித்தனர். அதுவரை மலைப் பகுதிக்குள் செல்ல அனுமதிப்பதாகவும் தெரிவித்ததால், தற்காலிகமாக இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணப்பட்டது. ஆனாலும், பொதுமக்களை வனத்தை விட்டு வெளியேற்றும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் பல தலைமுறைகளாக தாங்கள் வசித்த பகுதியை விட்டுக்கொடுத்து விடக் கூடாது என்பதில் பொதுமக்கள் தீவிரம் காட்டும் நிலையில் அரசு இந்த விவகாரத்தில் நியாயமான முடிவை வெளிப்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

``தமிழ்நாடு முதல்வர் விஜய் இப்போதைக்கு இங்கு வர வேண்டாம்" - கர்நாடக முதல்வர் டி.கே.சிவக்குமார்

கர்நாடகாவில் வரும் ஞாயிறு அன்று அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெறவிருக்கிறது. காவிரி நீர், மேகதாது அணை விவகாரங்கள் தொடர்பாக இந்தக் கூட்டம் நடைபெறவிருக்கும் நிலையில், தமிழ்நாடு முதல்வர் விஜய் கர்நாடகாவு... மேலும் பார்க்க

"இனி காசாவில் 'நோ' ஆயுதம்; புதிய அரசின் கரங்களில் பாலஸ்தீனம்" - ட்ரம்ப் நன்றி

ஈரான் போர் தீவிரமாக சென்றுகொண்டிருக்கும் வேளையில், ஏற்கெனவே 'நான் முடித்து வைத்துவிட்டேன்' என்று கூறிய இஸ்ரேல் - காசா போர் ஒப்பந்தத்தை தூசி தட்டி எடுத்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். கடந்த அக்டோ... மேலும் பார்க்க

"கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்துவதன் மூலம் முதல்வர் விஜய் என்ன சாதிக்கப் போகிறார்?" - அன்புமணி

காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவது தொடர்பான விவகாரமும், காவிரியில் தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நீரை திறப்பது தொடர்பான விவகாரமும் பேசுபொருளாகி இருக்கிறது. இந்நிலையில் பாமக தலைவர் அன்புமணி அறிக்... மேலும் பார்க்க

``வெளிநாட்டிலிருந்து பணம் வருகிறதென்றால், அமித் ஷா பதவி விலகவேண்டும்!" - CJP அபிஜித் தீப்கே

சமீபத்திய போராட்டத்தின்போது மாணவர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் துப்பாக்கிச்சூட்டிற்குப் பொறுப்பேற்று, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதவி விலக வேண்டும் என்று காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர்... மேலும் பார்க்க

ஸ்பெயின் எல்லையை உடைத்த மொராக்கோ மக்கள்; கடலில் கரைந்த உயிர்கள்; களமிறங்கும் ராணுவம் - நடப்பது என்ன?

2,000 முதல் 3,000 பேர் வரை எல்லையைக் கடந்ததாகத் தகவல்கள்!மொராக்கோவை ஒட்டியுள்ள ஸ்பெயினின் சியூட்டா எல்லையில் திடீரெனக் குடியேற்றவாசிகள் குவிந்த சம்பவம், ஸ்பெயினில் பாதுகாப்பு நெருக்கடியை ஏற்படுத்தியுள... மேலும் பார்க்க

மின்கட்டணம்: '3.70 லட்சம் புகார்கள் வந்திருக்கா?' - ஸ்டாலினின் குற்றச்சாட்டுக்கு நிர்மல்குமார் பதில்

"3.70 லட்சம் குடும்பங்கள் கூடுதல் மின்கட்டணம் தொடர்பாகப் புகாரளித்திருப்பதை அரசே வேறு வழியின்றி ஒப்புக்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. சமூக ஊடகங்களில் பொதுமக்களின் குமுறலைப் பார்க்கும்போது, மொத்தம் பாதிப... மேலும் பார்க்க