"டீசல் தொழிற்சாலைகளை ரஷ்யா இழந்துவிட்டது; இது அவமானம்" - உக்ரைன் போர் குறித்து ட...
ஜாகீர் கான்: ஸ்டார் வீரர் டு Mentor டு ஹெட் கோச் - நீண்ட அனுபவம் CSK அணிக்கு கைகொடுக்குமா?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நீண்ட காலப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃப்ளெமிங் விலகிய நிலையில், அவரது இடத்தை இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் நிரப்புகிறார். 2027 ஐபிஎல் சீசன் முதல் சிஎஸ்கே அணியின் தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் செயல்படுவார் என அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்திய கிரிக்கெட்டில் ஜாகீர் கானுக்கு தனி இடம் உண்டு. இடதுகை வேகப்பந்து வீச்சாளரான அவர், இந்திய அணிக்காக 92 டெஸ்ட், 200 ஒருநாள் மற்றும் 17 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார்.
குறிப்பாக, 2011-ல் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் முக்கிய வீரர்களில் ஒருவராக இருந்தார். அந்தத் தொடரில் 21 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஷாகித் அப்ரிடியுடன் இணைந்து அதிக விக்கெட்டுகளை எடுத்த பந்துவீச்சாளர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் மட்டுமல்ல, ஐபிஎல் தொடரிலும் ஜாகீர் கானுக்கு நீண்ட அனுபவம் இருக்கிறது. 100 ஐபிஎல் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 102 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். 2017-ல் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, அவரது அனுபவம் அடுத்த கட்டமாக அணியின் நிர்வாகம் மற்றும் வீரர்கள் வளர்ப்பு சார்ந்த பணிகளுக்குப் பயன்படுத்தப்பட்டது.
அதன் ஒரு பகுதியாக, 2018-ல் மும்பை இந்தியன்ஸ் அணியின் Director of Cricket Operations ஆக ஜாகீர் கான் இணைந்தார். பின்னர் அந்த அணியின் Global Head of Cricket Development பொறுப்பிலும் பணியாற்றினார். வீரர்களுடன் நெருக்கமாகப் பணியாற்றிய இந்த அனுபவத்துக்குப் பிறகு, 2024-ல் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் Mentor ஆகவும் பொறுப்பேற்றார்.
இப்படி வீரராகவும், அணியின் நிர்வாகப் பொறுப்புகளிலும், Mentor-ஆகவும் அனுபவம் பெற்றிருந்தாலும், ஜாகீர் கானின் கிரிக்கெட் பயணத்தில் இதுவரை இல்லாத ஒரு பொறுப்பு தற்போது அவரைத் தேடி வந்திருக்கிறது.
அதுதான் தலைமைப் பயிற்சியாளர் பதவி.
ஜாகீர் கானுக்கு இதுவரை எந்த ஐபிஎல் அணியிலும் தலைமைப் பயிற்சியாளராக பணியாற்றிய அனுபவம் இல்லை. அந்த வகையில், சிஎஸ்கே பொறுப்பு அவருடைய பயிற்சியாளர் வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயமாக அமைந்துள்ளது.
அதேநேரத்தில், அவர் ஏற்கவிருக்கும் பொறுப்பு சாதாரணமானதல்ல. சிஎஸ்கேவுடன் 2008-ல் வீரராக இணைந்த ஸ்டீபன் ஃப்ளெமிங் 2009 முதல் பயிற்சியாளர் குழுவில் முக்கியப் பொறுப்பில் இருந்தார்.
2026 வரை நீடித்த அவரது சிஎஸ்கே பயணம் சுமார் 18 ஆண்டுகளாக இருந்தது. அவரது காலகட்டத்தில் சிஎஸ்கே ஐந்து ஐபிஎல் கோப்பைகளை வென்றதுடன், பல முறை இறுதிப்போட்டிக்கும் சென்றது.

இப்போது ஃப்ளெமிங் இங்கிலாந்து ஆண்கள் டெஸ்ட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றுள்ள நிலையில், சிஎஸ்கேவின் அடுத்த அத்தியாயத்தை ஜாகீர் கான் தொடங்க இருக்கிறார்.
ஃப்ளெமிங்கின் நீண்ட காலப் பயிற்சியாளர் அனுபவத்துக்குப் பிறகு, தலைமைப் பயிற்சியாளராக ஜாகீர் கான் எதிர்கொள்ளும் முதல் பெரிய ஐபிஎல் பொறுப்பு இதுதான். வீரராகவும், கிரிக்கெட் நிர்வாகியாகவும், Mentor-ஆகவும் பெற்ற அனுபவத்தை சிஎஸ்கேவில் அவர் எப்படி பயன்படுத்தப் போகிறார் என்பதுதான் 2027 ஐபிஎல் சீசனில் கவனிக்க வேண்டிய முக்கிய விஷயம்.!
ஜாகீர் கான் தேர்வு பற்றி உங்கள் கருத்து என்ன? கமென்ட்டில் சொல்லுங்க கிரிக்கெட் ஃபேன்ஸ்.!

















