அமித்ஷா சந்திப்பு: ``கூட்டணி குறித்து பேசவில்லை; இதற்கு தான் டெல்லி சென்றேன்'' -...
"டாஸ் போடுறது மட்டுமே கேப்டன் வேலை இல்ல" - சூர்யகுமார் யாதவ் மீது முன்னாள் வீரர் கடும் விமர்சனம்
தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் அணி கடந்த நவம்பர் முதல் இந்தியாவில் டெஸ்ட், ஒருநாள், டி20 தொடர்களில் ஆடி வருகிறது.
முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் 2 - 0 என இந்தியாவை தென்னாப்பிரிக்கா ஒயிட் வாஷ் செய்ய, அடுத்த நடைபெற்ற ஒருநாள் தொடரில் 2 - 1 என தென்னாப்பிரிக்காவை வீழ்த்தியது இந்தியா.
அதைத்தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில், முதல் போட்டியில் இந்தியா வெல்ல, இரண்டாவது போட்டியில் தென்னாப்பிரிக்கா வென்றது.

இன்று (டிசம்பர் 14) இரவு 7 மணியளவில் தர்மசாலாவில் மூன்றாவது போட்டி நடைபெறவிருக்கிறது.
இந்த நிலையில், கேப்டன் சூர்யகுமார் யாதவ் தலைமையில் இந்திய அணி தொடர்ச்சியாகப் பல வெற்றிகளைக் குவித்து வந்தாலும், அவரின் பேட்டிங் மற்றும் அணியில் மற்ற வீரர்கள் தொடர்ச்சியாக வெவ்வேறு இடங்களில் களமிறக்கப்படுவது பெரும் விமர்சனத்துக்குள்ளாகியிருக்கிறது.
கடந்த 20 இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட சூர்யகுமார் யாதவ் அடிக்கவில்லை.
தான் ஆடிய கடைசி 17 இன்னிங்ஸ்களில் 3 சதங்கள் அடித்து தற்போது தென்னாப்பிரிக்காவுக்கெதிரான டி20 தொடரில் பென்ச்சில் அமரவைக்கப்பட்டிருக்கும் சஞ்சு சாம்சனின் ஓப்பனிங் ஸ்லாட்டில் துணைக் கேப்டனாக களமிறக்கப்படும் சுப்மன் கில், கடந்த 17 இன்னிங்ஸ்களாக ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை.
அடுத்து, பேட்டிங் ஆர்டரில் திடீரென அக்சர் படேல் ஒன்டவுனில் களமிறக்கப்படுகிறார், ஷிவம் துபே 8-வது இடத்தில் களமிறக்கப்படுகிறார், சூர்யகுமார் யாதவ் ஒன்டவுன், நம்பர் 4 என நினைத்த இடத்தில் இறங்குகிறார்.

ஓப்பனிங் ஜோடியைத் தவிர மற்ற யார் எந்த இடத்தில் இறங்குவார்கள் என ஓரளவுக்கு நிலையான பட்டியலே இல்லை.
இந்த நிலையில், முன்னாள் இந்திய வீரரும் கிரிக்கெட் வர்ணனையாளாருமான ஆகாஷ் சோப்ரா, சூர்யகுமாரின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் ஃபார்மை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
தனது யூடியூப் சேனனில் பேசிய ஆகாஷ் சோப்ரா, ``நீங்கள்தான் இந்திய அணியின் கேப்டன். ஆனால், ஒரு கேப்டனின் வேலை டாஸ் போடுவதும், பந்துவீச்சாளர்களை நிர்வகிப்பதும், வியூகம் வகுப்பது மட்டுமல்ல.
முதல் நான்கு இடங்களுக்குள் பேட்டிங் இறங்கினால், ரன் அடிப்பதுதான் உங்களின் முக்கியமான வேலை.
கடந்த 17 இன்னிங்ஸ்களில் உங்களின் ஆவரேஜ் 14, ஸ்ட்ரைக் ரேட்டும் அவ்வளவு சிறப்பாக இல்லாவில்லை, ஒரு அரை சதம்கூட அடிக்கவில்லை. வெறும் இரண்டு முறை மட்டுமே 25 ரன்களைக் கடந்துள்ளீர்கள்.
சூர்யகுமார் யாதவின் கேப்டன்சி குறித்து சந்தேகம் உள்ளது என்றோ அல்லது அடுத்த உலகக் கோப்பையில் இந்தியாவின் கேப்டனாக அவர் இருக்க மாட்டார் என்றோ நான் சொல்லவில்லை. அதை நான் பரிந்துரைக்கவுமில்லை.
ஆனால் உண்மை என்னவென்றால் அவர் ரன்கள் எடுக்க வேண்டும். 3-வது அல்லது 4-வது இடத்தில் இறங்கி ரன் அடிக்கவில்லை என்றால், அதுவும் தொடர்ச்சியாக ரன் அடிக்கவில்லை என்றால், உலகக் கோப்பை தொடங்கும் போது அந்த அளவுக்கு நம்பிக்கையுடன் நீங்கள் இருக்க மாட்டீர்கள்.
எனவே, கேப்டன் சூர்யகுமார் யாதவ், துணை கேப்டன் சுப்மன் கில் ஆகியோர் ரன் அடிப்பது முற்றிலும் அவசியம்" என்று கூறியிருக்கிறார்.


















