"இப்படியான ஒரு டிவி நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என்பது என்னுடைய ஆசை!"-'மாஸ்டர் செஃப...
டைகர் ஷெராப் மட்டுமல்ல... அமிதாப் பச்சன், அக்ஷய் குமார், ஆமீர் கானுக்கும் குறிவைத்த பிஷ்னோய் கேங்!
பாலிவுட் நடிகர் டைகர் ஷெராப் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மும்பையில் துப்பாக்கியால் சுடப்பட்டார். இதில் அதிர்ஷ்டவசமாக அவர் உயிர் தப்பினார். இந்த துப்பாக்கிச்சூடு தொடர்பாக இதுவரை ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் துப்பாக்கிச்சூடில் தொடர்புடையவர்கள் ஆவர். மற்ற நான்கு பேர் துப்பாக்கிச்சூட்டிற்கு தேவையான ஆயுதங்களை ஏற்பாடு செய்து கொடுத்தவர்கள் ஆவர். கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், நடிகர் டைகர் ஷெராப்பின் கார் மீது துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பாக பாலிவுட்டின் மற்ற மூன்று முன்னணி நடிகர்களின் வீடுகளை அவர்கள் கண்காணித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமிதாப் பச்சன், அக்ஷய் குமார் மற்றும் ஆமீர் கான் ஆகியோரின் இல்லங்களில் இருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை அவர்கள் ஆய்வு செய்ததாகவும், ஆனால் அங்குள்ள பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கண்டு தங்கள் திட்டத்தைக் கைவிட்டதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்டவர்கள் அந்த மூன்று பிரபலங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தபோது அவர்களை அணுகுவது கடினம் என்று கண்டறிந்ததால், தங்கள் திட்டங்களை மாற்றிக்கொண்டனர். டைகர் ஷெராப்பின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் நடமாட்டங்களை மதிப்பீடு செய்த பிறகு, அவரையே குறிவைக்க அவர்கள் முடிவு செய்ததாகக் கூறப்படுகிறது.
பாதுகாப்பு அதிகரிப்பு
அவர்கள் சென்று வந்ததாக கூறப்படும் இடங்களுக்குச் சென்று மும்பை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது தவிர நடிகர் சல்மான் கான் வீட்டையும் பார்வையிட்டுள்ளனர். அவரைத் தாக்குவதுதான் அவர்களின் திட்டமாக இருந்தது. ஆனால் பாதுகாப்பு அதிகமாக இருந்ததால் மற்ற நடிகர்களின் பாதுகாப்பையும் ஆய்வு செய்துள்ளனர். மும்பை ஜூஹூவில் நடிகர் டைகர் ஷெராப்பின் கார் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டைத் தொடர்ந்து, சல்மான் கானின் இல்லம், திரைப்பட இயக்குநர் ரோஹித் ஷெட்டியின் ஜூஹூ இல்லம் ஆகிய இடங்களில் மும்பை போலீஸார் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர்.
புனரமைப்புப் பணிகள் நடைபெறுவதால் ஷாருக் கான் தற்காலிகமாக பாலி ஹில்லுக்கு குடிபெயர்ந்துள்ளதாகவும், ஆமீர் கான் பாலி ஹில்லிலிருந்து கொலாபாவிற்கு இடம் பெயர்ந்துள்ளதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மும்பை போலீஸின் ஓய்வுபெற்ற என்கவுண்டர் சிறப்பு அதிகாரி பிரதீப் சர்மா மும்பையில் லாரன்ஸ் பிஷ்னோய் கூட்டத்தினர் செல்வாக்கு பெறுவது குறித்து கூறுகையில், “பிஷ்னோய் கும்பல் 1990-களின் நிழல் உலகக் கும்பல்களின் பாணியைப் பின்பற்றி, அந்த வெற்றிடத்தை நிரப்ப முயல்கிறது. இருப்பினும், மும்பையில் இவர்களின் நெட்ஒர்க் பலவீனமாகவே உள்ளது.
இதில் உள்ள உறுப்பினர்கள் பெரும்பாலும் வட இந்தியாவைச் சேர்ந்தவர்கள். இந்தக் கும்பல் முக்கியமாகப் பணத்திற்காகவே இயங்குகிறது. இவர்களிடம் நூற்றுக்கணக்கான அல்லது ஆயிரக்கணக்கான துப்பாக்கி ஏந்திய நபர்கள் இருப்பதாகக் கூறப்படுவது மிகைப்படுத்தப்பட்ட ஒன்று. இவர்கள் தங்களைப் பற்றிக் கூறிக்கொள்ளும் அளவுக்கு வலிமையானவர்கள் அல்ல” என்று தெரிவித்தார்.
இதற்கிடையே ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் கைது செய்யப்பட்ட டைகர் ஷெராப் துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய மூன்று பேரும் பலத்த பாதுகாப்புடன் இன்று அதிகாலை மும்பைக்கு கொண்டு வரப்பட்டனர். அவர்கள் பாதுகாப்பு காரணங்களையொட்டி வரும் வழியில் நான்கு இடங்களில் ஒரு காரில் இருந்து வேறு காருக்கு மாற்றப்பட்டனர். அதோடு வரும் வழித்தடமும் மூன்று முறை மாற்றப்பட்டது. மும்பைக்கு கொண்டு வந்தவுடன் அவர்களுக்கு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டு பின்னர் காவலில் அடைக்கப்பட்டனர்.



















