Doctor Vikatan: தைராய்டு மருந்துகள்... ஆயுள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டுமா?
ட்ரம்ப் VS மெலோனி: மோதிக்கொள்ளும் தலைவர்கள்; சிக்கலில் மெலோனியின் சர்வதேச அதிகாரம்!
ஒரு காலத்தில் சர்வதேச அரங்கில் மிகவும் நெருங்கிய அரசியல் கூட்டாளிகளாகக் கருதப்பட்ட அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி ஆகிய இருவருக்கும் இடையேயான உறவு தற்போது முற்றிலும் சிதைந்து, பகிரங்க மோதலாக வெடித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்களில் டொனால்ட் ட்ரம்பின் பதவியேற்பு விழாவில் கலந்துகொண்ட ஒரே உலகத் தலைவர் மெலோனி ஆவார். ட்ரம்ப் மீண்டும் வெள்ளை மாளிகைக்குத் திரும்புவதற்கு முன்பே, மெலோனி அமெரிக்காவின் 'மார்-ஏ-லாகோ' (Mar-a-Lago) பகுதிக்கு நேரில் சென்று ட்ரம்பைச் சந்தித்துத் தனது ஆதரவைத் தெரிவித்தார். ட்ரம்பும் மெலோனியை "அற்புதம்", "நம்பமுடியாதவர்" என்று பலமுறை பாராட்டி, ஐரோப்பாவில் தனது மிக முக்கிய கூட்டாளியாகக் கருதினார்.

இருப்பினும், அடுத்தடுத்து நடந்த சர்வதேச அரசியல் நகர்வுகள் இந்த அசுர கூட்டணியில் விரிசலை ஏற்படுத்தின. உக்ரைன் விவகாரம், உலக வர்த்தகக் கொள்கைகள் மற்றும் காசா மோதல் ஆகியவற்றில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் தோன்றின. குறிப்பாக, கிரீன்லாந்தைக் கைப்பற்ற அமெரிக்கா தன் பலத்தைப் பயன்படுத்தக்கூடும் என்ற ட்ரம்பின் பரிந்துரைகளை மெலோனி பகிரங்கமாக விமர்சித்தார். இது இருவருக்கும் இடையிலான சுமுக உறவில் முதல் பாதிப்பை ஏற்படுத்தியது.
மேற்கு ஆசியாவில் பதற்றம் நிலவிய சூழலில், அமெரிக்க-இஸ்ரேல் கூட்டமைப்பு ஈரானுக்கு எதிராக எடுத்த ராணுவ நடவடிக்கைகளை மெலோனி கடுமையாக எதிர்த்தார். இந்த ராணுவ நடவடிக்கையின் போது, அமெரிக்கப் படைகள் தங்களது நாட்டின் விமான நிலையங்களையோ அல்லது ஓடுபாதைகளையோ பயன்படுத்த அனுமதி மறுத்துவிட்டார். மெலோனியின் இந்த அதிரடி முடிவு அமெரிக்காவிற்குப் பெரும் தளவாடச் சிக்கலை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, இந்த ஆண்டின் தொடக்கத்திலேயே ட்ரம்ப் மெலோனியைப் பகிரங்கமாக விமர்சிக்கத் தொடங்கினார்.

இச்சூழலில், பிரான்சில் சமீபத்தில் நடைபெற்ற G7 உச்சிமாநாட்டின் போது இந்த மோதல் அடுத்த கட்டத்திற்குச் சென்றது. அம்மாநாட்டின் போது, தன்னுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள மெலோனி பலமுறை கெஞ்சிக் கோரிக்கை விடுத்ததாக அதிபர் ட்ரம்ப் குற்றம் சாட்டினார். ஆனால், ட்ரம்பின் இந்த குற்றச்சாட்டை "முற்றிலும் புனையப்பட்டவை" எனத் திட்டவட்டமாக மறுத்த மெலோனி, "இத்தாலியோ அல்லது நானோ ஒருபோதும் யாருடைய தயவையும் பிச்சை எடுப்பதில்லை" என முகத்தில் அடித்தாற்போல் காட்டமாகப் பதிலளித்தார்.
மெலோனி பதிலடி கொடுத்த மறுநாளே, தனது சமூக ஊடகத் தளமான ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் பதிவிட்ட ட்ரம்ப், ``ஈரான் ராணுவ ரீதியாகத் தோற்கடிக்கப்பட்ட பிறகு, மெலோனி இப்போது வாஷிங்டனுடன் இணக்கமாகச் சென்று, தனது சரிந்த அரசியல் செல்வாக்கை உயர்த்திக் கொள்ள மீண்டும் நட்பாக இருக்க விரும்புகிறார். வேண்டாம், நன்றி!!!" என்று கூறி இத்தாலியின் நட்புத் கரத்தை நிராகரித்தார்.

ட்ரம்பின் தொடர் குற்றச்சாட்டுகளுக்கு இத்தாலி பிரதமர் மெலோனி வழக்கத்திற்கு மாறாக மிகவும் நேரடியாகவும் பகிரங்கமாகவும் காணொளி மூலம் பதிலடி கொடுத்துள்ளார். அதில், ``டொனால்ட் ட்ரம்பின் கருத்துகள் முற்றிலும் புனையப்பட்டவை, நான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்தேன். மேற்கத்திய நாடுகளின் உண்மையான எதிரிகள் விஷயத்தில் இணக்கமாக நடந்துகொள்ளும் ட்ரம்ப், தனது சொந்த நட்பு நாடுகளையே ஏன் தொடர்ந்து விமர்சிக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை" எனச் சாடினார்.
இதற்கிடையில், ட்ரம்பின் இந்த அவமதிப்பான பேச்சு இத்தாலிய அரசியல் வட்டாரங்களில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, இத்தாலிய வெளியுறவு அமைச்சர் அன்டோனியோ தஜானி தனது அமெரிக்கப் பயணத்தை அதிரடியாக ரத்து செய்துள்ளார். இதனால் மியாமி நகரில் அவர் கலந்துகொள்ளவிருந்த வணிக மற்றும் அறிவியல் மன்றக் கூட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், இத்தாலிய அதிபர் செர்ஜியோ மட்டரெல்லா மற்றும் ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்கள் மெலோனிக்கு தங்களது முழு ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்ப் நிர்வாகத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இடையே ஒரு பாலமாகத் தன்னை நிலைநிறுத்த முயன்ற மெலோனியின் சர்வதேசப் பாத்திரம், இந்த ஈரான் போர் விவகாரம் மற்றும் தனிப்பட்ட விமர்சனங்களால் தற்போது பெரும் கேள்விக்குறியாக மாறியுள்ளது என சர்வதேச அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.












