ஒரே சதத்தில் சச்சின், ரோஹித்தின் சாதனை சமன்; கரியரின் 2-வது இன்னிங்ஸில் பட்டாஸாக...
`தவெக இன்னும் அரசியல் கட்சியாக அங்கீகாரம் பெறவில்லை' - ஐ.பெரியசாமி கருத்து
திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி டாக்டர். அம்பேத்கர் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசும்போது, "திருப்பரங்குன்றம் விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நல்ல தீர்ப்பு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.
தவெக இன்னும் அரசியல் கட்சியாக அங்கீகாரமே பெறவில்லை. அரசியல் கட்சியாக இருந்தால் நிச்சயம் கருத்து கூறுவார்கள். கருத்து கூறவில்லை என்றால், அது பற்றி பேசி என்ன பயன்.
நாஞ்சில் சம்பத் தவெக-வில் சேர்ந்தது குறித்து அதிமுக-விடம் தான் கேட்க வேண்டும். கட்சி மாறுவதை பற்றி நான் பேசுவது இல்லை, அதைப் பற்றி எனக்குத் தெரியாது. ஒரே கட்சியில் நான் இருக்கிறேன் அதுதான் எனக்குத் தெரியும்.

ஒரே இரவில் என்னுடைய தொகுதியில் இடம் பெயர்ந்துவிட்டார்கள் என 6000 நபர்களும், இறந்தவர்கள் என்று 16,000 பேரும் என மொத்தம் 22 ஆயிரம் பேரை நீக்கிவிட்டார்கள்.
பழக்கனூத்து, நடுப்பட்டி, நீலமலைக் கோட்டை இன்னும் பல இடங்களில் இறந்தவர்கள் பட்டியலில் சேர்த்து உள்ளார்கள். குறிப்பாக திண்டுக்கல்லில் உள்ள முருகானந்தம் என்ற திமுக பிரமுகரை இறந்தோர் பட்டியில் பெயர் சேர்த்து உள்ளார்கள்.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் உடனே சேர்க்கிறேன் என்று சொன்னார். அதில், எனக்கு நம்பிக்கை இல்லை. என்ன நடக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. மாவட்ட ஆட்சியர்தான் விளக்கம் சொல்ல வேண்டும்.

திண்டுக்கல்லில் பிஎல்ஒ-க்கள் வாக்காளர்களை சேர்ப்பதற்கு களத்திற்குச் செல்லவில்லை, அறையிலேயே அமர்ந்து பெயர்களை நீக்கி விட்டார்கள்.
இது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பி உள்ளேன். எஸ்.ஐ.ஆர் முழுமையாக நடைபெறவில்லை. ஆகவே, இந்த எஸ்.ஐ.ஆரை ஒன்றிய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். நாங்கள் அதைத்தான் சொல்கிறோம். எஸ்.ஐ.ஆர் - யை ரத்து செய்யுங்கள் தேர்தலை நடத்துங்கள் வாக்காளர்கள் வந்து வாக்களிக்கட்டும் இல்லையெனில் வாக்களிக்காமல் கூட போகட்டும். ஆனால், எஸ்.ஐ.ஆரை ரத்து செய்ய வேண்டும் அதுதான் என்னுடைய கருத்து.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மேல்முறையீடு செய்வது அடிப்படை உரிமை. ஒரு நீதிமன்றம் கொடுத்த உத்தரவை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. இதற்கு சட்டமே வழி வகுத்து உள்ளது. உங்களுடைய உரிமையைப் பெறுவதற்கு உச்ச நீதிமன்றம் வரை செல்லலாம் எனக் கூறியுள்ளது. அதனால்தான் நாங்கள் சென்று உள்ளோம்" எனத் தெரிவித்தார்.

















