ரெசார்ட்டில் அதிமுக எம்.எல்.ஏக்கள்; விஜய்யின் பாதுகாப்பு விலக்கு! - அமைகிறதா திம...
தூத்துக்குடி: தவெக பேனர் கிழிப்பு; கட்சியின் முன்னாள் நிர்வாகி அஜிதா ஆக்னலின் சகோதரர் கைது!
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளரும், அக்கட்சியின் தலைவர் விஜய்யின் நெருங்கிய நண்பருமான நடிகர் ஸ்ரீநாத் 1,00,536 வாக்குகளும், தி.மு.க வேட்பாளரும் அமைச்சருமான கீதாஜீவன், 62,805 வாக்குகளும் பெற்றனர். 37,731 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார் ஸ்ரீநாத். த.வெ.க-வினர் பல இடங்களில் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் வெற்றியைக் கொண்டாடினர். இதனைத் தொடர்ந்து அக்கட்சியின் நிர்வாகிகள் தூத்துக்குடி மாநநகரின் பல்வேறு முக்கிய இடங்களில் வெற்றி வாழ்த்துத் தெரிவித்து டிஜிட்டல் பேனர்களை வைத்திருந்தனர்.

இந்த நிலையில், தூத்துக்குடி வி.இ ரோட்டில் உள்ள புனித அந்தோணியார் கோயில் அருகே வைக்கப்பட்டிருந்த டிஜிட்டல் பேனரை, காரில் வந்த மர்ம நபர்கள் சிலர் கிழித்து சேதப்படுத்திவிட்டு தப்பியோடியுள்ளனர். இது குறித்து த.வெ.க. தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், தென்பாகம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். புகாரின் அடிப்படையிலும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளின் அடிப்படையிலும் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில், த.வெ.க பேனரைச் சேதப்படுத்தியது மட்டக்கடை, தட்டார் தெருவைச் சேர்ந்த சுமன் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரைப் போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்டுள்ள சுமன், தி.மு.கவின் முக்கியப் புள்ளியும் முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளர் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன் முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளரான பில்லா ஜெகனின் உடன்பிறந்த தம்பி ஆவார். மேலும், த.வெ.க-வின் முன்னாள் பெண் நிர்வாகியும் சமீபத்தில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி முன்னிலையில் தி.மு.கவில் இணைந்த அஜிதா ஆக்னலின் உடன்பிறந்த அன்ணனும் ஆவார். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் 3 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். இந்த சம்பவம் தூத்துக்குடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.











