தாடிக்கொம்பு: தேய்பிறை அஷ்டமியில் பைரவருக்கு விசேஷ அபிஷேகம் | Photo Album
நாட்டின் முதல் டிஜிட்டல் மக்கள்தொகை கணக்கெடுப்பு; ரூ.11,718 கோடி ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல்!
ஒரு நாட்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது வெறுமனே எத்தனை பேர் இருக்கின்றனர் என்ற எண்ணிக்கையை தெரிந்துகொள்வதற்கு அல்ல.
எத்தனைக் குடும்பங்கள் வறுமையில் இருக்கின்றன, எத்தனை சதவிகித இளைஞர்கள் இருக்கின்றனர், ஊட்டச்சத்து குறைபாட்டால் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்படுகின்றன, குழந்தை பிறப்பு விகிதம் எப்படி இருக்கிறது உள்ளிட்ட பலவற்றை மக்கள்தொகை கணக்கெடுப்பில் கண்டறிந்து, வறுமையில் இருப்போரை மீட்டெடுக்க, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை ஏற்படுத்த, குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவைக் கொண்டு சேர்க்க, குழந்தை பிறப்பு விகிதத்தை சீரான விகிதத்தில் பராமரிக்கத் தேவையான கொள்கைத் திட்டங்களை உருவாக்க அரசுக்கு இது உதவிகரமாக இருக்கும்.

நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமான இத்தகைய காரணிகளை உள்ளடக்கிய மக்கள்தொகை கணக்கெடுப்பு இந்தியாவில் 1951 முதல் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது.
கடைசியாக 2011-ல் இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அடுத்து, 2021-ல் நடத்தப்பட வேண்டிய மக்கள்தொகை கணக்கெடுப்பு, கொரோனா பெருந்தொற்று காரணமாக நடத்தப்படவில்லை.
அதற்கடுத்த ஆண்டு கொரோனா பெருந்தொற்றிலிருந்து நாடு இயல்பு நிலைக்குத் திரும்பிய பிறகும் கடந்த 4 ஆண்டுகளாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படாமல் இருக்கிறது.
இத்தகைய சூழலில் எதிர்க்கட்சிகளின் பல்வேறு வலியுறுத்தல்களுக்குப் பிறகு, கடந்த ஜூன் மாதம் மத்திய உள்துறை அமைச்சகம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது.
2027-ல் இரு கட்டங்களாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், 2027-ல் நடத்தப்படவுள்ள மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ. 11,718 கோடியை ஒதுக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், ``பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், முழுமையாக டிஜிட்டல் முறையில் மேற்கொள்ளப்படும் நாட்டின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு ரூ. 11,718 கோடியை ஒதுக்க ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது" என்று கூறினார்.













