'சபரிமலையில் கொள்ளையடித்த தங்கத்தை மரியாதையாக கொண்டு வையடா!' - பிரசாரத்தில் ஆவே...
நாமக்கல்: `தொகுதி வேட்பாளரை மாற்ற வேண்டும்'- தங்கமணிக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி
நாமக்கல் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு எதிராக கட்சி நிர்வாகிகள் போர்க்கொடி தூக்கி உள்ளனர்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக வேட்பாளரை மாற்றாவிட்டால் தேர்தல் வேலை செய்ய மாட்டோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர். நாமக்கல் அதிமுக வேட்பாளரை மாற்றக்கோரி மாநகர நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா செய்யும் முடிவில் இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
நாமக்கல் தொகுதிக்கு முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி.பாஸ்கர், வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என அவரது ஆதரவாளர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்தனர். இந்த நிலையில், நாமக்கல் சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளராக, மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் ஸ்ரீதேவி பி.எஸ்.மோகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதைத் தொடர்ந்து நாமக்கல் சேலம் சாலையில் உள்ள முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர் இல்லத்தில், மோகனூர், புதுச்சத்திரம், நாமக்கல் ஒன்றியச் செயலாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் மாநகர நிர்வாகிகள், 39 வார்டு செயலாளர்கள் ஒன்று கூடி ஆலோசனை மேற்கொண்டனர். இதனையடுத்து, மாநில பொதுக்குழு உறுப்பினர் மயில் சுதந்திரம், புதுச்சத்திரம் ஒன்றியச் செயலாளர் கோபிநாத் மற்றும் நிர்வாகிகள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.
அப்போது, அவர்கள் கூறுகையில், ``கடந்த தேர்தல்களில் எதிர்க்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டவருக்கு, மாவட்ட தலைமை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கி உள்ளது. இதற்கு நாங்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்கிறோம். கட்சியில் வேறு யாருக்கு வாய்ப்பு வழங்கினாலும் ஏற்றுக்கொள்வோம். ஆனால் கட்சிக்கு எதிராக செயல்பட்டவருக்கு வாய்ப்பு வழங்கக் கூடாது. நாமக்கல் மாநகரம் மற்றும் ஒன்றிய பகுதிகளில் 500 க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் உள்ளனர். நாங்கள் அனைவரும் கூண்டோடு ராஜினாமா செய்ய உள்ளோம். நிர்வாகிகள் அனைவரும் எழுத்துப்பூர்வமாக தங்களது ராஜினாமா கடிதத்தை வழங்கி உள்ளனர்.
அதை கட்சியின் பொதுச்செயலாளர் வசம் ஒப்படைத்து, மாவட்டத்தை இரண்டாக பிரிப்பது, நாமக்கல் தொகுதி அதிமுக வேட்பாளரை மாற்றம் செய்வது உள்ளிட்டவற்றை வலியுறுத்த உள்ளோம். முன்னாள் எம்.எல்.ஏ கே.பி.பி.பாஸ்கர் தூண்டுதலின் பேரில் இந்த முடிவை நாங்கள் எடுக்கவில்லை.

நாமக்கல் தொகுதிக்கு உட்பட்ட அதிமுக கிளைச் செயலாளர்கள் முதல் மாநில நிர்வாகிகள் வரை இந்த முடிவை எடுத்துள்ளோம். கிளைச் செயலாளர்கள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற உள்ளது. அவர்களும் ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளனர்
இத்தொகுதியில் பெரும்பாலான வாக்குச்சாவடி முகவர்கள் எங்களுடைய பக்கம் தான் உள்ளனர். அவர்களுடைய ஆதரவு இருந்தால் தான் தேர்தலில் வேலை செய்ய முடியும். வேட்பாளர் மாற்றத்தை உடனடியாக அதிமுக தலைமை அறிவிக்க வேண்டும். மேலும் முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு பெரும் தொகை மாறியுள்ளதாகச் சொல்கிறார்கள்.
மேலும் கடந்த இரண்டரை ஆண்டுகளாக நாமக்கல் நகரத்திற்கு மாவட்டச் செயலாளர் தங்கமணி வருவதில்லை, தலைமை சார்பில் ஆர்ப்பாட்டம், போராட்டம் அறிவித்தால் வேறு பகுதிக்கு மாற்றி விடுவார், தீபாவளி, பொங்கல் நாட்களில் நாங்கள் சொந்த காசு போட்டு மக்களுக்கு செலவு செய்கின்றோம். ஆனால் மாவட்டச் செயலாளர் நாமக்கல் தொகுதியை கண்டுகொள்வதில்லை, புறக்கணித்தார். தற்போது அறிவிக்கப்பட்ட வேட்பாளருக்கு தேர்தல் பணி செய்யமாட்டோம்" என்றனர்.














