`6 அமைச்சர் பதவி; 10 வாரியப் பொறுப்பு; ஆசைகாட்டிய தவெக... அதிமுக-வுக்கு துரோகம்!...
நெல்லை: விஜய் முதல்வராவதில் ஏற்பட்ட இழுபறி; விரக்தியில் தீக்குளித்த தவெக நிர்வாகி உயிரிழந்த பரிதாபம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியாகின. இதில் எந்தக் கட்சிக்கும் அறுதிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. 108 தொகுதிகளைக் கைப்பற்றிய போதிலும், த.வெ.க தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் இழுபறி நீடித்து வந்தது. இதனால் த.வெ.க நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

இதனிடையே நெல்லை மாவட்டம், வள்ளியூர் அருகே உள்ள புதுமனை செட்டிகுளத்தைச் சேர்ந்த த.வெ.க தொண்டரணி அமைப்பாளர் இசக்கியப்பன், விஜய் ஆட்சி அமைக்க முடியாததால் விரக்தியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால், மன உளைச்சலில் இருந்த இசக்கியப்பன், கடந்த 9-ம் தேதி காலை மகாராஜபுரம் சந்திப்பில் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்கத்தினர், சுமார் 90 சதவிகித தீக்காயங்களுடன் அவரை மீட்டு நாகர்கோவில்- ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இது குறித்து பழவூர் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதனிடையே சிகிச்சை பலனின்றி இசக்கியப்பன் நேற்று உயிரிழந்தார். கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு விஜய் முதல்வராக வேண்டி 16 அடி வேல் எடுத்து அலகு குத்திக்கொண்டு திருச்செந்தூருக்கு பாதயாத்திரையாக நடந்து சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இச்சம்பவம் தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


















