நெல்லை: பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம...
பங்களாதேஷ்: இந்து மதத்தைச் சேர்ந்தவர் அடித்துக் கொலை; மீண்டும் வன்முறை பதற்றம்!
பங்களாதேஷில் கடந்த ஆண்டில் இருந்து வன்முறை நிகழ்ந்து வருகிறது. கடந்த ஆண்டு நடந்த வன்முறையால் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா இந்தியாவில் அடைக்கலம் புகுந்துள்ளார். இதனால் பங்களாதேஷில் தற்காலிகமாக நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையிலான அரசு பதவியில் இருக்கிறது. அந்த அரசு ஷேக் ஹசீனாவை தங்களது நாட்டிற்கு நாடு கடத்தவேண்டும் என்று இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
புதிய திருப்பமாக கடந்த ஆண்டு ஷேக் ஹசீனா அரசு கவிழ்வதற்கு காரணமான வன்முறையை தூண்டிவிட்ட இளைஞரணித் தலைவரான ஷேக் ஓஸ்மான் ஹாடி என்பவர் படுகொலைசெய்யப்பட்டுள்ளார். பங்களாதேஷில் வரும் பிப்ரவரி மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்தலில் ஹாடி போட்டியிடுகிறார். அவர் டாக்காவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தபோது முகமூடி அணிந்து இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஹாடியின் தலையில் சுட்டுவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டார்.

ஹாடி சிகிச்சைக்காக சிங்கப்பூர் கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அவர் சிகிச்சை பலனலிக்காமல் இறந்துபோனார். இதனால் பங்களாதேஷில் இன்று மீண்டும் நாடு முழுவதும் கலவரம் ஏற்பட்டு இருக்கிறது. போராட்டக்காரர்கள் நெடுஞ்சாலைகளை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டத்தால் ஆங்காங்கே வானகங்கள் எரிந்தபடி இருக்கின்றன. ஷேக் ஹசீனாவின் அரசில் இடம்பெற்று இருந்த முன்னாள் அமைச்சர்களின் வீடுகளை குறிவைத்து தாக்கி வருகின்றனர்.
அதோடு அவர்கள் பத்திரிகை அலுவலகம் ஒன்றுக்குள் புகுந்து அடித்து நொறுக்கியிருக்கின்றனர். அந்த அலுவலகத்திற்கு தீவைத்தனர். உள்ளே இருந்த பத்திரிகையாளர்கள் 25 பேர் தப்பினர். சட்டோகிராம் என்ற இடத்தில் இந்திய தூதரக அதிகாரியின் வீட்டின்மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்கினர். டாக்காவிலும் போராட்டக்காரர்கள் இந்திய தூதரகம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர். தடுப்புகளை உடைத்துக்கொண்டு இந்தியாவிற்கு எதிராக கோஷமிட்டபடி அவர்கள் சென்றனர். பங்களாதேஷின் முக்கிய நகரங்களில் இப்போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது. இப்போராட்டத்தால் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் தேர்தல் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. படுகொலை செய்யப்பட்ட ஹாடி இந்தியாவிற்கு எதிரானவர் என்பது கவனிக்கத்தக்கது.
இந்து பிரஜை அடித்துக் கொலை
மைமன்சிங் என்ற இடத்தில் திபு சந்திர தாஸ் என்ற இந்து மதத்தைச் சேர்ந்தவர் அடித்துக் கொலைசெய்யப்பட்டுள்ளார். அவர் வேலை செய்யும் கம்பெனியில் உலக அரபி மொழி நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த சதாஸ், இஸ்லாம் பற்றியும் முகமது நபி குறித்தும் ஏதோ சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாகத் தெரிகிறது. அவர் கூறிய வார்த்தைகள் கம்பெனி முழுக்க பரவியது. இதையடுத்து அங்குள்ளவர்கள் ஒன்று சேர்ந்து தாஸை அடித்து உதைத்தனர். சம்பவ இடத்தில் தாஸ் இறந்து போனார். அத்தோடு விடாமல் தாஸ் உடலை கும்பல் அங்குள்ள பேருந்து நிலையம் ஒன்றுக்கு கொண்டு வந்தது. பேருந்து நிலையத்தில் இருந்த மரம் ஒன்றில் தாஸ் உடலைக் கட்டி வைத்தனர்.
அதோடு அவர்கள் ஏதோ கோஷமிட்டபடி தாஸ் உடலை மீண்டும் அடித்தனர். அதன் பிறகு உடலை அங்கிருந்து டாக்கா-மைமன்சிங் நெடுஞ்சாலைக்கு கொண்டு வந்தனர். நெடுஞ்சாலையில் வைத்து தாஸ் உடலுக்குத் தீவைத்தனர். இதனால் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் பயத்தில் அலறியடித்துக்கொண்டு ஓடினர். இச்சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த தற்காலிக பங்களாதேஷ் தலைவர் முகமது யூனுஸ், தாஸ் கொலைக்குக் காரணமானவர்களை விடமாட்டோம் என்றும், பங்களாதேஷில் வன்முறைக்கு இடமில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஹாடி படுகொலை தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''இந்த இக்கட்டான நேரத்தில், வன்முறை, தூண்டுதல் மற்றும் வெறுப்பை நிராகரித்து தியாகி ஹாடிக்கு மரியாதை செலுத்துமாறு ஒவ்வொரு குடிமகனையும் கேட்டுக்கொள்கிறோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.


















