செய்திகள் :

பட்டுக்கோட்டை: ``ஏழை மாணவியின் வெற்றிக்கு இது ஒரு சிறுபுள்ளி'' - நெகிழ வைத்த சேர்மன் சண்முகப்பிரியா

post image

பட்டுக்கோட்டை நகரப்பகுதியை சேர்ந்த இருதயராஜ் ஒரு கூலித் தொழிலாளி. அவரது மனைவி ஷீலாராணி. இவர்களுக்கு ஒரு மகனும், பிரின்சியா என்ற மகளும் உள்ளனர். மிகவும் ஏழ்மையான பின்னணியை கொண்ட குடும்பம்.

பிரின்சியாவுக்கு டாக்டராக வேண்டும் என்பது கனவு. 2022-ஆம் ஆண்டில் ப்ளஸ் டூ தேர்வு எழுதிய அவர் 560 மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்றார். டாக்டராக படிக்க வேண்டும் என்பதற்காக கடும் சிரமத்திடையே NEET நுழைவுத் தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற்றார். ஆனால் தனியார் மருத்துவக் கல்லூரியில் பிரின்சியாவிற்கு சீட் கிடைத்தது.

திமுக சேர்மன் சண்முகப்பிரியா
திமுக சேர்மன் சண்முகப்பிரியா

படித்து முடிக்க பெரும் தொகை செலவாகும்; இதை தன் குடும்பம் தாங்க முடியாது என்பதை நன்கு அறிந்த அவர், கட் ஆப் மார்க் அதிகம் வருவதற்காக தொடர்ந்து இரண்டு வருடங்கள் NEET தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றார்.

ஆனால் போதிய கட் ஆப் இல்லாததால் தனியார் மருத்துவக் கல்லூரியில் பல் மருத்துவருக்கான சீட் கிடைத்தது. இதற்கும் படித்து முடிக்க பல லட்சம் செலவாகும்.

அரசு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்திருந்தால் குறைந்த செலவே ஆகும்; ஆனால் அந்த வாய்ப்பு பிரின்சியாவிற்கு அமையவில்லை.

படிக்க மனம் இருந்தால் மட்டும் போதாது, பணமும் தேவை என்பதை உணர்ந்த பிரின்சியா, டாக்டராக வேண்டும் என்ற தனது கனவை உதறித் தள்ளினார். அதே தனியார் மருத்துவக்கல்லூரியில் பிசியோதெரபி படிக்க முடிவு செய்தார். அதற்கும் வருடத்திற்கு சுமார் ஒன்றரை லட்சம் செலவாகும் என்ற நிலை.

பட்டுக்கோட்டை நகராட்சி

படிப்பில் உறுதியாக இருந்த பிரின்சியா பட்டுக்கோட்டை நகராட்சி திமுக நகர்மன்றத் தலைவர் சண்முகப்பிரியாவிடம் உதவி கேட்டிருக்கிறார். அப்போது, “டாக்டராக படிக்கணும் என்பதற்காக மூன்று வருஷமா வீணடிச்சிட்டேன். இப்போ பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரியில் பிசியோதெரபி படிக்க சீட் கிடைச்சு, அப்ளிகேஷன் போட்டிருக்கேன். என்னைப் படிக்க வச்சு கரை சேர்க்கிற நிலை என் குடும்ப சூழலுக்கு இல்லை” என்று கலங்கி கூறியிருக்கிறார்.

படித்து சமூகத்தில் நாமும் உயர்ந்த நிலையில் இருக்க வேண்டும் என்ற பிரின்சியாவின் உறுதியை அறிந்த சேர்மன் சண்முகப்பிரியா, உடனே, “நீ கவலைப்படாதே… உன் படிப்புக்கு நான் பொறுப்பு” என்று கூறி நம்பிக்கை அளித்தார்.

இதையடுத்து, தனலட்சுமி சீனிவாசன் மருத்துவக்கல்லூரி நிர்வாகத்திடம் மாணவியின் நிலை குறித்து பேசிய அவர், “கல்லூரிக்கு நன்கொடைக் கட்டணம் வேண்டாம்; பீஸ் மட்டும் கட்டுங்கள்” என சொல்லப்பட்டுள்ளது.

மருத்துவப் படிப்பு
மருத்துவப் படிப்பு

இதைத்தொடர்ந்து பிரின்சியாவை உடன் கல்லூரிக்கு அழைத்துச் சென்ற சண்முகப்பிரியா, தனது சொந்த பணத்தில் ஒரு வருடத்திற்கான பீஸ் ரூ.1,25,000 கட்டி சேர்த்து விட்டிருக்கிறார். “எதையப் பற்றியும் கவலைப்படாதே. படிப்பில் மட்டும் கவனம் செலுத்து. நீ படிச்சு முடிப்பதை நான் பார்த்துக்கொள்கிறேன்” என்று உறுதியளித்திருக்கிறார்.

மூன்று வருட போராட்டம் மூன்று நாளில் முடிந்ததில் நெகிழ்ந்து உற்சாகத்தில், “நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துட்டேன்” என சேர்மனின் செயலையை சிலரிடம் பகிர்ந்துள்ளார் பிரின்சியா. இதன் மூலம் இது வெளியில் தெரிய, பலரும் சேர்மன் சண்முகப்பிரியாவை பாராட்டி வருகின்றனர். இதேபோல், சத்தமில்லாமல் ஏழை மாணவிகளின் கல்விக்கு உதவி செய்து உறுதுணையாக இருக்கிறார் என்றும் கூறப்படுகிறது.

இது குறித்து பட்டுக்கோட்டை நகராட்சி திமுக சேர்மன் சண்முகப்பிரியாவிடம் பேசினோம்:

“வங்கியில் கல்விக் கடன் எளிதாக கிடைப்பதில்லை. இதனால் வறுமையான சூழலில் உள்ளவர்களின் படிப்பு கேள்விக்குறியாகி தடைப்படுகிறது. ஒரு பெண் படித்து கரை சேர்ந்தால், அவள் மட்டுமல்ல; அடுத்த தலைமுறையும் உயர்வடையும். பெண்கள் படிப்புக்கு உறுதுணையா இருக்கணும். என்னால் முடிந்த உதவியை செய்கிறேன், வழிகாட்டுகிறேன்.

பட்டுக்கோட்டை திமுக சேர்மன் சண்முகப்பிரியா
பட்டுக்கோட்டை திமுக சேர்மன் சண்முகப்பிரியா

பிரின்சியா நல்லா படிக்கிற பொண்ணு. வாய்ப்பும், வசதியும் இருந்திருந்தால் மூன்று வருடத்திற்கு முன்னாடியே அவளோட படிப்பு சாத்தியமானிருக்கும்; ஆசையும் நிறைவேறியிருக்கும். விடாமுயற்சியில் இப்போது அவளுக்கான வாசல் திறந்திருக்கிறது. மாணவியின் வெற்றியில் ஒரு சிறுபுள்ளி தான் நான்,” என்றார்.

புத்தகத்தை விட மீன் வலை நெருக்கமானது ஏன்? - மெரினா மணலில் முடிக்காத வீட்டுப் பாடம்

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

பி.டி.உஷா, எழுத்தாளர் ஜெயமோகனுக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிய தட்சசீலா பல்கலைக்கழகம்!

விழுப்புரம் மாவட்டம், ஓங்கூர் பகுதியில் அமைந்திருக்கும் தட்சசீலா பல்கலைக்கழகத்தின் முதலாம் ஆண்டு பட்டமளிப்பு விழா, கடந்த நவம்பர் 20-ம் தேதி பல்கலைக்கழகத்தின் கருத்தரங்குக் கூடத்தில் நடைபெற்றது. தட்சசீ... மேலும் பார்க்க