Gold Rate: ரூ.1.06 லட்சத்தை தாண்டிய தங்கம் விலை; வெள்ளி அதிரடி உயர்வு - இன்றைய வ...
பனையபுரம் ஸ்ரீபுறவார் பனங்காட்டீசன்: சூரியத் தலம்... பொய்ச்சத்தியம் செய்தால் 8 நாள்களில் தண்டனை!
கண்கண்ட கடவுள் சூரியபகவான். அவர் அருள் இருந்தால் பாவங்கள் விலகும். ஆரோக்கியம் கூடும். செல்வச் செழிப்பு உண்டாகும்.
இப்படி வரங்கள் அருளும் கிரகமாக அமரும் மேன்மையான நிலையை சூரியன் சிவ வழிபாட்டின் மூலம் பெற்றான். ஒரு முறை தட்ச யாகத்தில் கலந்துகொண்டவர்களை வீரபத்திரர் பலமாகத் தண்டித்தார். அதில் சூரிய தேவனுக்குப் பற்கள் போயின. எனவே தன் பலத்தையும் இழந்த சூரியபகவான், பல்வேறு தலங்களில் ஈசனை வழிபட்டுத் தன் பலத்தை மீண்டும் பெற்றார். அவ்வாறு அவர் வழிபட்ட தலங்களில் ஒன்றுதான் பனையபுரம்.
விழுப்புரம் மாவட்டம், பனையபுரத்தில் அமைந்துள்ள புறவார்ப் பனங்காட்டீசர் திருக்கோயில். சென்னைக்கு தெற்கே 150 கி.மீ. தொலைவில் உள்ளது.
மேலே சொல்லப்பட்ட புராண நிகழ்வை உறுதிப்படுத்தும் விதத்தில் இந்தத் தலத்தில் ஆண்டுதோறும் சித்திரையில், ஏழு நாள்கள் சூரிய பூஜை நடைபெறுகிறது.
அதேபோல், தனது பழி பாவம் தீர தட்சன் வழிபட்ட சிவத் தலங்களில் ஒன்றாகவும் பனையபுரம் திகழ்கிறது. இதற்குச் சான்றாக ராஜகோபுரத்தின் உள்ளே வடக்கு முகமாக ஆட்டுத் தலையுடன் தட்சன் வழிபடும் சிலை, புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது.

இங்கே கல்வெட்டுகள் பல காணப்பட்டாலும் அரசு மரபினரால் நிர்மாணிக்கப்பட்டவை 16 மட்டுமே. இவற்றில், முதலாம் ராஜேந்திரன் (கி.பி.1012), 2-ம் ராஜேந்திரன் (கி.பி.1058), உடையார் ஆதிராஜேந்திர தேவன் (கி.பி. 1070), முதலாம் குலோத்துங்க சோழன் (கி.பி.1118), முதலாம் ஜடவர்ம சுந்தரபாண்டியன் (கி.பி.1265), மூன்றாம் விக்கிரபாண்டியன்(கி.பி.1288) ஆகியோரது குறிப்பிடத்தக்கவையாகும்.
இக்கோயில் 73 சென்ட் நிலப்பரப்பளவில் எழிலுடன் அமைக்கப்பட்டுள்ளது. சோழர் காலத்தைச் சேர்ந்த இக்கோயிலில், கருவறைச் சிற்பங்கள் முதலாம் ராஜேந்திர சோழன் காலத்தவை. இதற்குச் சான்றாக தட்சிணாமூர்த்தி, பிரம்மா, துர்கை இன்றும் காட்சி தருகின்றனர்.
ராஜகோபுரம் 60 அடி உயரத்தில் நான்கு நிலைகளைக் கொண்டு நிமிர்ந்து நிற்கின்றது. இதுவும் இதன் அருகே உள்ள சிங்கமுகத் தூண்களும் விஜயநகரக் காலத்தவை ஆகும்.
கருவறையில் மூலவர் வட்ட வடிவ ஆவுடையாராக கிழக்கு முகமாகக் காட்சி தருகின்றார். இவரின் வடிவம் எளிமையாக, அதே நேரத்தில் ஒளி பொருந்தியதாக அமைந்து, நம்மை ஈர்க்கின்றது.
திருஞான சம்பந்தர், புறவார் பனங்காட்டீசன் என அழைத்தாலும், கல்வெட்டுகளில் கண்ணமர்ந்த நாயனார் என்றும், பரவை ஈஸ்வரமுடைய மகாதேவர் என்றும், திருப்பனங்காட்டுடைய மகாதேவர் என்றும் பலவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சிவனின் இடப்புறத்தில் சற்றுத் தொலைவில் அம்பிகைக்குத் தனியாக ஆலயம் அமைந்துள்ளது. இறைவி பெயர் மெய்யாம்பிகை. இவளுக்கு புறவம்மை, சத்தியாம்பிகை என்ற பெயர்களும் வழக்கில் உண்டு.
கிழக்கு முகமாய் நின்ற கோலத்தில் மேலிரு கரங்களில் தாமரை மலர்களைத் தாங்கியும், கீழிரு கரங்களில் அபய வரத முத்திரைகள் கொண்டும் நான்கு கரங்களுடன், எழிலான கோலத்தில் அன்னை காட்சி தருகின்றாள்.
பூரண அலங்காரத்தில் இவளின் திருவுருவம் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. அன்னையின் அழகைக் காண கண் கோடி வேண்டும் என்றால் அது மிகையல்ல.

இது தவிர, கொடிமரம் அருகே பல்லவர் கால கற்பலகை விநாயகர், விநாயகர், வள்ளி - தெய்வயானையுடன் ஆறுமுகம் சந்நிதிகள், 63 நாயன்மார்கள் சிலைகள் மற்றும் திருநீலகண்டர் தன் துணைவியுடன் கோல் தாங்கி நிற்கும் அரிய கோலம், ராஜ கோபுரம் உள்புறம் விநாயகரைத் தொழும் தக்கனின் கோலம் ஆகியன அமைந்துள்ளன.
மேலும், இவற்றிற்கெல்லாம் மகுடமாக, இது சூரியத் தலமாக விளங்குவதால் சிவனின் சந்நிதி வளாகத்துக்குள், தனித்து காட்சி தரும் சூரிய பகவானைத் தரிசிப்பது சிறப்பு.
இவ்வூரில் தீராத பஞ்சாயத்து வழக்குகளில் முடிவாக, அன்னை மெய்யாம்பிகை மீது சத்தியம் செய்யச் சொல்வது வழக்கம். தவறாக பொய்ச் சத்தியம் செய்பவர், அடுத்து எட்டு நாள்களுக்குள் தண்டனை பெறுவது உறுதி என்பதை இன்றும் இவ்வூர் மக்கள் நம்புகிறார்கள். அவ்வளவு சக்தி வாய்ந்த அன்னையாக இவள் திகழ்கிறாள்.
ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் நாளில் இருந்து தொடர்ந்து ஏழு நாள்கள் சூரிய உதயத்தின்போது, சூரியன் தன்னுடைய பொன்னிற ஒளிக் கதிர்களால், நீண்டு வளர்ந்துள்ள ராஜகோபுரம், கொடிமரம், பலிபீடம், நந்தி மண்டபம் இவற்றை எல்லாம் கடந்து கருவறையில் வீற்றிருக்கும் பனங்காட்டீசனின் சிரசின் மீது பட்டு வணங்குகிறது. இதன்பின் அது மெல்லக் கீழிறங்கி, சிவனின் பாதத்தினை அடைகிறது.
பாதத்தைத் தொடும் அதே வேளையில், சற்றுத் தொலைவில் உள்ள அருள்மிகு மெய்யாம்பிகை அம்மனின் சிரசின் மீதும் ஒளிக் கதிர்கள் விழுகின்றன.
பின்பு அது மெள்ள கீழிறங்கி அன்னையின் பாதத்தினை அடைவதுடன், அன்றைய சூரிய பூஜை நிறைவு பெறுகிறது.

சூரியன் தன் ஒளிக் கதிர்களால் நிகழ்த்திவரும் இத்தகு அரிய நிகழ்ச்சி இக்கோயிலின் தனிச் சிறப்பு ஆகும்.
இந்தத் தலத்தின் விருட்சம் ஆண்பனை உயரமாகவும், பெண்பனை குள்ளமாகவும் காட்சி தருவது, வியப்பான ஒன்றாகும். பெண் பனையிலிருந்து விழும் பழத்தை உண்பவர்களுக்கு மகப்பேறு கிடைக்கும் என்பது நம்பிக்கை. பனை மரங்கள் நிறைந்த பூமியாக இத்தலம் திகழ்ந்ததால், பனையபுரம் என அழைக்கப்பட்டதென கூறுவோரும் உண்டு.
















