நெல்லை: பொருநை அருங்காட்சியகம் திறப்பு விழா; முதல்வர் மு.க.ஸ்டாலின் சுற்றுப்பயணம...
'பாஜக மதவெறி அரசியலுக்கு முதல் கள பலி' - திருமாவளவன் விமர்சனம்
கோவை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், "100 நாள் வேலை திட்டத்தை அழிப்பதற்கு மத்திய அரசு முடிவு செய்துவிட்டது. பாஜக அரசியலில் தரம் தாழ்ந்துவிட்டது. பாஜக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே
காந்தியடிகளை சிறுமைப்படுத்துவதில் குறியாக இருக்கிறார்கள். நாதுராம் கோட்சேவை தேசபக்தர் என்று கொண்டாடுகிறார்கள். 100 நாள் வேலை திட்டத்துக்கு 'ஜி ராம் ஜி' என்று பெயர் சூட்டியுள்ளனர்.
'ஹே ராம்' என்று சொன்ன காந்தியின் பெயரை நீக்கியுள்ளனர்.
காந்தி மீது வெறுப்பை உமிழ்கிறார்கள்.
100 நாள் வேலை திட்டத்துக்கான நிதியை பாஜக படிப்படியாக குறைத்து வருகிறது. நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் 100 நாள் வேலை திட்டத்தில் ஒருநாள்கூட வேலை கிடைப்பதில்லை. தற்போது 125 நாள்கள் வேலையை உயர்த்தியுள்ளதாக ஏமாற்றுகின்றனர்.

இந்த நடவடிக்கையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். இதைக் கண்டித்து திமுக கூட்டணி சார்பில் வருகிற 24-ம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தவுள்ளோம். சென்னையில் நடைபெறும் போராட்டத்தில் நான் கலந்துகொள்கிறேன். விசிக சார்பில் தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளுக்கும் ஒரு மாவட்டச் செயலாளர் வீதம், 234 மாவட்டச் செயலாளர்கள் நியமித்துள்ளோம். அதைத் தொடர்ந்து அமைப்பு ரீதியான பதவிகள் நியமிக்கப்படவுள்ளன.
அதன் பிறகு தேர்தல் பணிகளில் கவனம் செலுத்துவோம். எஸ்.ஐ.ஆர் நடவடிக்கை மூலம் நீக்கப்படுவோர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல. அவர்கள் நாட்டின் பூர்வீக குடிமக்கள். வாக்குரிமையைப் பறித்து, பிறகு குடியுரிமையை பறிக்க முயற்சிக்கிறார்கள். பாஜகவுக்கு ஏதோ உள்நோக்கம் உள்ளது
எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தும், தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி இதை செய்கிறார்கள். இது நாட்டுக்கு மிகவும் ஆபத்தானது. திருப்பரங்குன்றத்தில் பூர்ணசந்திரன் இறந்தது கவலை அளிக்கிறது. அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல். பூர்ணசந்திரன் குடும்பத்தினருக்கு இழப்பீடு, அரசு பணி வழங்கி தமிழ்நாடு அரசு ஆதரிக்க வேண்டும். பாஜகவின் மத வெறி அரசியலுக்கு இது முதல் கள பலி. இன்னும் என்னவெல்லாம் செய்யப் போகிறார்களோ என கவலையளிக்கிறது." என்றார்.

















