பழைய Actorகிட்ட இருக்கிற dedication புதுசா வர்றவங்ககிட்ட...! - Actress Egavalli ...
'பார்க்க விமானம்போல இருக்கும்; ஆனால், ஒரு காருக்குத்தான்' - இது ஊர்க்குருவிகளின் கதை!
மழை பெய்து முடித்த நாள்களில், வானம் வெறித்துவிட்டதா என அண்ணாந்துப் பார்க்கையில், உயரத்தில், சிறு புள்ளிகள்போல தெரிகிற பறவைக்கூட்டங்களைப் பார்த்திருக்கிறீர்களா..? கண்ணிமைக்கும் நேரத்தில் மறைந்துவிடுகிற அளவுக்கு படு வேகமாக பறந்துவிடும் அந்தப் பறவைக்கூட்டம். அவை நாட்டு உழவாரன்.
எல்லோருக்கும் தெரிந்த பெயர் ஊர்க்குருவி. இவை கிட்டத்தட்ட 200 முதல் 300 அடி உயரம் வரைக்கும்கூட பறக்கும். இதன் காரணமாகவே, 'உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாக முடியுமா' என்கிற மனித கேலிக்கு ஆளாகிக்கொண்டிருக்கிற நாட்டு உழவாரன், அதாவது ஊர்க்குருவியின் அருமை பெருமைகளைத்தான் இன்றைக்கு நம்மோடு பகிரவிருக்கிறார், காட்டுயிர் ஆர்வலரும் எழுத்தாளருமான கோவை சதாசிவம்.
ஊர்க்குருவியின் பெயரை காருக்கு வைத்திருக்கிறார்கள்!

''இன்றைக்கும் பசுமை மிகுதியாக மிஞ்சியிருக்கும் கிராமங்களில், மழைவிட்ட பொழுதுகளில் விர்ரென கீழே இறங்கி வருகிற ஊர்க்குருவிகளைப் பார்க்கையில், 'எங்கேயாவது மோதி விழுந்து விடுமோ; அல்லது நம் மீது தான் மோதி விடுமோ என்று ஒரு நொடி அஞ்சி விடுவோம். மணிக்கு 110 கி.மீட்டர் வேகத்தில் பறக்கக்கூடியது ஊர்க்குருவி. ஆனால், எதன் மீதும் மோதாது... எங்கும் அடிபடாது... அப்படியே யூ டர்ன் அடித்து மேலெழும்பி பறந்து விடும். உழவாரன் போலவே, எங்கள் தயாரிப்பு காரும் வேகமாக சென்றாலும், எங்கும் மோதாது, விபத்தில் சிக்காது என்று, கார் தயாரிப்பு நிறுவனமொன்று தங்கள் காருக்கு Swift என்று பெயர் வைத்துள்ளது. ஆம், ஊர்க்குருவியை ஆங்கிலத்தில் Swift என்றே குறிப்பிடுவோம். தன் சிறகுகளை விரித்து ஊர்க்குருவிகள் பறக்கையில், சின்னஞ்சிறு விமானம்போல இருக்கும். ஆனால், அதன் பெயரை ஒரு காருக்கு வைத்திருக்கிறார்கள்.
ஊர்க்குருவிகளால் மரக்கிளைப்பற்றிக்கொண்டு உட்கார முடியாது!

ஊர்க்குருவிகள் பெரும்பாலும் வானத்தில் பறந்தபடியேதான் இருக்கும். அப்படியென்றால், ஊர்க்குருவி கீழே வரவே வரதா என்கிற கேள்வி எழலாம். ஒருநாளின் பெரும்பொழுதை அவை வானில்தான் கழிக்கும். காரணம், அவை கீழே வந்தால், அவற்றால் மரக்கிளைப்பற்றிக்கொண்டு உட்கார முடியாது. அந்தளவுக்கு அவற்றின் கால்கள் மிகச்சிறியதாக, மெல்லியதாக இருக்கும். ஆனால், மெல்லிய மின்சாரக்கம்பிகளைப் பற்ற முடியும். மின்சாரக்கம்பிகளின் மீது ஊர்க்குருவிகள் வரிசையாக உட்கார்ந்துக்கொண்டிருக்கும் அழகை இன்றைக்கும் கிராமங்களில் பார்க்க முடியும். அப்படி அவை உட்கார்ந்திருப்பது, யாரோ நேர்த்தியாகக் கட்டிய மாவிலைத்தோரணம் போலவே இருக்கும்.
ஊர்க்குருவிகளுக்கு கூடு கட்டத்தெரியுமா..?

அப்படியென்றால், ஊர்க்குருவிகள் இரவுகளில் ஓய்வெடுக்காதா..? அப்படி ஓய்வெடுக்க வேண்டுமென்றால், கூடு வேண்டுமே... ஊர்க்குருவிகளுக்கு கூடாவது கட்டத்தெரியுமா என்று எக்கச்சக்க கேள்விகள் எழுகின்றனவா...
ஊருக்குருவிகளும் கூடு கட்டும். இரவுகளில் ஓய்வெடுக்கும். ஏனென்றால், அவை இரவாடிப்பறவை கிடையாது. பெரும்பாலும் வானத்திலேயே பறந்துகொண்டிருக்கிற இந்தக் குருவிகள், இனப்பெருக்க காலத்தில் கீழே வரும். கோயில் மண்டபங்கள், பாலங்களுக்கு அடியில் காய்ந்த சுள்ளிகள், பறவை இறகுகள், காகிதம் ஆகியவற்றை தன்னுடைய உமிழ்நீரால் ஒட்டி, ஒரு கிண்ணம் போன்ற கூட்டினைக் கட்டும். கூடு கட்டுவதற்காக, இனப்பெருக்க காலத்தில் மட்டும் ஊர்க்குருவிக்கு பேஸ்ட் போன்று உமிழ்நீர் சுரக்கும். இயற்கைதான் எத்துனை கருணையானது...
பனை உழவாரன் என்றொரு குருவியும் இருக்கிறது!

பூச்சிகளால் நிறைந்ததுதான் நம் பூவுலகம். ஊர்க்குருவிகளுக்கும் பெரும்பான்மை உணவு பூச்சிகள்தான். வானில் பறந்துகொண்டிருக்கிற பூச்சிகளையெல்லாம் உண்டு கட்டுப்படுத்துவதில், ஊர்க்குருவியின் பங்கு அதிகம்.
நம் ஊரில் பனை உழவாரன் என்றொரு குருவியும் இருக்கிறது. இவை பனை ஓலைகளை தன் எச்சிலால் ஒட்டி கூடு கட்டி அதற்குள் வசிக்கும். இவை பனை மரங்களைச் சுற்றியே தங்கள் வாழ்க்கையை அமைத்துக்கொண்டிருப்பதால், இவற்றுக்கு பனை உழவாரன் என்று பெயர்.
முன்புபோல ஊர்க்குருவிகளைப் பார்க்க முடிவதில்லையே...
வெளிநாடுகளிலும் உழவாரன்கள் இருக்கின்றன. அவை அல்பைன் உழவாரன்கள். அம்புபோல பறக்கும் அவற்றை புகைப்படம் எடுப்பது மிக மிகக்கடினம். தொடர்ந்து 200 நாள்கள்கூட அல்பைன் உழவாரன்கள் வானில் பறந்துகொண்டே இருக்கும். பறந்தபடியே பூச்சிகளை உண்ணும்; பறந்தபடியே உறங்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
நம் ஊரில், தெரு என்பது மக்கள் நடமாடுவதற்கு என்றிருந்த காலகட்டத்தில் மழைக்காலங்களில் ஊர்க்குருவிகளை அதிகமாகப் பார்க்க முடிந்தது. இப்போது தெருக்கள் வாகனங்களுக்கானது என்று மாறிய பிறகு, முன்புபோல ஊர்க்குருவிகளைப் பார்க்க முடிவதில்லை. ஆனால், வெட்டவெளிகளில் பறந்துகொண்டிருக்கின்றன அவை...'' என்று முடித்தார் கோவை சதாசிவம்.

















