பாழாகும் பொருநை ஆறு; வரி செலுத்தாத பெரு நிறுவனங்கள்... கடிவாளம் போடப்படுமா?! | T...
பாழாகும் பொருநை ஆறு; வரி செலுத்தாத பெரு நிறுவனங்கள்... கடிவாளம் போடப்படுமா?! | Thamirabarai River
பொருநை என்று அழைக்கப்படும் தாமிரபரணி ஆறு, பொதிகை மலையில் தோன்றிப் பாய்ந்து பல கிளை ஆறுகளைக் கொண்டது.
சில மாதங்களுக்கு முன் சில தொழில் நிறுவனங்கள் தாமிரபரணி ஆற்றில் இருக்கும் நீரைப் பயன்படுத்திக்கொண்டு வரியை அரசுக்கு செலுத்தாமல் இருப்பதாக தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார்.

காமராசுவின் தகவல்படி,
வரி பாக்கி வைத்திருக்கும் 7 நிறுவனங்கள் மற்றும் திட்டங்களின் நிலுவைத் தொகையின் விவரம் பின்வருமாறு:
இந்தியா சிமெண்ட் லிட்., சங்கர் நகர் நிலுவைத் தொகை: ரூ.3,83,12,674
டி.சி.டபிள்யூ லிட்., சாஹுபுரம் - நிலுவைத் தொகை: ரூ.28,06,98,364
3 எம்.ஜி.டி திட்டம், TWAD (தூத்துக்குடி) - நிலுவைத் தொகை: ரூ.10,15,33,121
20 எம்.ஜி.டி திட்டம், TWAD (தூத்துக்குடி) - நிலுவைத் தொகை: ரூ. 2,04,34,44,554
வி.வி.மினரல்ஸ், இராதாபுரம் - நிலுவைத் தொகை: ரூ.8,86,942
'அர்ஜுன் பல்ப் அண்ட் பேப்பர் (இந்தியா) பிரைவேட் லிட். - நிலுவைத் தொகை: ₹1,18,800
இதில், தமிழ்நாடு நீர்வளத் துறையின் (TWAD) இரண்டு முக்கியக் குடிநீர்த் திட்டங்களே ரூ. 214 கோடிக்கும் அதிகமாகப் பாக்கி வைத்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிறுவனங்கள் அனைத்தும் வரியைச் செலுத்தாமல், தாமிரபரணி நீரை அதிகமாகப் பயன்படுத்தி வருவதாக முத்தாலங்குறிச்சி காமராசு தனது பொது நல மனுவில் பதிவு செய்துள்ளார்.

மேலும் தன் மனுவில் நீதிமன்றத்திற்குச் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பிக்கவும் வலியுறுத்தியிருக்கிறார்.
அதன்படி தாமிரபரணி ஆற்று நீரைப் பயன்படுத்துகின்ற அல்லது ஆக்கிரமித்து இருக்கின்ற தொழில் நிறுவனங்களைக் கண்டறிந்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றும், பொதுப்பணித் துறையால் (PWD) நிர்ணயிக்கப்பட்ட நீர்ப் பயன்பாட்டுக் கட்டணத்தை மறு ஆய்வு செய்து, முறைப்படுத்தி, வசூலிக்கப்படும் தொகை, தாமிரபரணி ஆற்றின் பாதுகாப்பு, மறுசீரமைப்பு பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்யக் கோரியுள்ளார்.
இவ்வாறு செலுத்தப்படாமல் இருக்கின்ற நிதியால் குடிநீருக்காகப் பணம் செலுத்தும் சாமானிய மக்களுக்கு இது பெரும் சுமையாக இருக்கிறது என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து முத்தாலங்குறிச்சி காமராசுவிடம் பேசியபோது, "2018இல் நான் வழக்குத் தாக்கல் செய்திருந்தேன். வழக்கறிஞர் டாக்டர் அழகுமணி. எங்கள் வழக்கை விசாரித்தது சி.ஆர் சுவாமிநாதன் புகழேந்தி.
எங்கள் வழக்கில் நாங்கள் கேட்டது தாமிரபரணி ஆற்றில் சாக்கடை கலக்கக் கூடாது, மேலும் மண்டபங்கள் மற்றும் படித்துறைகளைப் பழமைக்கெடாமல் சீரமைக்க வேண்டும் என்றும் கேட்டிருந்தோம்.
இவை இரண்டிற்கும் 2024இல் தீர்ப்பொன்று கிடைத்தது. சாக்கடை நீர்நிலைகளில் கலக்காமல் இருப்பதற்கு உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் மண்டபங்கள் மற்றும் படித்துறைகளை இந்து அறநிலையத்துறை கவனிக்க வேண்டும் என்று தீர்ப்பு வெளியானது.

தீர்ப்பு வந்த பிறகும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பிறகு நீதி அரசர்களே என்னுடைய வழக்கை நீதிமன்ற அவமதிப்பு வழக்காக எடுத்து விசாரித்தும் பலனில்லை. பிறகு நவம்பர் 10, 2024 அன்று நேரில் வந்து ஆய்வு செய்தனர்.
சாக்கடை நீர் கலக்கும் இடம், மண்டபங்கள் மற்றும் படித்துறைகள் போன்றவற்றைப் பார்வையிட்டனர். பிறகு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தனர். அப்போது நாங்கள் இன்னொரு வழக்கையும் தாக்கல் செய்தோம்.
இதில் தனியார் நிறுவனங்கள் மற்றும் குடிநீர் வடிகால் வாரியம் அவர்கள் தாமிரபரணியிலிருந்து நீரைப் பயன்படுத்துகிறார்கள். இதில் குடிநீருக்கான நிலுவைத் தொகை மட்டுமே ரூ. 240 கோடிக்கும் அதிகமாக உள்ளது.
செலுத்தப்படாத அந்தத் தொகைகளை வைத்து நாம் தாமிரபரணியை சுத்தப்படுத்திவிடலாம். அப்போது இது பற்றியான கேள்விக்கும் எந்த செவி சாய்ப்பும் இல்லை. இதற்கு பாராளுமன்ற உறுப்பினர் இராபர்ட் ப்ரூஸ் அவர்கள் வழக்காடினார்.
அவர் கூறியதாவது மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்திற்கான வரைவுத் திட்டத்தை தமிழக அரசு கொடுத்தால் நாங்கள் அதற்கான நிதியை ஒதுக்கீடு செய்கிறோம் என்று மத்திய அரசு கூறியிருப்பதாக நீதிமன்றத்திலேயே நேரடியாகக் கூறினார்.
வரைவுத் திட்டத்தை தமிழக அரசு வழங்குவதற்குத் தாமதப்படுத்திக் கொண்டே இருந்தது. பிறகுதான் இதற்குத் தீர்வு கிடைக்க வேண்டுமெனில் இந்தியாவின் நீர் மனிதர் இராஜேந்திர சிங் அவர்களை நியமிக்கலாம் என்று யோசித்தனர்.

இவரை நீதியரசர் சுவாமிநாதன் மற்றும் புகழேந்தி நியமனம் செய்கிறார்கள். நியமனம் செய்த பிறகு களத்தைச் சுற்றிப் பார்ப்பதற்கு ராஜேந்திர சிங் அவர்கள் வருகைத் தந்தார்.
பாபநாசம் மேல் அணையில் இருந்து சொரிமுத்து அய்யனார் கோவில், அகத்தியர் அருவி, பாபநாசத்தில் துணிகள் போடுகிற இடம், அம்பாசமுத்திரம் நதிநீர்க் கால்வாய், கல்லிடைக்குறிச்சி மற்றும் சேரன்மகாதேவியில் உள்ள கன்னடியன் கால்வாய், பத்தமடை கேசவ சமுத்திரம், மேலப்பாளையம் பாளையங்கால்வாய், மாநகராட்சியில் சாக்கடை கலக்கக்கூடிய குறுக்குத்துறை, குறுக்குத்துறை மண்டபம், இராமையன்பட்டி சுத்திகரிப்பு நிலையம், சத்திரம் புதுகுளம், மறுநாள் முறப்பநாடு, அருகன்குளம், ஆறாமடை, ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்த்திருநகரி, ஏரல், ஆத்தூர், புன்னகாயலில் உள்ள ஆற்றுநீர் கடலில் கலக்கும் இடம் என அனைத்து இடங்களிலும் உள்ள மாதிரிகளைச் சேமித்து ஆய்விற்கு அனுப்பிவைத்தனர்.
சுற்றுப்பயணம் முடிந்த பிறகு நெல்லை மாவட்ட ஆட்சியரின் கூட்டத்தில் பங்கேற்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளோடு ஒரு ஆலோசனை கூட்டம் நடந்தது. அதில் பொது மக்களிடம் கருத்துக் கேட்டு எவ்வாறு தாமிரபரணி ஆற்றை தூய்மை செய்யலாம் என்று கருத்துக் கேட்கப்பட்டது.
ராஜேந்திர சிங் அவர்களுக்கு உதவியாளராக பாலாஜி அவர்களையும் இரண்டு மொழிபெயர்ப்பாளர்களான இளங்கோ மற்றும் வினோத் இருவர்களையும் நீதிமன்றம் நியமித்தது.
ராஜேந்திர சிங் களத்தை ஆய்வு செய்த பிறகு ஒரு மாதத்தில் இதற்கான அறிக்கையைத் தரவிருப்பதாகக் கூறினார். மேலும் அவர் கூறியது, தான் இதுவரை பார்த்த நதிகள் அனைத்தும் உயிர்ப்போன நதிகளாக இருந்தது.

ஆனால் தாமிரபரணி அப்படி இல்லை... அது நோய்வாய்ப்பட்டு படுத்த நிலையில் இருக்கிறது. இதனை மீண்டும் மீட்டெடுத்து உயிரோட்டமாக ஓட வைப்பது நம் கடமை என்று கூறினார். மேலும் முறப்பநாடு மற்றும் ஆழ்வார்த் திருநகரி போன்ற இடங்களில் இவர் ஆய்வு செய்தபோது அங்கு தடுப்பணைகள் கட்டப்பட்டிருப்பதை அவர் பார்வையிட்டிருந்தார்.
அப்போது கூறியதாவது எந்தத் தடுப்பணையுமின்றி நேராகக் கடலுக்குச் செல்லும் நதிதான் தூய்மையானது என்று கூறினார். தேங்கி தேங்கி சாக்கடை போல் செல்கின்ற நதியானது தன்னைத் தானே கெடுத்துக் கொள்ளும் என்றும் கூறினார். மேலும் குடிநீர்த் தொட்டிக்காகப் போடப்பட்ட தடுப்பணைகளிலிருந்து துர்நாற்றம் வீசுவதாகவும் தேங்கி இருக்கின்ற நீர் கேடு விளைவிப்பதாகவும் முறப்பநாடு மற்றும் ஆழ்வார்த்திருநகரி போன்ற இடங்களில் உள்ள மக்கள் கூறினர்.
எல்லா நகரங்களில் உள்ள கழிவுகளும் தாமிரபரணியின் 11 கால்வாய்களில் தான் கிடக்கின்றது. அந்தக் கால்வாய் முழுவதும் வயல் நீரையும் சாக்கடையாக்கி மீண்டும் தாமிரபரணி ஆற்றில்தான் கலக்கிறது. இதனால் ஒட்டுமொத்த நெல்லை, தூத்துக்குடி போன்ற மாவட்டங்களில் சுகாதாரக் கேடு உண்டாகிறது. பெரும்பாலும் கேரளா போன்ற மாநிலங்களில் சாக்கடை தனியே செல்வதற்கும் குடிநீருக்கான நீர் தனியே செல்வதற்கும் தனித்தனியே கால்வாய் அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் இங்குதான் இரண்டிற்கும் ஒரே கால்வாயைப் பயன்படுத்துகிறோம். சாக்கடை மற்றும் குடிநீரை ஒன்றாக சேர்க்கவே கூடாது என்று ராஜேந்திர சிங் அவர்கள் கூறினார். பிறகு இதற்கான தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு எங்கள் கள ஆய்வு நிறைவுற்றது. பிறகு மாவட்ட ஆட்சியரோடு இது சார்ந்து ஒரு கூட்டம் நிகழ்ந்தது." என்று கூறி தாமிரபரணி ஆறானது மீண்டும் தன் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும் என்ற எண்ணத்தோடு முத்தாலங்குறிச்சி காமராசு விடைபெற்றார்.




















