"சின்ன வயதில் பெற்றோர் சொன்னால் கேட்டுக்கொள்வோம்; ஆனால், இன்று.!" - Gen Z குறித்...
`பினராயி விஜயனுடன் நெருக்கத்தால் மகளுக்கு ஒப்பந்தம்' - சிஎம்ஆர்எல் நிர்வாகி வாக்குமூலத்தால் சிக்கல்!
மாதப்படி வழக்கில் கேரள முதல்வர் பினராயி விஜயனையும் அவரது மகள் வீணா விஜயனையும் மேலும் சிக்கலுக்குள்ளாக்கும் வகையில் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சசிதரன் கர்த்தா, அமலாக்கத்துறையிடம் அளித்த வாக்குமூலம் வெளியாகி உள்ளது.
வீணாவின் எக்ஸாலாஜிக் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டதன் பின்னணியில் முதல்வர் பினராயி விஜயனுடனான நெருக்கமே காரணம் என்றும், வீணா விஜயன் சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திற்கு எந்தவொரு சேவையையும் வழங்கவில்லை என்றும் அவர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். 2024-ம் ஆண்டு நடத்தப்பட்ட விசாரணையின் போது சசிதரன் கர்த்தா அளித்த இந்த வாக்குமூலத்தை வீணா விஜயன் உறுதிப்படுத்தியுள்ளார் என்றும், கோழிக்கோட்டைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 'லேக்கர் இந்தியா கார்ப்' என்ற நிறுவனத்திலும் வீணாவிற்கு பங்களிப்பு உள்ளது என்றும் அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
குற்றம் சாட்டப்பட்டவர்களின் சொத்துக்களைப் பறிமுதல் செய்வதற்காக அட்ஜுடிகேட்டிங் அத்தாரிட்டிக்கு அமலாக்கத்துறை தாக்கல் செய்த அறிக்கையில் இத்தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இனி அட்ஜுடிகேட்டிங் அத்தாரிட்டி குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் விளக்கம் கேட்டறிந்த பிறகு, அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளது.

சி.எம்.ஆர்.எல் நிறுவனத்திற்குத் தான் நேரடியாக வழிகாட்டுதல் வழங்கியதாக வீணா விஜயன் கூறியிருந்த போதிலும், அதற்கான எவ்வித ஆதாரங்களையும் அவரால் சமர்ப்பிக்க முடியவில்லை. 2017 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில், வீணா மற்றும் அவரது எக்ஸாலாஜிக் நிறுவனத்திற்கு சி.எம்.ஆர்.எல் நிறுவனம் ரூ.2.78 கோடி தொகையை வழங்கியுள்ளது.
2014-15 காலகட்டத்தில் நஷ்டத்தில் இயங்கி வந்த வீணா விஜயனின் எக்ஸாலாஜிக் நிறுவனம், 2016-ல் பினராயி விஜயன் முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகே சசிதரன் கர்த்தாவுடன் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. மேலும், போலியான ஆவணங்களை வீணா தனது ஐபோன் மூலமாகவே உருவாக்கியதாகவும் அமலாக்கத்துறை சுட்டிக்காட்டியுள்ளது.
திருவனந்தபுரத்தில் உள்ள வீட்டில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஐபோனை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்தபோது இத்தகவல்கள் தெரியவந்துள்ளன. வழங்கப்படாத சேவைகளுக்காகவே இந்த போலி இன்வாய்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஒப்பந்த விவரங்கள் மற்றும் மின்னஞ்சல் பரிவர்த்தனைகளும் அந்த ஐபோனில் இருந்து கண்டறியப்பட்டுள்ளன.

இதுமட்டுமன்றி, மிக முக்கிய தகவல்கள் அடங்கிய நாட்குறிப்பு மற்றும் வழக்குடன் தொடர்புடைய ஏ-4 பேப்பர்களையும் அமலாக்கத்துறை கைப்பற்றியுள்ளது.
சொத்துக்கள் முடக்கம் தொடர்பாக, வீணாவின் சொந்த பெயரிலும் அவரது நிறுவனங்களின் பெயரிலும் இருந்த ரூ.16.5 லட்சம் மதிப்புள்ள முதலீடுகளை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதில் 'லேக்கர் இந்தியா' நிறுவனத்தின் ரூ.15.5 லட்சமும் அடங்கும். மேலும், வீணாவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் இருந்த ரூ.1.37 லட்சமும், எக்ஸாலாஜிக் நிறுவனத்தின் கணக்கில் இருந்த ரூ.27,585 தொகையும் முடக்கப்பட்டுள்ளன. சசிதரன் கர்த்தா மற்றும் அவரது குடும்பத்தினரின் ரூ.26 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் உட்பட, இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 12 பேரின் 29 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.
இந்த வழக்கு தற்போது பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது.















