செய்திகள் :

பொன்னியின் செல்வன் : வரலாறும் புனைவும்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 44

post image

வந்தியத்தேவனுக்கும், அவனது குதிரை செம்பாவுக்கும் இடையிலான உறவு அழகானது. கடம்பூர் மாளிகைக்குள் நுழையவிடாமல் வந்தியன் தடுக்கப்படும்போது, செம்பாவின் உதவியால் அதை மீறுகிறான். போலவே அருள்மொழிக்கு யானைகளோடு இருப்பது ஓர் உணர்வுப்பூர்வமான பந்தம். இலங்கையிலே அவன் ஒரு யானைப்பாகனாக மிக இயல்பாக சுற்றிக்கொண்டிருக்கிறான். நாகை புத்த விகாரத்திலிருந்து குணம்பெற்றுத் தஞ்சையை நோக்கிக் கிளம்பும் அருள்மொழியின் யானையைத் தாக்கி அவனை அழிக்க எதிரிகள் திட்டமிடுகிறார்கள். ஆனால், அதை அருள்மொழியும், அவனது யானையும் மிக எளிதாக எதிர்கொள்கின்றனர்.

அருள்மொழி பின்னாளில், ராஜராஜசோழன் என்று வரலாற்றில் பொறிக்கப்பட்ட மாமன்னன். அவனது ஆளுமை என்பது யானையைப் போல கம்பீரமான ஒன்று. அவனது கிசுகிசுப்பான குரலாணைகளுக்கு யானைகள் இயைந்து செல்கின்றன என்பதுதான் எத்தனைப் பொருத்தமான அழகான கற்பனை.

பொன்னியின் செல்வன் 2 - சினிமா விமர்சனம்

கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் எனும் பெருங்காதை, தமிழர்களின் மனதுக்கு மிகவும் நெருக்கமான ஒன்றாகும். அதற்கான காரணம் எளிதானதுதான். கல்கி, சுமார் ஆயிரம் வருடங்களுக்கு முன்பான சோழ வரலாற்றிலிருந்து கிடைத்த சான்றுகளின் பின்னணியிலும், நிஜத்தில் உலவிய சோழ மன்னர்களின் கதாபாத்திரங்களையும் வைத்து இந்தக் கதையை உருவாக்கியிருந்தார். ஒரு கற்பனைப் படைப்பு என்பது எப்போதும் நிகழ்வுகளின் பாதிப்பிலிருந்து உருவாகுவது இயல்புதான், அதில் தவறுமில்லை. ஆனால், பெரும்பாலான கதாபாத்திரங்களும், களமும் நிஜத்தின் பிரதிபலிப்புகளாக இருந்ததால் குறிப்பிடத்தக்க வாசகர்கள் இந்தக் கதையை நமது முன்னோர்களின் வரலாறு என்றே பிழையாகவும், உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் அணுகினர்.

அதனால்தான் பொன்னியின் செல்வன் நாவல் 1950 அக்டோபரில் கல்கியின் ’கல்கி’ வார இதழில் தொடராக வெளியாகத் தொடங்கியபோதே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. சுமார் மூன்றரை ஆண்டுகள், வாரந்தோறும் வாசகர்கள் ஆர்வத்துடன் காத்திருந்து அடுத்த அத்தியாயத்தைப் படித்தனர். தொடர் நிறைவடைந்த பின்னர் ’பொன்னியின் செல்வன்’ ஐந்து பாகங்களாகப் புத்தக வடிவில் வெளியானது. இப்போது வரை அதற்கு மறுபதிப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. புத்தகம் வாசிக்கும் வழக்கமே இல்லாதவர்கள் கூட வாசித்த ஒரே புத்தகமாக இது அமைந்தது. புத்தகம் வாங்கும் வழக்கமே இல்லாத பெரும்பாலான தமிழர்களின் வீடுகளின் அலமாரிகளில் இருக்கும் ஒரே புத்தகமாகவும் இது இடம்பெற்றது.

ஆனால், பொன்னியின் செல்வன் நாவல் என்பது உண்மையான சோழ வரலாறல்ல! நாவலின் கதை நிகழும் காலம் சுமார் கி.பி. 970 காலகட்டம். அதாவது, ராஜராஜசோழர் அரியணை ஏறி சோழப் பேரரசு அதன் உச்சத்தை அடைவதற்கு சற்று முந்தைய காலகட்டம். முதலாம் பராந்தகச் சோழரின் மூத்த வாரிசு ராஜாதித்யர் போரில் இறந்துவிட்டதால், அடுத்த வாரிசான கண்டராதித்யர் அரியணை ஏறுகிறார். இங்குதான் ஒரு எதிர்பாரா திருப்பம் ஏற்படுகிறது. பொதுவாக ஒருவர் வாரிசுரிமையிலோ, அல்லது சதியின் மூலமாகவோ, அல்லது இப்படி தற்செயலாகவோ அரியணை ஏறிவிட்டால், அது தொடர்ச்சியாக அவருடைய மூத்த வாரிசு எனும் உரிமையின்படிதான் ஆட்சி கைமாறிச் செல்லும். ஆனால், கண்டராதித்யர் மறையும் போது அவரின் ஒரே வாரிசான மதுராந்தக உத்தமச் சோழர் குழந்தையாக இருந்ததாலும், நாட்டுப் பாதுகாப்பு கேள்விக்குறியாக இருந்த சூழலாலும், உத்தமச் சோழரின் தாயார் செம்பியன் மாதேவியின் அனுமதியுடன் கண்டராதித்யரின் தம்பி அரிஞ்சயர் பதவியேற்கிறார். இவருக்கு இன்னும் தம்பிகள் இருந்தனர் என்பது வேறு விஷயம்!

'பொன்னியின் செல்வன்' படத்தில் விக்ரம்

ஆனால், அரிஞ்சயரின் குறுகிய கால ஆட்சிக்குப்பின் அவரது மகன் சுந்தரச் சோழர் ஆட்சிக்கு வந்துவிடுகிறார். ஆனால், ஒரு கட்டத்தில் சுந்தரரும் உடல்நலமற்றுப் போன சூழலில் அடுத்த வாரிசாக, அவரது மூத்த மகன் ஆதித்ய கரிகாலன் எனும் பெயர் அடிபட்டுக் கொண்டிருக்கும் நிலையில், வளர்ந்துவிட்ட மதுராந்தக உத்தமச் சோழர் தனக்குப் பதவி வேண்டும் என்று கேட்கிறார். வழக்கமாக இப்படி நடப்பதில்லை. மாறாக இப்படியான இடத்தில் பெருந்திரைமறைவு வேலைகளும், குழப்பங்களும்தான் நடக்கும். அகாலமாக ஆதித்ய கரிகாலர் வேறு கொல்லவும் படுகிறார். அதற்கான காரணமும் அறியப்படவில்லை. ஆனாலும், ஒரு விநோதமான உடன்படிக்கைக்குப் பின்னர் ஆதித்ய கரிகாலனின் தம்பி அருள்மொழிவர்மர் பதவியை உத்தமச் சோழருக்கு விட்டுக் கொடுக்கிறார். அந்த உடன்படிக்கையின் படி உத்தமச் சோழருக்குப் பின்னர் பதவி அவரது சொந்த வாரிசுக்குப் போகாமல், மீண்டும் அருள்மொழிக்கே வருகிறது. இந்த அருள்மொழியே பின்னாளில் சிறப்புற ஆட்சி செய்து, தஞ்சைப் பெருவுடையார் கோவிலைக் கட்டிய ராஜராஜசோழர் என்று புகழப்பெற்றவர். இவரே இந்தக் கதையில் பொன்னியின் செல்வன் என்றழைக்கப்படுகிறார்.

பார்த்திபன் கனவு, சிவகாமியின் சபதம் போன்ற வரலாற்றுப் புனைவுகளை ஏற்கனவே எழுதியிருந்த கல்கி, அரிதான வகையில் இப்படி அண்ணன் தம்பியின் வாரிசுகளுக்கிடையே சோழ அரியணை, கைமாற்றிக் கொள்ளப்பட்ட விசயத்தில் ஆர்வமாகி, ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பான தமிழ் நிலத்தை ஒட்டிய கதைக்களத்தையே தன் கற்பனையில் சிறப்பான வகையில் உருவாக்கியிருந்தார். ஒரே ஒரு கல்வெட்டில் காணப்படும் வந்தியத் தேவன் எனும் கதாபாத்திரத்தை அடிப்படையாக வைத்து, அவனது பார்வையில் மொத்தக் கதையையும் சொன்னது, காதல் கதைகளை இணைத்துக் கொண்டது, மந்தாகினி, நந்தினி, திருமலை போன்ற சுவாரசியமான கற்பனைக் கதாபாத்திரங்களை உருவாக்கியது, ஆதித்ய கரிகாலன் இறப்புக்கான ஒரு கற்பனைச் சூழலை உருவாக்கியது, உத்தமச் சோழரை சேந்தன் அமுதன் எனும் பெயரில் இடம் மாற்றி வைத்தது என ஏராளமான நாடகத் தருணங்களை உருவாக்கியது கல்கியின் சாதனை.

பொன்னியின் செல்வன்

இப்படி இந்தப் பொன்னியின் செல்வன் மக்களின் பேராதரவைப் பெற்றதால், 1958-ல் நாடோடி மன்னன் திரைப்படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்குப் பிறகு, எம்.ஜி.ஆர் தனது அடுத்தக் கனவுத் திரைப்படமாகப் பொன்னியின் செல்வன் நாவலைத் தேர்ந்தெடுத்தார். படத்தைத் தானே தயாரித்து, இயக்கி, நடிக்கவும் திட்டமிட்டார். அச்சமயம் கல்கி மறைந்துவிட்டதால் அவரது குடும்பத்திடமிருந்து நாவலின் திரைப்பட உரிமையையும் பெற்றார். ஜெமினி கணேசன், வைஜெயந்திமாலா, பத்மினி, சாவித்திரி, நம்பியார் உள்ளிட்ட அன்றைய முன்னணி நட்சத்திரங்களை நடிக்க வைக்கவும் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவரது தீவிர அரசியல் பணி மற்றும் விபத்து என பல காரணங்களால் அது தள்ளிப் போடப்பட்டுக் கொண்டே போய் அவரது வாழ்நாளில் அந்தப் படம் உருவாகாமலே போய்விட்டது.

எம்.ஜி.ஆருக்கு அடுத்து அவரிடமிருந்தே நாவலின் திரைப்பட உரிமையைப் பெற்று வைத்திருந்த கமல்ஹாசன், 1980-களின் இறுதியில் மணிரத்னத்துடன் இணைந்து இக்கதையைப் படமாக்கத் திட்டமிட்டார். 1987-ல் நாயகன் படத்தில் இருவரும் இணைந்து பணியாற்றிய பிறகு இந்தத் திட்டம் தீவிரமானது. ஐந்து பாகங்களைக் கொண்ட நாவலைத் திரைப்படமாக்குவது குறித்து இருவரும் விரிவாக விவாதித்தனர். படத்தின் திரைக்கதைக்கான பணிகளும் நடைபெற்றன. ரஜினிகாந்த், சத்யராஜ், பிரபு உள்ளிட்ட நடிகர்களை நடிக்க வைக்கவும், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்யவும், இளையராஜா இசையமைக்கவும் திட்டமிடப்பட்டிருந்தது. கமல்ஹாசன் கதாநாயகனாக நடிப்பதும் உறுதி செய்யப்பட்டிருந்தது.

ஆனால், இரண்டு முக்கியமான சிக்கல்கள் இருந்தன. அப்போது இரண்டு மூன்று பாகங்கள் கொண்ட படங்கள் எனும் வழிமுறை பெரியளவில் நம்பிக்கைக்கு உரிய பயன்பாட்டில் இல்லாத நிலையில், ஐந்து பாகங்களைக் கொண்ட நாவலை ஒரே திரைப்படத்துக்குள் கொண்டு வருவது கடினமாக இருந்தது. கூடுதலாக கமல்ஹாசன் விரும்பிய துல்லியத்தன்மையைக் கொண்டுவருவதற்கு பெரும் தொழில்நுட்ப வசதிகளை வெளிநாடுகளிலிருந்து கொண்டுவர வேண்டியிருந்தது. அதற்கான செலவும் அன்றைய சூழலில் மிகப் பெரிதாக இருந்தமையால், அந்தத் திட்டம் கைவிடப்பட்டது. பின்னர் மணிரத்னம் 2000 சமயங்களில் இந்தப் படத்தை ஆரம்பிக்க எண்ணி அதுவும் நடக்கவில்லை. இறுதியாக 2020-களில் மணிரத்னத்துக்கே அதைச் சாத்தியமாக்கும் வாய்ப்பு அமைந்தது. பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட கமல்ஹாசனும், ரஜினிகாந்தும் இந்தப் படம் சார்ந்த முந்தைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார்கள்.

பொன்னியின் செல்வன்

இடையே 1973-ல் ’ராஜராஜசோழன்’ எனும் பெயரில் ஒரு திரைப்படம் உருவாகியிருந்தது. ஏ.பி.நாகராஜன் திரைக்கதை, இயக்கத்தில் வெளியான அந்தப்படத்தின் கதை என்பது வேறு. அது தஞ்சைக்கோவிலைக் ராஜராஜசோழன் எப்படிக் கட்டினான், இறைத்தொண்டு மற்றும் தமிழ்த்தொண்டு போன்றவற்றில் அவன் எவ்வாறு செயல்பட்டான் என்பதை அடிப்படையாகக் கொண்டிருந்தது. அதில் சிவாஜிகணேசன் பொன்னியின் செல்வராக நடித்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டு பாகங்களாக உருவான தற்போதைய பொன்னியின் செல்வன் சினிமாவை இணைந்து தயாரித்திருந்தது மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் சார்பில் மணிரத்னம் மற்றும் லைகா புரடக்‌ஷன்ஸ் நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் ஆகியோர். கல்கியின் கதைக்கு மணிரத்னம், இளங்கோ குமரவேல் மற்றும் ஜெயமோகன் மூவரும் இணைந்து திரைக்கதை எழுதியிருந்தார்கள். ஜெயமோகன் வசனம் எழுதியிருந்தார். இளங்கோ குமரவேலுக்கு 1990-களின் இறுதியில் அவரது ’மேஜிக் லேண்டர்ன்’ எனும் நவீன நாடகக்குழுவுக்காக பொன்னியின் செல்வன் கதையை நாடக வடிவத்துக்கு மாற்றி எழுதி, நடித்து மேடையேற்றிய அனுபவம் இருந்தது.

இவர்களின் பங்களிப்பில், இப்படி ஒரு பெரிய கதை, சினிமாவுக்கான திரைக்கதையாக கச்சிதமாக உருமாறியிருந்தது. நாவலில் வர்ணனைகள், கூறியது கூறல், மனவோட்டங்கள், வியாக்கியானங்கள் மிக அதிகமாக இருந்தன. அவையெல்லாம் தவிர்க்கப்பட்டிருந்தன. போலவே, நாவலின் சில நிகழ்வுகள் எளிமைப்படுத்தப்பட்டிருந்தன. உதாரணத்துக்கு, மதுராந்தகனுக்கு பதவியைத் தருவது குறித்த சுந்தர சோழரின் எண்ணம், நாவலில் முதலிலிருந்தே ஆதரவாக இருக்கும். ஆனால், படத்தில் அப்படியிருக்காது. அதை அப்படியே வைத்திருந்தால் சுந்தர சோழருக்கான காட்சிகள் மிக அதிகமாக வைக்க வேண்டியிருந்திருக்கும்.

போலவே கடம்பூர் மாளிகை நிகழ்வுகளை ஒப்பிட்டாலே ஒரு நாவலுக்கும், ஒரு சினிமாவுக்கும் உள்ள வித்தியாசம் எளிதில் விளங்கிவிடும். கோட்டை வாசலில் வந்தியனின் தகராறு, உள்ளே பழுவேட்டரையருடன் அறிமுகம், தேவராளன் ஆட்டம், சதியாலோசனை ஒட்டுக்கேட்பு என நான்கே காட்சிகளாக முடிந்து போய்விட்டன அவை. நாவலில் இது பல அத்தியாயங்களாக நீளும் மிகப் பெரிய பகுதி. அநிருத்தர் பாத்திரமோ நாவலின் துவக்க பாகங்களில் அசகாய சூரராக விவரிக்கப்படுகிறது. ஆனால் இறுதியில் அந்த சூரத்தனம் எதற்கும் பயன்படுவது போன்ற கதையமைப்பு இல்லை. அதனால் அதைச் சுருக்கியிருக்கிறார்கள். ஆனால், சேந்தன் அமுதன்தான் கண்டராதித்யரின் உண்மையான மகன் உத்தமச் சோழன், ஒரு சிவபக்தனாக அவனை வளர்க்கவே செம்பியன் மாதேவி அவனை பூக்காரர் வீட்டில் வளரவிட்டுவிட்டு, அவனது இடத்தில் ஒரு தத்துப்பிள்ளையை வளர்ப்பதாக நாவலின் கதையமைப்பு இருக்கும். இது நாவலின் முடிவில் ஒரு பெரும் டிவிஸ்ட்டுக்கு வழிவகுக்கும். அதன்படி தத்துப்பிள்ளையாக வளர்ந்த பாண்டியத் துருப்புதான் வில்லன், பூக்காரராக வளர்ந்த உத்தமச் சோழர் நல்லவர்... அவருக்கே, பொன்னியின் செல்வர் இறுதியில் மணிமுடி சூட்டுவதாக கதை நிறைவடையும்.

பொன்னியின் செல்வன்

ஆனால், நேரம் கருதியோ என்னவோ அதை சினிமாவில் நீக்கிவிட்டார்கள். இதனால் உத்தமச் சோழர் தாயிடமே வளர்கிறார், ஆனால் பதவி ஆசை கொண்டு தாயையே எதிர்க்கிறார், சுந்தர சோழருக்கு எதிராகச் சதி செய்கிறார் என்றெல்லாம் காட்சிகள் வருகின்றன. ஆனால், அவருக்கே இறுதியில் பொன்னியின் செல்வர் பட்டம் சூட்டுவதாக கதை முடிவதால், என்னதான் திருந்தினாலும், வில்லனுக்கே பதவி போவதான உணர்வைப் படம் கொடுத்துவிடுகிறது. இது சில பார்வையாளர்களுக்கு அதிருப்தியைக் கொடுத்திருக்கலாம். இப்படிச் சில மாற்றுக் கருத்துகள் இருந்தாலும் இந்த முயற்சி என்பது தமிழின் மிகப்பெரிய, மிக முக்கியமான முயற்சி என்ற வகையில் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது என்பதே உண்மை.

கதை நாயகன் வந்தியத்தேவனாக கார்த்தி நடித்திருந்தார். படம் முழுதும் துள்ளலும், குறும்புமாக வளையவரும் கதாபாத்திரம். நாவலைப் படித்தவர்களும் அவரை வந்தியத்தேவனாக ஏற்றுக்கொள்ளும் வகையில் சிறப்பாகச் செய்திருந்தார். அவரது இணை சோழ இளவரசி குந்தவையாக திரிஷா நடித்திருந்தார். ஆற்றின் நடுவே ஓர் மண் திட்டில் இருவரும் சந்திக்கும் ஒரு காதல் காட்சி படத்தில் இடம்பெறுகிறது. தமிழர்தம் தொல்வாழ்வியல் மரபாகப் போற்றப்படும் காதலும், வீரமும் வெளிப்படும் மிக அழகான காட்சி. கார்த்தியும், திரிஷாவும் அந்தக் காவியக் காதலிணையை நம் கண்முன்னால் கொண்டுவந்தனர்.

நாவலில் குறைவான பகுதியில் வருகிற, ஆனால் சினிமாவில் குறிப்பிடத்தகுந்த பகுதியை எடுத்துக்கொண்ட ஆதித்த கரிகாலனாக விக்ரம் நடித்திருந்தார். கடம்பூர் மாளிகையில் வைத்து சிற்றரசர்கள் முன்னிலையில், குதிரை மீதமர்ந்து சுழன்றபடி கம்பீரமாக உரையாடும் காட்சியில் விக்ரமின் ஆகிருதி வெளிப்பட்டது. இவரது எதிர் இணைப் பாத்திரமான நந்தினி எனும் பேரழகியாக ஐஸ்வர்யா ராய் நடித்திருந்தார். ஐஸ்வர்யா, சோழ அரியணையைக் கண்ணிறையக் காணும் காட்சியில் அவரது நடிப்பும், பின்னணி இசையும் புல்லரிக்க வைத்தது.

பொன்னியின் செல்வன் எனப்படுகிற அருள்மொழிவர்மனாக ரவி மோகன் நடித்திருந்தார். எம்ஜிஆர், கமல்ஹாசன் உள்ளிட்ட பெரும் ஆளுமைகள் நடிக்க ஆசைப்பட்ட கதாபாத்திரம், இறுதியாக ரவிக்கு அமைந்தது. சிறப்பாக நடித்திருந்தார். அமைதியும், கம்பீரமும், கூர்மையான பார்வையுமாக அருள்மொழியை வெளிப்படுத்தினார் ரவி. இளவரசனாக ஒருபுறமும், யானைப் பாகனாக மாறுவேடம் புனைந்து மறுபுறமும் வளைய வரும் காட்சிகள் ரசிக்க வைத்தன. இவர் மீது மையல் கொள்ளும் வேளார் இளவரசி வானதியாக சோபிதா துலிபலாவும், சமுத்திரகுமாரி எனும் பூங்குழலி பாத்திரத்தில் ஐஸ்வர்யா லட்சுமியும் நடித்திருந்தார்கள். இருவருமே குறைவான நேரத்திலும் நிறைவான பங்களிப்பைக் கொடுத்திருந்தார்கள்.

பொன்னியின் செல்வன்

பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்னப் பழுவேட்டரையர்களாக சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடித்திருந்தார்கள். அநிருத்த பிரம்மராயரின் பலம் வாய்ந்த ஒற்றன் திருமலை எனும் ஆழ்வார்க்கடியானாக ஜெயராம் நடித்திருந்தார். மேலும் பிரபு, நாசர், லால், விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், நிழல்கள் ரவி, ஜெயசித்ரா, கிஷோர், ரகுமான், அஸ்வின் உள்ளிட்ட பலரும் தங்களுக்கான கதாபாத்திரங்களைச் சிறப்பாகச் செய்திருந்தார்கள்.

ரவிவர்மனின் ஒளிப்பதிவும், தோட்டா தரணியின் கலை இயக்கமும் இந்தப் படத்தின் வரலாற்றுப் பிரம்மாண்டத்துக்குப் பெரும் பங்களிப்பைச் செய்திருக்கின்றன. அரண்மனைகளின் உட்புற, வெளிப்புறக் காட்சிகள், போர்க்களங்கள், கடல் பயணங்கள், இயற்கை எழில் கொஞ்சும் நிலப்பரப்புகள் என ஒவ்வொரு காட்சியையும் ஓர் அழகிய ஓவியத்தைப் போல வடிவமைத்துக் காட்சிப் படுத்தியிருந்தார்கள்.

ஏ.ஆர். ரகுமானின் இசை, படத்தின் உணர்ச்சிகரமான தருணங்களுக்கும், பிரம்மாண்டமான காட்சிகளுக்கும் உறுதுணையாக நின்றது. நந்தினி-குந்தவை சந்திக்கும் காட்சி, குந்தவை-வந்தியன் காட்சிகள், அருள்மொழியின் அறிமுகக் காட்சி என ஏராளமான காட்சிகளின் வீச்சை பின்னணி இசை பன்மடங்காக்கியிருந்தது. வந்தியத்தேவன் வடக்கிலிருந்து கடம்பூரை நோக்கி சோழநாட்டுக்குள் வரும் தொடக்கப்பாடலான, ’பொன்னிநதி பார்க்கணுமே’ பாடலை ஏ.ஆர்.ரகுமான், ஏ.ஆர்.ரிஹானா, பம்பா பாக்யா பாடியிருந்தார்கள். ஆதித்ய கரிகாலனின் வெற்றிகளைப் பறைசாற்றும் ’சோழா சோழா’ பாடலை சத்ய பிரகாஷ், நகுல் அபயங்கர், மகாலிங்கம் பாடியிருந்தனர். வந்தியத்தேவன், குந்தவை காதல் பாடலான ’அகநக’ பாடலை சக்திஸ்ரீ கோபாலன் பாடியிருந்தார். பொன்னியின் செல்வனின் ஆளுமையைப் போற்றும் ’வீரா ராஜ வீரா’ பாடலை சங்கர் மகாதேவன், சித்ரா, ஹரிணி ஆகியோர் பாடியிருந்தனர். இந்தப் பாடல்களை கவிஞர் இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருந்தார். இன்னும் பல குறிப்பிடத்தகுந்த பாடல்களும் படத்தில் இடம் பெற்றிருந்தன.

பொன்னியின் செல்வன்

சிறந்த படம், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த பின்னணி இசை, சிறந்த ஒலியமைப்பு ஆகிய நான்கு பிரிவுகளில் இந்தப்படம் தேசிய விருதுகளையும், இன்னும் பல்வேறு அமைப்புகளின் ஏராளமான விருதுகளையும் குவித்தது.

வரலாறு நமக்கு மன்னர்களின் பெயர்களையும், ஆட்சிக்காலங்களையும், போர்களையும், கல்வெட்டுகளையும் விட்டுச் செல்கிறது. ஆனால் அந்த மன்னர்களின் மனங்களுக்குள் என்ன இருந்தது, அவர்கள் எதைக் காதலித்தார்கள், எதை வெறுத்தார்கள், எதைத் தியாகம் செய்தார்கள், எதற்காகப் போராடினார்கள் என்பதை நம்மால் சொல்ல முடியாது. அந்த இடத்தைப் புனைவு நிரப்புகிறது.

நிறையவே வரலாற்று, புராணப் புனைகதைகள் தமிழில் சினிமாவின் தொடக்க காலத்தில், அனேகம் படமாக்கப்பட்டிருந்தாலும் தற்போதையச் சூழ்நிலையில் அப்படியான முயற்சிகள் மிக அரிதாகவே இருக்கின்றன. அதற்கான வலுவான திரைக்கதைகளை உருவாக்குவது அசாதாரணமான வேலை என்றால், அதைப் படமாக்குவது மிக அதிக பொருட்செலவு தேவைப்படும் வேலையாக இருக்கிறது. ஆனாலும், அது சாத்தியம்தான் என்று நிரூபித்து, சினிமாவின் இன்னொரு கதவைத் திறந்து வைத்திருக்கிறது மணிரத்னத்தின் இந்தப் பொன்னியின் செல்வன்!

Hello Kadhal: "இருவரும் சேர்வதற்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன்" - சதீஷ் கலகல

ஆர்யா, நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடித்திருக்கும் 'ஹலோ காதல்' திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகிறது. மலையாளத்தில் 'பிரணய விலாசம்' படத்தை இயக்கிய இயக்குநர் நிகில் முரளி, இப்படத்தை இயக்கி... மேலும் பார்க்க

"அவர் உயிரோடு இருந்திருந்தால் 10 ஹீரோக்களை அறிமுகப்படுத்தியிருப்பார்" - நினைவுகளைப் பகிரும் ஆர்யா

ஆர்யா, நிகிலா விமல், வைஷ்ணவி சைதன்யா ஆகியோர் நடித்திருக்கும் 'ஹலோ காதல்' திரைப்படம் டிசம்பர் 4-ம் தேதி வெளியாகிறது. மலையாளத்தில் 'பிரணய விலாசம்' படத்தை இயக்கிய இயக்குநர் நிகில் முரளி, இப்படத்தை இயக்கி... மேலும் பார்க்க

"அந்த நபரின் வாழ்க்கை கருதி... அவரை எந்தக் கடவுள் வந்தாலும் காப்பாற்ற முடியாது!" - இயக்குநர் சேரன்

ஜெயா டி.வி-யில் இயக்குநர் மற்றும் நடிகர் சேரன் 'யார் சரி' என்கிற விவாத நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த நிகழ்ச்சியின் சமீபத்திய எபிசோட் 'பாப்புலாரிட்டி எதில் அதிகம் கிடைக்கிறது? சினிமாவா?... மேலும் பார்க்க

"பாலிவுட்டை விடத் தென்னிந்தியத் திரையுலகம் பல மடங்கு சிறந்தது" - நடிகை சமீரா ரெட்டி கூறியதென்ன?

நடிகை சமீரா ரெட்டி பாலிவுட்டை விட தென்னிந்தியத் திரையுலகமே சிறந்தது என்று தெரிவித்திருக்கிறார்.'Hindustan Times' ஊடகத்திற்கு பேட்டி அளித்திருக்கும் சமீரா ரெட்டி, "தென்னிந்தியத் திரையுலகில் பணியாற்றியத... மேலும் பார்க்க

அனிருத் - காவியா திருமண வரவேற்பு: பங்கேற்ற பல மாநில முதல்வர்கள் டு திரை நட்சத்திரங்கள் | Photo Album

அனிருத் - காவ்யா மாறன் திருமண வரவேற்பு நிகழ்வு! - முதல்வர் விஜய், திரை பிரபலங்கள் பங்கேற்பு!சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglRசினிமா தொடர்பான எக்ஸ... மேலும் பார்க்க