அதிமுக: "இபிஎஸ்-ஐ ஆஹா ஓஹோவென புகழ்ந்தவர்தானே செங்கோட்டையன்" - செல்லூர் ராஜு சாடல...
மழைக்காலத்தில் வீசும் 'மண் வாசனை' - இதன் பின்னணியில் உள்ள அறிவியல் தெரியுமா?
மழை பெய்யத் தொடங்கும்போது அல்லது மழை வருவதை போன்று இருக்கும்போது ஒரு விதமான வாசனை வருவதை நாம் அனைவரும் அனுபவித்திருப்போம்.
அந்த 'மண் வாசனை' எப்படி உருவாகிறது என்று நீங்கள் எப்போதாவது யோசித்ததுண்டா? வெறும் மண்ணும் தண்ணீரும் சேரும்போது மட்டும் இந்த வாசனை உருவாவதில்லை, இதற்குப் பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்கள் இங்கு தெரிந்துக்கொள்ளலாம்.
மழை பெய்யும்போது வரும் இந்த மண் வாசனைக்கு அறிவியலில் 'பெட்ரிகோர்' (Petrichor) என்று பெயர் உண்டு.. 1964ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா விஞ்ஞானிகளான இசபெல் பியர் மற்றும் டிக் தாமஸ் ஆகியோர் இந்த பெயரை உருவாக்கியுள்ளனர். இந்த வாசனைக்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணங்களையும் கண்டறிந்துள்ளனர்.
பாறை மற்றும் மண்ணில் தங்கியிருக்கும் ஒருவகை எண்ணெய் போன்ற திரவம், மழையின் போது காற்றில் கலப்பதால்தான் இந்த வாசனை வருகிறது என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர்.
அதாவது இந்த மண் வாசனைக்கு 'ஜியோஸ்மின்' மற்றும் '2-MIB' எனப்படும் வேதிப்பொருட்கள் இதற்கு மிக முக்கியக் காரணம் என்றும் மண்ணில் வாழும் ஒருவகை பாக்டீரியாக்களே (Streptomyces) இந்த வேதிப்பொருட்களை உற்பத்தி செய்வதாக கண்டறிந்துள்ளனர்.
வெயில் காலத்தில் மண் காய்ந்து போகும்போது, இந்த பாக்டீரியாக்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள 'ஸ்போர்ஸ்' எனப்படும் விதைகளை உருவாக்குகின்றனவாம்.
மழைத்துளிகள் மண்ணில் வேகமாக தொடும்போது, இந்த வேதிப்பொருட்கள் மற்றும் பாக்டீரியாக்களின் வாசம் காற்றுடன் கலந்து மேலே எழும்புகிறது. இதுவே நமக்கு மண் வாசனையாகத் தெரிகிறது என்று பாப்புலர் சயின்ஸ் இதழில் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
மனித மூக்கு இந்த 'ஜியோஸ்மின்' வாசனையை மிகத் துல்லியமாக கண்டுபிடிக்கும் திறன் கொண்டது என்றும் நம் முன்னோர்களுக்குத் தண்ணீர் இருக்கும் இடத்தைக் கண்டுபிடிக்க இந்த வாசனை உதவியிருக்கலாம் என்றும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
மனிதர்கள் மட்டுமல்ல, ஒட்டகங்கள் பாலைவனத்தில் நீர்நிலைகளைக் கண்டறியவும், சில பூச்சிகள் முட்டையிடத் தகுந்த இடத்தைத் தேடவும் இந்த வாசனையைப் பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தனை நாட்கள் மண்ணும் தண்ணீரும் சேரும்போது தான் மண் வாசனை வருகிறது என்று தானே நினைத்திருந்தோம்..!


















