மாணவிக்கு பாலியல் தொல்லை: திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழக பேராசிரியர்கள் கைது
மாணவிக்கு பாலியல் தொல்லை: திருப்பதி சமஸ்கிருத பல்கலைக்கழக பேராசிரியர்கள் கைது
பாலியல் வன்முறை
ஆந்திரா மாநிலம் திருப்பதியில் தேசிய சமஸ்கிருத பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இந்த பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் பேராசிரியர்கள் லட்சுமண் குமார், சேகர் ரெட்டி ஆகியோர் ஒடிசாவைச் சேர்ந்த 22 வயது மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்தனர்.
லட்சுமண் குமார் என்ற அந்த பேராசிரியர், தன்னிடம் இருந்த மாணவியின் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோவை பயன்படுத்தி, தொடர்ந்து தனது ஆசைக்கு இணங்கும்படி மிரட்டி வந்தார்.
ஏற்கனவே அந்த மாணவியை அந்த பேராசிரியர் பாலியல் வன்முறை செய்ததாக கூறப்படுகிறது. அந்த வீடியோவைத்தான் பயன்படுத்தி லட்சுமண் குமார் தொடர்ந்து மிரட்டி வந்தார்.

வீடியோவை காட்டி மிரட்டல்
அதே வீடியோவை பயன்படுத்தி பேராசிரியர் சேகர் ரெட்டியும் அந்த மாணவியிடம் தனது ஆசைக்கு இணங்கும்படி கூறி மிரட்டி வந்தார்.
இரண்டு பேராசிரியர்களும் தொடர்ந்து புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என்று மிரட்டி வந்ததால், இது குறித்து மாணவி பல்கலைக்கழகத்தில் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்தார்.
அந்த புகாரின் அடிப்படையில் பல்கலைக்கழகக் குழு இது குறித்து விசாரித்தது.
விசாரணையில் குற்றச்சாட்டு உண்மை என்று தெரிய வந்ததால், இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் உடனே சம்பந்தப்பட்ட இரண்டு பேராசிரியர்களுக்கு எதிராக போலீஸில் புகார் செய்தார்.
அவர்கள் மீது மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு, பல்கலைக்கழகத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

படிப்பை கைவிட்ட மாணவி
இச்சம்பவத்தையடுத்து, சம்பந்தப்பட்ட மாணவியிடம் அவரது பெற்றோர் வீட்டிற்கு வந்துவிடும்படி கூறினர். இதையடுத்து அம்மாணவி படிப்பை கைவிட்டுவிட்டு சொந்த ஊருக்கு சென்றுவிட்டார்.
ஒடிசாவிற்கு சென்று அவரிடம் வாக்குமூலம் பெற போலீஸார் திட்டமிட்டுள்ளனர். மேலும், இரண்டு பேராசிரியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது குறித்து திருப்பதி ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி. குருமூர்த்தி, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் தேசிய மனித உரிமைக் கமிஷனுக்கு புகார் அனுப்பியுள்ளார்.
இப்பிரச்னையை பாராளுமன்றத்திலும் அவர் எழுப்பினார். இப்பிரச்னை பல்கலைக்கழகத்தில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.

















