மாநாடு : ஆடுபுலி ஆட்டம்! | ஆதி தாமிரா | `சினி'ஸ்கோப் 43
அப்துல் காலிக் எனும் இளைஞனின் நண்பன் ஈஸ்வரன் ஒரு பெண்ணைக் காதலிக்கிறான். ஆனால், அந்தப் பெண்ணுக்குத் திருமண ஏற்பாடு நடக்கிறது. அங்கிருந்து அந்தப் பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்து நண்பனுக்குத் திருமணம் செய்து வைப்பதற்காக ஊட்டிக்கு ஈஸ்வரனோடு வருகிறான் காலிக். அதே நாளில், மாநில முதல்வரைக் கொல்லவும், அதன் மூலம் மதக்கலவரத்தையும் ஏற்படுத்தி அமைதியைக் குலைத்துக் குளிர்காயவும் ஒரு கும்பல் திட்டம் தீட்டியுள்ளதை அறியவருகிறான் காலிக்.
எதிர்பாரா விதமாக காலச்சுழலில் சிக்கிக்கொள்ளும் காலிக்குக்கு, அவன் கொல்லப்படும் போதெல்லாம் அந்த நாள் மீண்டும் தொடங்குகிறது. சதியின் பின்னணி விபரங்களைச் சிறிது சிறிதாக தெரிந்துகொள்ளும் நிலையில் அந்தச் சதியை முறியடிக்க முயலுகிறான். ஆனால், அவனை அடையாளம் கண்டுகொள்ளும் காவல் அதிகாரி தனுஷ்கோடி ஒவ்வொரு முறையும் சதியை வெற்றிகரமாக செயல்படுத்திக் கொண்டிருக்கிறான். அவனால், அது எப்படி முடிந்தது? இறுதியாக, காலிக் முதல்வரை அந்தச் சதியிலிருந்து காப்பாற்றினானா, தனுஷ்கோடியை அவனால் தடுக்க முடிந்ததா என்பது கதை.

ஒவ்வொரு தடவை அப்துல் காலிக் இறக்கும் போதும், அந்த நாள் ஒரு குறிப்பிட்ட நேரத்திலிருந்து மீண்டும் தொடங்குகிறது. ஒவ்வொரு முறையும் அவன் அந்தச் சதிக்குக் காரணமானவர்களை நெருங்குவது போலவே, பிரதான எதிரியான டிசிபி தனுஷ்கோடியும், காலிக்கை நெருங்குகிறான்.
ஒரு தடவை காலிக்கையும், நண்பர்களையும் கூண்டோடு பிடிக்கும் தனுஷ்கோடி, காலிக் இறந்தால் இந்த விளையாட்டு முடியாது என்பதை உணர்ந்துகொண்டு மிகக்கவனமாக அவனைக் கட்டி வைத்திருக்கிறான். ஆனால், மொத்தச் சதியின் மூலமாக இருக்கும் அமைச்சர் பரந்தாமன் அப்போது அங்கு வருகிறான். அத்தனை ரகசியமான திட்டம் எப்படி இப்படி லோல்பட்டுக்கொண்டு கிடக்கிறது எனும் பேரதிர்ச்சி அவனுக்கு. காலிக்கைக் கொல்ல நினைக்கிறான். காலிக்குக்கும் அதுதான் தேவை.
முந்தைய முயற்சியில், பரந்தாமனிடமே போய் உண்மையைச் சொல்லி மாட்டிக் கொண்டவனல்லவா? இனி திட்டத்தை மாற்றிக்கொள்ள வேண்டுமே! ஆனால், அங்கு வரும் தனுஷ்கோடி காலிக்கைக் கொல்லவிடாமல் பரந்தாமனைத் தடுப்பதோடு, அவன் இறக்கக்கூடாது என்றும் வலியுறுத்துகிறான். இந்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, பரந்தாமனுக்கும், தனுஷ்கோடிக்கும் இடையே பகையை மூட்டிவிட முயற்சிக்கிறான் காலிக்.
"நோ தலிவரே, நோ தலிவரே, அவன் சாகக்கூடாது தலிவரே” -தனுஷ்கோடி
”சூப்பர் தலிவரே, நம்ம பிளான் படி எல்லாம் பக்காவா போயிகிட்டிருக்கு” -காலிக்
”என்னடா உளர்ற? என்னடா நம்ம பிளான்?” -தனுஷ்கோடி
”அதாண்டா நானும் கேட்கிறேன், என்னடா உங்க பிளான்?” -பரந்தாமன்
”ஐயோ தலிவரே, நீங்க சிஎம் ஆவுறதுதான் பிளான். இவனை விடுங்க நான் பாத்துக்குறேன்” -தனுஷ்கோடி
”அப்ப இவனைக் கொல்லு, முதல்ல!” -பரந்தாமன்
”நான்தான் சொல்றேன்ல, அவரு என்னைக் கொல்லமாட்டாரு தலிவரே. எங்க ரெண்டு பேரு திட்டமே உங்களைப் போடுறதுதான்” -காலிக்
”என்னை நம்புங்க தலிவரே” -தனுஷ்கோடி
”அப்ப இவனைக் கொல்லு, நான் நம்புறேன்” -பரந்தாமன்
”நாந்தான் சொல்றேன்ல, அவரு என்னைக் கொல்லமாட்டாருனு” -காலிக்
”டேய் உன்னைக் கொன்னுடுவேண்டா...” -தனுஷ்கோடி
”சொல்லிகிட்டே இருக்கிற, ஆனா கொல்லமாட்டேங்குற, என்னடா உங்களுக்குள்ள கூட்டு?” -பரந்தாமன்
”தலிவரு கண்டுபுடிச்சிட்டாரு தலிவரே...” -காலிக்

அப்படியொரு உணர்வெழுச்சியான காட்சியாக இருந்தது இது. காலிக் மற்ற இருவரையும் ஒரே சமயத்தில் ஏமாற்ற நினைக்கிறான். பரந்தாமன் ஒரே நேரத்தில் இருவரையும் சந்தேகப்படுகிறான். தனுஷ்கோடி உண்மையை விளங்க வைக்க முடியாமல் இருவருக்குமிடையே சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறான். இந்த அதிரிபுதிரியான காட்சிக்குத் தியேட்டரே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது நினைவிலாடுகிறது.
அப்துல் காலிக்காக சிம்பு நடித்திருந்தார். ஒரு குறிப்பிட்ட காலச் சுழற்சிக்குள் சிக்கிக்கொண்டு, தொடக்கத்தில் ஒன்றும் புரியாமல் திணறி நிற்கும் போதும், ஒவ்வொரு முறையும் அதற்கு எதிர்வினையாற்றும் விதத்தில் சிற்சிறு மாற்றங்களைச் செய்து முன்னேறிச் செல்லும் போதும் காலிக் கதாபாத்திரத்தைச் மிகச் சிறப்பாகச் செய்திருந்தார் சிம்பு. முன்னதான சில வருடங்களில் ஒருவித தேக்க நிலையிலிருந்த சிம்புவுக்கு மாநாடு பெரியதொரு வெற்றியாக அமைந்தது.
எதிர்நாயகனாக வரும் எஸ்.ஜே. சூர்யா, காவல்துறை அதிகாரி தனுஷ்கோடியாகப் படம் முழுவதும் அவரது தனித்துவமான நடிப்பைக் கொடுத்திருந்தார். அவரது வசன உச்சரிப்பு, உடல்மொழி, முகபாவங்கள் என அனைத்துமே சற்றே மிகையானது என்று சிலரால் விமர்சிக்கப்பட்டாலும், அந்தக் கதாபாத்திரத்துக்கு அவை கச்சிதமாக பொருந்திப்போயின. குறிப்பாக, சிம்புவுக்கும், எஸ்ஜே.சூர்யாவுக்குமான ஃபேஸ் ஆஃப் காட்சிகளில் பொறி பறந்தது.
கல்யாணி பிரியதர்ஷன், சீதாலட்சுமி பாத்திரத்தில் இயல்பும், அழகுமாகத் தோன்றினார். மற்ற முக்கியமான பாத்திரங்களில் கருணாகரன், பிரேம்ஜி, வாகை சந்திரசேகர், எஸ்.ஏ.சந்திரசேகர் உள்ளிட்டோர் நடித்திருந்தார்கள். பழம்பெரும் நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் வில்லனாகத் தோன்றியதும், தனுஷ்கோடிக்கும், காலிக்குக்கும் நடுவே மாட்டிக்கொண்டு குழம்பி நிற்பதும் ரசனை.

ரிச்சர்ட் எம். நாதனின் ஒளிப்பதிவு, படத்தின் த்ரில்லர் உணர்வு சற்றும் குறையாத வகையில் அமைந்திருந்தது. குறிப்பாக, ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் நிகழும் சம்பவங்களை வெவ்வேறு கோணங்களிலும் காட்சியமைப்புகளிலும் பதிவு செய்வதன் மூலம், அவை ஒரே மாதிரியாகத் தோன்றாமல் பார்த்துக்கொள்கிறார்.
இசை யுவன் ஷங்கர் ராஜா. பரபரவென ஓடிக்கொண்டே இருக்கும் காட்சிகள், அதற்கேற்றத் துள்ளலான பின்னணி இசை. மதன் கார்க்கி எழுதிய ’மெஹருசைலா’ கல்யாணப் பாடலை யுவன், பவதாரிணி, ரிஸ்வான் ஆகியோர் பாடியிருந்தார்கள். கல்யாண மண்டப சண்டைக்காட்சியில் ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், எடிட்டர் பிரவீன், ஸ்டண்ட் சில்வா ஆகியோரின் ஒன்றிணைந்த பணி ஒரு மேஜிக்கை நிகழ்த்தியிருந்தது.
வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் படத்தைத் தயாரித்திருந்தது சுரேஷ் காமாட்சி. படத்தை எழுதி, இயக்கியிருந்தவர் வெங்கட் பிரபு. ஒரு நடிகராக அறிமுகமாகி அடையாளம் காணப்படாமலிருந்த வெங்கட்பிரபு ஓர் இயக்குநராக முதல் படமான சென்னை-28 படத்திலேயே முத்திரை பதித்தவர். மங்காத்தாவைப் போல மாநாடும் அவரது கேரியரில் முக்கியமான படமாக அமைந்தது. அவரது வழக்கமான கதைக் களங்களிலிருந்து விலகி, இப்படியொரு வித்தியாசமான காலச்சுழல் திரைக்கதையை சிறப்பாகக் கையாண்டிருந்தார். ஒரே சம்பவம், தொடர்ந்து நிகழும்போதும், சிறிதும் சலிப்படையச் செய்துவிடாமல், ஒவ்வொரு முறையும் கதையின் போக்கில் ஏற்படும் மாற்றங்கள் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டன. ஒரு காலச் சுழற்சிக் கதையில் மிக முக்கியமானது அதன் விதிகளைத் தெளிவாக நிறுவுவதும், அவற்றை மீறாமல் கதையை நகர்த்துவதும்தான். மாநாடு அந்தச் சவாலை வெற்றிகரமாகக் கையாண்டது.

கடவுளர் மற்றும் பேய்களை முன்னிறுத்தி உருவாக்கப்படும் மாயாஜாலக் கதைகள் தமிழ் சினிமாவுக்கு நன்கு அறிமுகமான வகைமைதான் எனினும், அதைத்தாண்டிய அறிவியல் புனைகதைகள், காலப்பயணம், காலச்சுழல் போன்ற மிகுபுனைவுக் கதைகள் 2000-க்குப் பிறகுதான் குறிப்பிடத்தகுந்த அளவில் வெளியாகின. அவற்றில் எந்திரன், இரண்டாம் உலகம், 24, இன்று நேற்று நாளை, அயலான் போன்றன குறிப்பிடத் தகுந்த முயற்சிகள் எனலாம். அவற்றுள் காலச்சுழலை மையமாக வைத்து வெளியான இந்த மாநாடு, விறுவிறுப்பான திரைக்கதையமைப்பாலும், சுவாரசியமான காட்சிகளாலும் தனித்து நின்றது.
காலிக் ஒவ்வொரு முறையும் இறந்து மீண்டும் உயிர்த்தெழும் போதும் தனுஷ்கோடி அவனைத் துரத்துகிறான். இருவரும் ஒருவரை ஒருவர் தெரிந்துகொள்ளத் தொடங்கும்போது, கதை இன்னும் சுவாரசியமாகிறது. ஒவ்வொரு முறையும் தனுஷ்கோடி, காட்சிகளை காலிக்குக்கு சவாலாக மாற்றியமைத்துக்கொண்டே போகிறான். ஆயினும் விடாக்கொண்டனாக காலிக் மீண்டு வருகையில், தனுஷ்கோடி படுக்கையிலிருந்து விரக்தியோடு விழிக்கும் காட்சிகள் ரசமானவை.
சிம்புவும் எஸ்.ஜே. சூர்யாவும் இணைந்து உருவாக்கும் இந்த ஆடுபுலி ஆட்டம்தான் மாநாட்டின் மிகப்பெரிய பலமாக அமைந்தது. ஒரு காலச்சுழல் கதையை, ரசிகர்களின் நினைவில் நிலைத்து நிற்கும் ஒரு சினிமா அனுபவமாக மாற்றிவிட்டதில் இந்த இரண்டு நடிகர்களுக்கும் பெரும்பங்குண்டு!



















