`Split Duple House’: கோவையில் பழைமையும் புதுமையும் கலந்த கனவு இல்லம்!
சென்னை: ரூ.700 கோடி மதிப்பிலான ஹெராயின் கடத்தல் - பின்னணியில் பிரபல போதை மாஃபியா டீம்!
சென்னையில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள போதைப் பொருள் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உடனடியாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சென்னை முழுவதும் சல்லடை போட்டு போதைப் பொருள் கடத்தல் கும்பலை தேடினர். இந்தச் சமயத்தில்தான் சென்னை மாதவரம் பகுதியில் பைக்கில் வந்த இருவரைப் பிடித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அவர்களிடம் வெள்ளை நிறத்திலான 69 பாக்கெட்கள் இருந்தன. அவற்றை ஆய்வு செய்த போது ஹெராயின் என தெரியவந்தது.

இதையடுத்து ஹெராயினை பறிமுதல் செய்த மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், பிடிப்பட்ட இருவரிடம் விசாரித்தனர். விசாரணையில் அவர்களின் பெயர் சென்னையைச் சேர்ந்த சபீர் அகமது, பெரியகுளத்தைச் சேர்ந்த அப்துல் எனத் தெரியவந்தது. அவர்களிடம் விசாரித்தபோது சென்னையிலிருந்து திருச்சி வழியாக இலங்கைக்கு ஹெராயினை கடத்த திட்டமிட்ட தகவல் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
இதுகுறித்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளிடம் கேட்டதற்கு, ``வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட ஹெராயினை சென்னையிலிருந்து திருச்சி வழியாக இலங்கைக்கு கடத்த இவர்கள் கொண்டு சென்றிருக்கிறார்கள். பல கைகள் மாறி இந்த போதைப் பொருள் இவர்களுக்கு கிடைத்திருக்கிறது. கைது செய்யப்பட்ட சபீர் அகமது, அப்துல் ஆகியோருக்கு இந்த அசைமென்ட்டை கொடுத்தது பிரபல போதைப் பொருள் கடத்தல் மன்னன் என்ற தகவல் கிடைத்திருக்கிறது. மேலும் இந்தக் கடத்தல் பின்னணியில் பெரிய போதை மாஃபியா நெட்வொர்க் இருப்பதும் கண்டுபிடித்திருக்கிறோம். இந்த டீம் இன்னும் சில போதைப் பொருள் கடத்தலுக்கு திட்டமிட்டிருக்கும் தகவல் எங்களுக்கு கிடைத்திருக்கிறது'' என்றனர்.


















