தமிழ்த்தாய் வாழ்த்து: ``ஆளுநரின் செயல் கண்டனத்துக்குரியது" - அமைச்சர் நிர்மல் கு...
'மார்னிங் தலைமைச் செயலகம்; ஈவ்னிங் சினிமா ஷூட்டிங்!' - போயஸ்கார்டனில் 'தலைவர்' தனுஷ் ரசிகர்கள் ஜாலி!
நடிகர் தனுஷ் அவரது 43 வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இந்நிலையில், போயஸ்கார்டனில் உள்ள அவரது வீட்டின் முன்பாக நூற்றுக்கணக்கான ரசிகர்கள் திரண்டிருந்தனர். 'தனுஷூம் அரசியலுக்கு வருகிறாரா?' எனும் பேச்சு எழுந்து வரும் நிலையில் நாமும் இன்று போயஸ்கார்டனில் ஆஜராகியிருந்தோம்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அ.இ.பு.த.ம.மு.க கட்சியின் சசிகலா ஆகியோரின் வீட்டருகேதான் தனுஷின் வீடும் அமைந்திருக்கிறது. பிறந்தநாளை முன்னிட்டு தன்னுடைய வீட்டின் முன்பு திரளும் ரசிகர்களை தனுஷ் காலை 11 மணியளவில் சந்திப்பார் எனத் தகவல் வெளியாகியிருந்தது. அதனால் காலை 10 மணியிலிருந்தே ரசிகர்கள் சிறுசிறு கும்பல்களாக திரள ஆரம்பித்தனர். வெயிலுக்கு இதமாக ஆங்காங்கே ஓரமாக நின்ற ரசிகர்கள், 11 மணி நெருங்கியவுடன் கேட்டை முட்டிக் கொண்டு நிற்க ஆரம்பித்தனர்.
இன்னும் 2 மணி நேரம் ஆகும்!
தனுஷ் வீட்டுக்கு வந்த ஸ்விக்கி டெலிவரி பாய், சிலிண்டர்க்காரர், கொரியர் பாய் என பலருக்கும் அவ்வபோது கதவுகள் திறந்தன. ஒவ்வொரு முறை கேட் திறக்கப்படும் போதும் ரசிகர்கள் ஆராவாரத்தில் கூச்சலிட்டனர். (தனுஷே கேட்டில் வந்து ஸ்விக்கி ஆர்டரே வாங்கி செல்வார் என நினைத்திருப்பார்கள் போல...) கேட்டை முட்டிக் கொண்டே ரசிகர்கள் நிற்க கடுப்பான உதவியாளர் ஒருவர், 'சார்...காலையிலேயே கோயிலுக்கு போயிட்டு வந்து தூங்கிட்டு இருக்காரு...இன்னும் 2 மணி நேரம் ஆகும்' என ஒரே போடாக போட்டு விட்டு சென்றார்.
11 மணியை மனதில் வைத்து 10 மணிக்கு முன்பாகவே திரண்டிருந்த ரசிகர்கள் களைத்துப் போய் இடத்தை காலி செய்வார்கள் என பார்த்தால், 'நீ மோரை ஊத்து பங்காளி...' மோடில் கொளுத்தும் வெயிலில் கேட் கம்பியை பிடித்துக் கொண்டு தூணை பிடித்து சாயும் படையப்பா சிவாஜி பாணியில் காத்துக் கிடந்தனர்.

சிலர் சிறு குழந்தைகளையும் அழைத்து வந்திருந்தனர். 'பேசாம குழந்தையை தூக்கி கேட்டுக்குள்ள போட்டுட்டு...குழந்தையை காணோம்...குழந்தையை காணோம்னுட்டு உள்ள போயிடுவோமா...' என குதர்க்கமான ஐடியாக்களையும் சில ரசிகர்கள் ஆலோசித்துக் கொண்டிருந்தனர். காமெடிய்யா இருந்தாலும் ஒரு நியாயம் வேணாம்மாய்யா...
இத்தனை ஆர்வமாக இருக்கிறார்களே என சில ரசிகர்களிடம் பேச்சுக் கொடுத்தோம். ''எங்களை இப்போ நற்பணி செய்ய சொல்லிருக்காரு. அதனால புல்லா நற்பணிகள் பண்ணிட்டு இருக்கோம். இப்போ தலைவரை பார்த்திட்டு கூட அன்னதானம் போடத்தான் போறோம். அரசியலுக்கு வர்றது அவரோட முடிவு. அதுக்கு நாங்க எப்பவும் சப்போர்ட் பண்ணுவோம். அவரோட முதல் படம் வந்தப்பவும் அவரை ட்ரோல் பண்ணாங்க. இப்போ அரசியலை வச்சும் ட்ரோல் பண்றாங்க. நீங்க வேணா ஒரு நாள் பாருங்க எங்க தலைவரை சி.எம் ஆக்கி காட்டுறோம்' என மூச்சு விடாமல் பேசி முடித்தார் தனுஷ் ரசிகர் மன்ற நிர்வாகி ஒருவர். சொல்லி வைத்தாற் போல அங்கே இருந்த ரசிகர்கள் பலரும் இப்படியே பேசினர்.
'அரசியலுக்கு வந்தால் சினிமாவில் நடிக்க முடியாதே...' என ஒரு ரசிகையிடம் கேட்டேன். அதற்கு அவர் 'அதெல்லாம் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு ஸ்டைல் இருக்கும். மனசு இருந்தா என்ன வேணா பண்ணலாம். காலையில செக்ரடேட். ஈவ்னிங் ஷூட்டிங்னு கூட போவாரு. எண்ணம் போல் வாழ்க்கை. எண்ணம் போல்தான் வாழ்க்கை...' என்றவுடன் நடுங்கிவிட்டேன்.
'எங்க தலைவர் அடுத்த தேர்தல்ல சி.எம் ஆவாரு...' என அடித்துக் கூறிய இன்னொரு ரசிகையிடம் 'அப்போ களத்துல விஜய்யும் இருப்பாரே. விஜய் vs தனுஷ்ணு போட்டி இருக்குமா...' என்றேன். 'அவர் ஒரு பக்கம் சி.எம் ஆ இருக்கட்டும். இன்னொரு பக்கம் எங்க தலைவர் சி.எம் ஆ இருக்கட்டும்' என போயஸ்கார்டனே அதிருமளவுக்கு ஒரு பதிலை சொன்னார்.
இதற்கு மேல் பேச்சுக் கொடுத்தால் தமிழ்நாட்டை இரண்டாக பிரித்து ஒரு நாட்டை விஜய்யிடமும் ஒரு நாட்டை தனுஷிடமும் கொடுங்கள் என உரிமைப் பிரச்னையை எழுப்பிவிடுவார்களோ என்கிற ஐயத்தில் கிறங்கி போய் ஒரு ஓரமாக உட்கார்ந்தேன்

திடீரென சஃபாரி போட்ட பவுன்சர்கள் சிலர் வந்திறங்கினர். கூட்டம் கூடியதை அறிந்து உளவுத்துறையினர் சிலரும் தனுஷின் வீட்டை நோட்டம் விட ஆரம்பித்தனர். கூட்டத்தை புகைப்படமும் வீடியோக்களும் எடுத்து தலைமைக்கு அப்டேட் செய்து கொண்டிருந்தனர். அது சரி, கூட்டம் சேர்க்கும் யாரையும் லேசாக எடுத்துக் கொள்ளக் கூடாத காலமல்லவா இது!
தனுஷ் வீட்டிற்கு வெளியே நின்றிருந்த ரசிகர்கள் கொஞ்சம் விவரமானவர்கள் என்பதையும் அறிய முடிந்தது. தனுஷ் வீட்டு முன்பு எந்த வண்டியையும் நிறுத்தாமல், தனுஷின் அண்டை வீட்டாரின் கேட்டுகளை திறக்க முடியாதபடிக்கு பைக்குகளை நிறுத்திவிட்டனர். 'ஊருக்கே ஸ்டாராக இருந்தாலும்...எங்களுக்கு நீங்க குழாயடி சண்டை போடுற பக்கத்து வீட்டுக்காரர்தான்...' என்கிற மோடில் இருந்த அண்டை வீட்டினர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் சொல்ல லோக்கல் காவலர்களும் ஸ்பாட்டுக்கு வந்தனர். 'சீக்கிரம் முடிச்சு விடுங்க சார்...கம்ப்ளௌண்ட் ஆகுது..' என அவர்கள் அவசரப்படுத்த எப்படியும் அந்த கேட் திறந்துவிடும் என ரசிகர்கள் இன்னும் போர்ஸாக கேட்டை முட்டினர்.
'போலீஸே வந்துட்டாங்க...ஹீரோவை சீக்கிரம் வர சொல்லுங்க சார்...' வெயிலில் சுருண்டு கிடந்த நம்முடைய மைண்ட் வாய்ஸ் முதல் மாடியிலிருந்த தனுஷூக்கு கேட்டு விட்டது போல. மதியம் ஒண்ணே முக்கால் மணிக்கு நெருக்கமாக அந்த கேட் திறக்க தனுஷ் வெளியே வந்தார்.
ஏற்கெனவே ஏற்பாடு செய்து வைத்திருந்த ஆளுயர மாலையை ரசிகர் மன்ற நிர்வாகிகள் சிலர் தனுஷூக்கு அணிவிக்க ரசிகர் கூட்டத்திலிருந்து ஒரு கேக் மிதந்து வந்தது. அதை தனுஷ் வெட்டி முடிப்பதற்குள் கூட்டம் முன்னும் பின்னும் முண்டியத்து தள்ளுமுள்ளானது. சுதாரித்துக் கொண்ட தனுஷ் கண நேரத்தில் கேட்டை மூட சொல்லிவிட்டு உள்ளே சென்றார். அடுத்த ஒன்றிரண்டு நிமிடங்களில் தனுஷ் முதல் மாடியிலிருந்து காட்சி கொடுத்து கையசைத்தார். 'ஆஹா...அங்கே பார் என் தலைவனைப் பார்...' என ரசிகர்கள் பூரிப்படைய அவர்களின் தனுஷ் தரிசனம் இனிதே நிறைவுற்றது.

'அதான் பார்த்தாச்சுல்ல...கிளம்புங்க...கிளம்புங்க...' என பாதுகாவலர்கள் வேக வேகமாக விரட்டினர். அதையும் மீறி திட்டு வாங்கிக் கொண்டு சில ரசிகர்கள் வீட்டின் முன்பு அப்படியே நின்றனர். கூட்டம் கலைந்த பிறகு இருப்பவர்களை வீட்டுக்குள் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொள்வார் என போகிற போக்கில் பரவிய வதந்தியை நம்பி வெயிலில் கருகிக் கொண்டிருந்தனர். அவர்களின் இன்னமும் சிலர் கலைந்து போகாமல் அப்படியே கூட நிற்கக்கூடும்.
போயஸ்கார்டனில் புதிதாக ஒலிக்கத் தொடங்கியிருக்கும் 'தலைவா...' கோஷம் எங்கே போய் முடியப்போகிறது?















