தமிழ்த்தாய் வாழ்த்து: ``ஆளுநரின் செயல் கண்டனத்துக்குரியது" - அமைச்சர் நிர்மல் கு...
தஞ்சாவூர்: கலெக்டரால் பணி நீக்கம் செய்யப்பட்டவர் மீண்டும் பணி செய்த விவகாரம்; மூவர் பணியிட மாற்றம்!
தஞ்சாவூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு பிரிவில் தற்காலிக கணினி உதவியாளராக சுதர்சன் என்பவர் பணியாற்றி வந்தார். இவர் மீது பல முறைகேடு புகார்கள் எழுந்தன. இதனால், இவரை மாவட்ட ஆட்சியர் ரேவதி ஜூலை 6ம் தேதி பணி நீக்கம் செய்தார். மேலும், இந்தப் பணியிடத்துக்கு தற்காலிகமாக பெண் பணியாளர் சினேகா என்பவர் நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், பணி நீக்கம் செய்யப்பட்ட சுதர்சன் ஜூலை 25ம் தேதி மீண்டும் அதே இருக்கையில் அமர்ந்து பணியாற்றினார். இதைப் பார்த்த தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் தஞ்சாவூர் ஒன்றியத் தலைவர் குலோத்துங்கன் கேள்வி எழுப்பி வீடியோவும் எடுத்தார். அப்போது, `சார், உங்களை டிஸ்மிஸ் செய்திருக்கிறார்கள். நீங்க எப்படி இங்கு உட்கார்ந்து வேலை செய்கிறீர்கள்?' என குலோத்துங்கன் கேட்டார். உடனே சுதர்சன், `உங்களுக்கு என்ன வந்துச்சி?' எனக் கேட்க, `இது என்னோட டிபார்ட்மென்ட், என்னோட செக்ஷன்' என்றார் குலோத்துங்கன்.
மேலும், `உங்களுக்கு யார் அனுமதி கொடுத்தது. கலெக்டர் டிஸ்மிஸ் செய்திருக்கிறார். பணம் வாங்கிய புகார்கள் உள்ளன' என்றதும் அங்கிருந்த பெண் அலுவலர், `புதிதாகப் பணியில் சேர்ந்தவருக்கு கற்றுக் கொடுக்கிறார்' என்றார். உடனே, `அவர் என்னைக்கு பணி நீக்கம் செய்யப்பட்டார், இப்போது வந்து பணி செய்கிறார். அரசு நிர்வாகத்தில் எப்படி இதற்கு அனுமதி கொடுத்தீர்கள்' என்றார். இதில் இரு தரப்புக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இருவரையும் சக ஊழியர்கள் சமாதானப்படுத்தினர்.
இது குறித்த வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த விவகாரம் தொடர்பாகப் பணி நீக்கம் செய்யப்பட்ட பணியாளர் சுதர்சன், சத்துணவு பிரிவில் பணியாளர்களுக்கு ஊதியம் போடுவதற்காக கணினியில் பதிவேற்றம் செய்தார் என வட்டார வளர்ச்சி அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ரேவதி விசாரணை நடத்தினார்.
இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் வட்டார ஊராட்சி அலுவலர் (வட்டார வளர்ச்சி) சிவக்குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை வி.பி.ஜி ராம்ஜி வட்டார வளர்ச்சி அலுவலராகவும், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) வே.சித்ரா பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராகவும், உதவியாளர் ஆர்.ரேவதி கும்பகோணம் ஊராட்சி ஒன்றிய ஊர்நல அலுவலராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மேலும், புதிதாக பணியமர்த்தப்பட்ட தற்காலிக சத்துணவு கணினி உதவியாளர் சினேகாவை பணியிலிருந்து விடுவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.















