செய்திகள் :

"மோசமான படம்" என்ற பட்டமே வைரல் விளம்பரமானது - ரூ.1 லட்சத்தில் இருந்து ரூ.20 கோடி வசூல்!

post image

‘இந்தப் படம் நல்லா இருக்காம்... டிக்கெட் போடு!’ என்று சொல்வதைத்தான் இதுவரை கேள்விப்பட்டிருப்போம். ஆனால், சீனாவில் ஒரு படத்துக்கு நிலைமை அப்படியே தலைகீழ் ‘படம் படுமோசமாம்’... அப்படி என்னதான் மோசமாக இருக்கிறது என்று போய் பார்ப்போம்! என்று மக்கள் டிக்கெட் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

சீனாவில் வெளியாகியிருக்கும் ‘நியூ லாய்’ ல்(Niu Lai) என்ற அனிமேஷன் படத்துக்கு இப்போது நடப்பது அப்படியொரு விசித்திரமான சம்பவம்தான்! ஆகஸ்ட் 5-ம் தேதி சீனாவில் வெளியான இந்த 86 நிமிடப் படம், முதல் 10 நாள்களில் வெறும் 7,700 யுவான் மட்டுமே வசூலித்தது. இந்திய மதிப்பில் சுமார் ₹1 லட்சம்.

நாடு முழுவதும் 300-க்கும் குறைவானவர்களே படத்துக்கான டிக்கெட்டை வாங்கியிருந்தனர்.

படத்துக்கான புரோமஷன் இல்லை; முன்கூட்டிய விளம்பரம் இல்லை; ஏன், படத்துக்கான முன்னோட்டக் காட்சிகூட இல்லை; இப்படியொரு படத்தை யாராவது பார்த்திருக்கிறார்களா என்பதே கேள்வியாக இருந்த நிலையில், படத்தின் சில காட்சிகள் இணையத்தில் பரவத் தொடங்கின.

அவற்றைப் பார்த்த ரசிகர்கள், கதாபாத்திரங்களின் அசைவுகள், கணினி வரைகலை, குரல், நடிப்பு, கதை என படத்தின் பல அம்சங்களையும் கிண்டல் செய்ய ஆரம்பித்தனர்.

‘மாணவர் ஒருவர் செய்த பயிற்சிப் படம் போல இருக்கிறது’, ‘செயற்கை நுண்ணறிவைவிட மோசமாக இருக்கிறது’ என விமர்சனங்கள் பறந்தன.

2026-ம் ஆண்டின் மோசமான படமாகக்கூட இருக்கலாம் என்று சிலர் கிண்டல் செய்தனர். ஆனால், சினிமா வரலாற்றில் சில நேரங்களில் மோசமான விளம்பரமே நல்ல விளம்பரமாகிவிடும் அல்லவா?

‘அப்படியா... இவ்வளவு மோசமா? சரி, நாமே போய்ப் பார்த்துவிடுவோம்!’ என்ற ஆர்வம் மக்களுக்கு உருவானது.

அவ்வளவுதான். திரையரங்குகளில் கூட்டம் வர ஆரம்பித்தது!

Maoyan (மாயன்) திரைப்பட வசூல் தரவுகளின்படி, படம் தற்போது 1.49 கோடி யுவானைத் தாண்டிய வசூலை எட்டியுள்ளது. இந்திய மதிப்பில் இது சுமார் ₹19–20 கோடி. முதல் 10 நாள்களில் வெறும் ₹1 லட்சம் அளவுக்குச் சுருண்டு கிடந்த படம், அடுத்தடுத்த நாள்களில் இப்படியொரு வேகத்தைப் பிடித்திருப்பதுதான் இங்கே ஹைலைட்!

இதனால், சீனத் திரையரங்க வசூல் பட்டியலில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவான ‘தி ஒடிஸி’, ‘ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே’ உள்ளிட்ட படங்களுடன் ‘நியூ லாய்’யின் பெயரும் கவனம் பெறத் தொடங்கியுள்ளது.

இந்தப் படத்தின் இன்னொரு ஆச்சர்யம் அதன் உருவாக்கக் கதை.

‘நியூ லாய்’ படத்தை உருவாக்கியவர்கள் வெறும் இருவர் மட்டுமே. சின் யுமெங் மற்றும் சன் லிஃபாங் ஆகிய இருவரும் சுமார் ஐந்து ஆண்டுகள் இந்தப் படத்தில் பணியாற்றியுள்ளனர். எழுத்து, இயக்கம், தயாரிப்பு, குரல் நடிப்பு என பல பொறுப்புகளையும் இவர்களே கவனித்துள்ளனர். இவர்கள் தாய்–மகன் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

படத்தின் கதை என்ன?

பிறந்து சில காலமே ஆன ஒரு கன்றுக்குட்டிக்கும், ஒரு வானம்பாடிக்கும் இடையிலான உறவைச் சுற்றி நகரும் கதை. அதுவும் வழக்கமான நேர்கோட்டுக் கதை அல்ல... கனவுபோன்ற, அபத்தமான காட்சிகளின் வழியாகப் பயணிக்கிறது.

படத்துக்கான விளம்பரமும் பெரிதாக செய்யப்படவில்லை. வெளியானது ஒரு நேர்த்தியான பாரம்பரிய சீன மை ஓவிய பாணியிலான போஸ்டர் மட்டுமே. அந்தப் போஸ்டரைப் பார்த்துவிட்டு திரையரங்குக்குள் சென்றவர்களுக்கு... போஸ்டரில் இருந்த அழகுக்கும் திரையில் இருந்த அனுபவத்துக்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி காத்திருந்தது!

படத்தின் தரம் குறித்து வெளியீட்டுக்கு முன்பே எச்சரிக்கப்பட்டதாகவும், இருந்தபோதிலும் இயக்குநரின் நண்பர் என்பதால் விநியோகஸ்தர் படத்தை வெளியிட முடிவு செய்ததாகவும் சீன ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், எல்லோருமே இதை வெறுமனே கேலி செய்யவில்லை.

செயற்கை நுண்ணறிவு மூலம் சில நொடிகளில் பளபளப்பான காட்சிகளை உருவாக்கிவிடக்கூடிய காலத்தில், இரண்டு பேர் ஐந்து ஆண்டுகள் உழைத்து உருவாக்கிய இந்தக் கைவினைத் தன்மை கொண்ட அனிமேஷன் வித்தியாசமாக இருப்பதாக சில ரசிகர்கள் கருதுகின்றனர்.

அதேநேரம், திரைத்துறையைச் சேர்ந்த ஒருவர் படத்தை கடுமையாக விமர்சித்துள்ளார். கதை, சிறப்புக் காட்சிகள் என ஒரு திரைப்படத்தில் எதிர்பார்க்கப்படும் பல அம்சங்களிலும் படம் மோசமாக இருப்பதாக அவர் கூறியிருக்கிறார். ஆனால், அவர் சுட்டிக்காட்டிய அதே ‘மோசமான தன்மை’தான் இப்போது படத்துக்கான மிகப்பெரிய விளம்பரமாக மாறிவிட்டது.

படம் நன்றாக இருப்பதாகக் கேள்விப்பட்டு மக்கள் டிக்கெட் வாங்கவில்லை.‘இவ்வளவு மோசமாக இருக்கிறதாம்... நாமும் ஒருமுறை பார்த்துவிடுவோமே!’ என்பதற்காகத்தான் டிக்கெட் வாங்குகிறார்கள்.

சினிமாவில் படங்களின் வெற்றிக்கு நல்ல கதை, பெரிய நட்சத்திரங்கள், கோடிக்கணக்கான விளம்பரங்கள் எனப் பல சூத்திரங்கள் இருக்கின்றன.

ஆனால், ‘நியூ லாய்’ ஒரு புதிய சூத்திரத்தைச் சொல்லிக் கொடுக்கிறது. ‘படம் மோசம்’ என்ற விமர்சனம்கூட... சரியான நேரத்தில் கிடைத்தால், அதுவே படத்துக்கான மிகப்பெரிய விளம்பரமாக மாறிவிடும்!

'இதயம்' முரளி படத்திற்கு முன்னோடி! – வாய்விட்டுச் சொல்லாத காதலின் வலி

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின... மேலும் பார்க்க

BTS ரசிகர்களுக்கு ஒரு Shock… `கேட்கும் திறன் குறைபாடு' - பாடகர் V பகிர்ந்த தகவல்!

BTS ரசிகர்களுக்கு அதிர்ச்சி தகவல்! உலகப் புகழ்பெற்ற K-pop குழுவான BTS-ன் பாடகர் V, தனக்கு ஒரு காதில் கேட்கும் திறன் குறைபாடு இருப்பதாக முதன்முறையாக ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார்.V எனும் மேடைப் பெயரால்... மேலும் பார்க்க

அடையாளம் மாறும் சிவாஜியின் 'அன்னை இல்லம்' - இடிக்கப்பட்டதன் காரணம் இதுதான்!

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் உணர்வுடன் இரண்டறக் கலந்திருந்த அன்னை இல்லம், மாற்றத்துக்குத் தயாராவது குறித்து விரிவாகப் பார்க்கலாம்.சென்னையில் 'அன்னை இல்லம்' என்றால் எல்லோருக்கும் உடனே நினைவுக்கு வருவத... மேலும் பார்க்க

சபரிமலையில் மோகன்லால் சினிமா படப்பிடிப்பு; கடும் நிபந்தனைகளுடன் தேவஸ்வம் போர்டு அனுமதி!

சபரிமலையிலும், பம்பையிலும் நடிகர் மோகன்லாலின் சினிமா படப்பிடிப்புக்கு திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது. ஆகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. 'துடரும்'... மேலும் பார்க்க