திருப்பத்தூர்: இடிந்து விழும் நிலையில் ஜலகம்பாறை பேருந்து நிறுத்தம்; அச்சத்தில் ...
"விருப்பமனுல என் பெயரை மாத்தி காங்கிரஸ் மேலிடத்துக்கு அனுப்பிருக்காங்க" - அமெரிக்கை நாராயணன் பேட்டி
சட்டப்பேரவைத் தேர்தல்களில் சீட் கிடைக்காதவர்கள் தாங்கள் சார்ந்திருந்த கட்சிகளில் இருந்து வெளியேறுவது கடந்த சில தினங்களாகவே கட்சி வித்தியாசமில்லாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியில் 37 ஆண்டுகளாக இருந்து வந்த அமெரிக்கை வி நாராயணனும் கட்சியிலிருந்து வெளியேறிக் கொள்வதாக அறிவித்திருக்கிறார்.
'தனிக்கட்சியாகத் தேர்தலில் போட்டியிட்டால் நிறையப் பேருக்கு வாய்ப்பு கிடைக்கும். கூட்டணி என ஆகிய பிறகு கிடைக்கும் சொற்ப இடங்களில் எத்தனை பேருக்குத்தான் கொடுப்பார்கள்?' என்ற கேள்வியை வைத்ததும், கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசத் தொடங்கினார்..

''ராஜிவ் காந்தி கூப்பிட்டு காங்கிரஸ் கட்சிக்கு வந்தவன் நான். என்னுடைய துரதிர்ஷ்டம் அவர் சீக்கிரமாகவே மறைஞ்சுட்டார். ஆனாலும் இந்த 37 வருஷத்துல எப்பவாவது வேற எந்தக் கட்சிக்காவது போயிருக்கேனா? அரசியலைச் சேவையாகவே நினைச்சேன். எல்லாரையும் அரவணைச்சு மக்களுக்கு சேவை செய்யணும்னு நினைச்சேன்.
அமெரிக்காவுல இருந்து வந்ததால் மேல்தட்டு அரசியலை மட்டுமே பண்ணுவேனு இருக்கலை. கிராமம் கிராமமாகப் போய் கட்சி வளர்த்தேன். சமூகத்தில் பின் தங்கிய நிலையிலிருப்பவர்களையும் மேல கொண்டு வரணும்னு அவங்களோட சேர்ந்து ஃபீல்டு ஒர்க் பண்ணினேன். ஆட்டோ தொழிலாளர்கள் என்னை கௌரவத் தலைவரா நியமிச்சாங்க.
நான் வசிக்கிற வேளச்சேரியில அபார்ட்மென்ட் அதிகம்.. அங்க இருக்கிற அபார்ட்மென்ட் அசோசியேஷன்களில் என்னை நிகழ்ச்சிகளுக்குக் கூப்பிடுவாங்க. நான் இருக்கிற ஏரியாவுல மக்கள்கிட்ட நல்ல பெயரை வாங்கி வச்சிருக்கேன்.
இப்படிப்பட்ட சூழலில் வேளச்சேரியில இப்ப இருக்கிற எம்.எல்.ஏ மீது அதிருப்தி இருக்குனு கட்சி நிர்வாகிகள் மூலமாகவும் தொகுதி மக்கள் மூலமும் தெரியவந்தது. அதுவும் போக எல்லாரும் அரசியலுக்கு எதுக்கு வருவாங்க? பதவியில இருந்தா கூட நாலு நல்லதைச் செய்யாலாம்னுதானே. அந்த மாதிரிதான் நானும் விருப்ப மனு கொடுத்தேன்.
கட்சியில பதவிகள் தந்தாங்கதான். ஆனா அதிகாரமிக்க பதவிகள் இருந்தாதானே மக்களுக்குத் தேவைப்பட்டதை நாம செய்ய நினைக்கிற புது விஷயங்களைச் செய்ய முடியும். அதனாலதான் அந்தப் பதவிகளை விரும்பினேன்.
ஆனா பாருங்க, நான் கொடுத்த விருப்ப மனுவையே யார் முடிவெடுக்கணுமோ அவங்ககிட்ட போகும் போது திருத்தியிருக்காங்க. அதாவது 'அமெரிக்கை' நாராயணன்னா என்னை தேசிய அளவுல கட்சியின் முக்கியப் பிரமுகர்களுக்குத் தெரியும். ஆனா 'அமெரிக்கை'யைத் தூக்கிட்டு வெறும் வி.நாராயணன்னு போட்டு அனுப்பியிருக்காங்க.
யார் எதுக்கு பண்ணினாங்க தெரியலை. சம்பந்தப்பட்டவங்களுக்கே வெளிச்சம் இனி உட்கார்ந்து அதை ஆராய்ச்சி பண்ணி ஆகப்போவது ஒண்ணுமில்ல.
எல்லாருக்கும் எப்படி சீட் தருவாங்கனு கேட்டீங்க. நியாயமான கேள்விதான். ஆனா ஒரு முறை ரெண்டு முறை கேட்டிருந்தா பரவால்ல. நான் 17 தடவை கேட்டிருக்கேன்.
கஜினி முகமது 17 தடவை படையெடுத்தார்னு பள்ளியில படிச்சிருக்கோமே, அதேபோலத்தான் நானும் படையெடுத்தேன். 17 தேர்தல்ல ஒரேயொரு முறை தரலாமே?
ஆனா கிடைக்கலையேங்க.
மறைமலை நகரில் பேருந்து நிறுத்ததுக்கு காமராஜர் பெயர் வைக்கணும்னு நடந்த ஒரு போராட்டத்துல கலந்துகிட்டு 15 நாள் ஜெயில்ல இருந்தேன். அப்ப ஜெயில்ல என்னை அடிச்சாங்க.
இதெல்லாம் சொல்லிக் காட்டணும்கிறது என் விருப்பமில்லை. ஆனா இன்னைக்கு கட்சி மக்களுக்கு சேவை செய்கிறவர்களை எந்த இடத்துல வச்சிருக்குனு நினைச்சுப் பார்க்கிறப்ப வருத்தமா இருக்கு.. அதனால் சொல்ல வேண்டி இருக்கு'' என்கிறார்.















