செய்திகள் :

விழுப்புரம் மாவட்டம், ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர்: பொன்னும் பொருளும் பதவியும் அருளும் தாயார் சந்நிதி!

post image

பெருமாள் வரதராஜராக அருள்பாலிக்கும் தலங்கள் பல உள்ளன. அவற்றில் குறையாத செல்வம் அருளும் பெருமாளாக அட்சய வரதராகக் கோயில் கொண்டிருக்கும் தலம் ஆட்சிப்பாக்கம்.

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்திலிருந்து ஆவணிப்பூர் செல்லும் வழியில் சுமார் 22 கி.மீ தொலைவில் உள்ளது இந்தத்திருக்கோயில்.

வைகுண்டத்தில் இருந்து பூமிக்கு வந்த மகாலட்சுமித் தாயார் பூவுலகில் பல புண்ணியத் தலங்களில் தங்கித் தவம் செய்தார். அவ்வாறு தாயார் தவம் செய்த தலங்களில் ஒன்றுதான் ஆட்சிப்பாக்கம்.

இத்தலத்துக்கு அட்சயபுரி என்ற பெயரும் உண்டு. நெடுங்காலம் தவம் புரிந்த திருமகள், இவ்வூரில் தங்கியிருந்த போதுதான் ஶ்ரீநிவாஸப் பெருமாள் தன்னைத் தேடி பூலோகம் வந்து விட்டார் என்ற தகவலை அறிந்தாளாம். விரைவில் திருமாலை அடையப்போகிறோம் என்று எண்ணி மகிழந்தாளாம்.

அப்போது தன்னைச் சேவிக்க வந்த தேவர்களுக்கு வேண்டிய வரங்களை வாரி வழங்கினாளாம். அதனால், 'அட்சயபுரி' என்றும் அழைக்கப்ட்டதாம் இந்தத்தலம்.

ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர் கோயில்
ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர் கோயில்

குபேரனுக்குத் தாயார் அருள் செய்த தலம் இது. எனவே அளகாபுரி என்றும் திருமகள் விஜயம் செய்ததால் விஜயபட்டினம் ஆகிய பெயர்களும் இந்தத் தலத்துக்கு உண்டு.

அவ்வண்ணம் ஆட்சிபாக்கத்திலும் தேவியர் சமேதராக அருள்மிகு அட்சயவரதர் வேண்டும் பக்தர்களும் வேண்டும் வரம் தரும் கருணைக்கடலாகத் திகழ்கிறார்.

இங்கே தாயார் பெருந்தேவித்தாயாராக அருள்பாலிக்கிறார். ஆதியில் தேவர்கள் இங்கே பெருமாளுக்கும் தாயாருக்கும் ஆலயம் எழுப்பி பிரம்மோற்சவம் கொண்டாடியதாகச் சொல்கிறது புராணம்.

முன்னொருகாலத்தில் வடக்கில் வாழ்ந்த ப்ருவரன் என்கிற மன்னனை அவன் உறவுக்காரர்களே சதி செய்து நாட்டை விட்டுத் துரத்தினார்கள். அவனும் செய்வதறியாது தெற்கு நோக்கி வந்தான்.

நாட்டை இழந்த ப்ருவரன் வெகுதூரம் பயணித்து இந்த அட்சய புரியை (ஆட்சிப்பாக்கம்) வந்தடைந்தான். சிதைந்துகிடந்த பெருமாளின் ஆலயத்திலேயே தங்கி வழிபாடு செய்துவந்தான்.

இந்த நிலையில் அந்த ஊருக்கு முனிவர் ஒருவர் வந்தார். அவர் முக்காலமும் உணர்ந்தவர் என்பதை உணர்ந்த ப்ருவரன் அவரிடம் தன் நிலையை விளக்கி நல்லாட்சி புரிந்த தனக்கு ஏன் இப்படியான நிலை என்று கேட்டான். அவர் அவனுடைய முன்வினையை எடுத்துச் சொன்னார்.

ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர் கோயில் பெருந்தேவி தாயார்
ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர் கோயில் பெருந்தேவி தாயார்

முற்பிறவியில் திருடனாக இருந்த ப்ருவரன் பெரும் பாவங்களைச் செய்தான். ஆனால், அட்சய திருதியை நாளில் தன்னை நாடிவந்து உணவு கேட்ட ஒருவருக்குத் தன்னிடம் இருந்த உணவைத் தந்தான். அந்தப் பலனே அவனை மறுபிறவியில் மன்னன் ஆக்கியது.

அந்தப் புண்ணியபலன் தீர்ந்ததும் திருடனாக இருந்து செய்த பாவங்களின் வினை பழிவாங்கத்தொடங்கிவிட்டது. ஆட்சி பறிபோக பிச்சைக்காரன் போல் ஆனான் என்கிற ரகசியத்தை அவனுக்கு உரைத்தார்.

மேலும் , "பசிகொண்ட ஒருவருக்கு நீ அன்று நீரும் சோறும் கொடுத்து, முற்பிறவியில் நீ யோகியைக் காப்பாற்றிய இடம் இந்த அட்சயபுரிதான். இங்கு வைத்து உனக்கு அருள்பாலிக்கவே பெருமாள் உன்னை இங்கு வரச் செய்திருக்கிறார். கேட்டதைக் கேட்டபடி அருளும் இந்த அட்சய வரதரை விடாமல் பிடித்துக்கொள். நீ இழந்தவற்றை மட்டுமல்ல அந்த இந்திரலோகத்தையே அவரிடம் வரமாகப் பெற்று மகிழலாம்’’ என்று கூறிய முனிவர் அவனிடம் விடைபெற்றார்.

மன்னன் முனிவரின் வார்த்தைகளைக் கேட்டு மகிழ்ந்தான். இனி தனக்கு சகலமும் அட்சயவரதரே என்று முடிவு செய்தான். அவரை நாள்தோறும் வழிபட்டு மகிழ்ந்தான்.

வரதரின் அருளால், இழந்த நாட்டையும் செல்வத்தையும் விரைவில் பெற்றான். இந்தத் தலத்தில் அட்சய வரதருக்குச் சிறப்பாகக் கோயில் எழுப்பி, நிவந்தங்களும் எழுதிவைத்தான். ஆண்டுக்கு 13 திருவிழாக்கள் நடத்தவும் ஏற்பாடுகள் செய்தான் என்கிறது தலபுராணம்.

இத்தகைய பெருமைகள் கொண்ட திருத்தலத்தில் அமைந்துள்ள இந்த ஆலயம் ஒற்றைப் பிராகாரம் கொண்டதாக அமைந்திருக்கிறது.

நின்ற திருக்கோலத்தில் அருளும் அட்சயவரதர் மேலிரு கரங்களில் சங்கு-சக்கரம் ஏந்தி, கீழ் வலக் கரத்தால் அபயம் காட்டி, கீழ் இடக் கரத்தை இடுப்பில் தாங்கியபடி, தேவியருடன் காட்சி தருகிறார்.

தனிச் சந்நிதியில், அழகிய பெருந்தேவி தாயார் புன்னகை ததும்பும் எழில் வடிவில் வரப்பிரசாதியாக எழுந்தருளியுள்ளார். கருடாழ்வார், அனுமன் ஆகியோரையும் கோயிலில் தரிசிக்கலாம்.

ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர் கோயில் அனுமன்
ஆட்சிப்பாக்கம் அட்சயவரதர் கோயில் அனுமன்

பொங்கல் பாரி வேட்டை, வைகுண்ட ஏகாதசி என ஆண்டுக்கு 13 திருவிழாக்கள் இங்கு நடைபெறுகின்றன. பிரம்மனால் கொண்டாடப் பட்ட வைகாசி பிரமோற்சவ விழா இங்கு சிறப்பாக நடைபெற்று வருகிறது. சோழர்களும், பிற்காலப் பாண்டியர்களும், நாயக்க மன்னர்களும் திருப்பணிகள் செய்து கொண்டாடிய ஆலயம் இது என்பதற்கு சான்றாக கல்வெட்டுகள் உண்டு. ஆனாலும் அவை காலப்போக்கில் சிதைந்து, இப்போது தெளிவில்லாமல் காணக்கிடைக்கின்றன.

வாய்ப்பிருப்பவர்கள் ஆட்சிப்பாக்கத்துக்கு ஒருமுறையேனும் சென்று அட்சய வரதராஜரை தரிசித்து வாருங்கள். வாழ்வில் இழந்த பதவி, தொலைத்த செல்வம் என எதுவானாலும் அவை அனைத்தும் நம்மைத் தேடிவரும்.

புதுக்கோட்டை மாவட்டம், திருக்களம்பூர் கதலிவனேஸ்வரர்: சுயம்புமூர்த்தி, நோய் தீர்க்கும் பஞ்சாம்ருதம்!

ஆலயம் சென்று வழிபடுவது அருள் சேர மட்டுமல்ல. பொருள் பெறவும் வாழும் இந்த வாழ்க்கையை இனிமையாக்கிக் கொள்ளவும்தான். ஒவ்வொரு ஆலயமும் தனித்துவமான நலன்களை வழங்கும் சிறப்பைக் கொண்டே அமைந்துள்ளன. அப்படிப்பட்ட ஓ... மேலும் பார்க்க

திருவாரூர் மாவட்டம் திருவிளமர்: திருமணத்தடைகள் நீங்கும்; முக்தி அருளும் தேவாரத்தலம்!

சிவபெருமான் நடராஜ மூர்த்தியாகத் திருநடம் புரிந்த தலங்கள் பல. சிதம்பரத்தில் தவம் செய்த பதஞ்சலிக்கும் வியாக்ர பாதருக்கும் காட்சி அருளினார் ஈசன். அது பொன் சபை எனப்பட்டது. பதஞ்சலியும் வியாக்ரபாதரும் அதன்ப... மேலும் பார்க்க

சபரிமலை: `கூட்டத்திற்கு ஏற்ப ஸ்பாட் புக்கிங்' -தேவசம்போர்டு முடிவு; பக்தர்களுக்கு கைகொடுக்குமா?

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மண்டலக்கால மகரவிளக்கு பூஜைகளுக்காக கடந்த 16-ம் தேதி மாலை நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெற்று வருகின்றன.ஆன்லைன் முன்பதிவு மூலம் 70,000 பக்தர்களும் ஸ்பாட் புக்கிங்க்மூலம் 2... மேலும் பார்க்க

ஆவணியாபுரம் ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் கோயில்: சிம்ம முகத்துடன் தாயார், கருடன்; ஒரே தலத்தில் 9 நரசிம்மர்

பெருமாள் ஸ்ரீநரசிம்மராக எழுந்தருளியிருக்கும் ஆலயங்கள் பல தமிழகம் முழுவதும் உள்ளன. அவற்றுள் சில தலங்கள் தனித்துவம் வாய்ந்தவை. பொதுவாக நரசிம்மம் என்றால் பெருமாள் சிங்க முகத்தோடு காட்சிகொடுப்பார் அல்லவா.... மேலும் பார்க்க

சிதம்பரம்: தரிசனம் செய்தாலே முக்தி அருளும் திருத்தலம்; சிதம்பர ரகசியம் என்ன தெரியுமா?

பஞ்சபூதத் தலங்களில் ஆகாயத் தலம் சிதம்பரம். முற்காலத்தில் தில்லை மரங்கள் சூழ்ந்த வனமாக இருந்ததால் இத்தலத்துக்குத் தில்லை என்றே பெயர் ஏற்பட்டது. இத்தலத்தில் ஈசன் நடராஜராகக் கோயில்கொண்டு அருள்கிறார். சைவ... மேலும் பார்க்க

சென்னை கந்தகோட்டம்: கனவில் வந்து காட்சிதந்தார்; வள்ளலார் முதல் பாம்பன் சுவாமிகள்வரை வழிபட்ட முருகன்!

தருமமிகு சென்னை என்று போற்றப்படும் சென்னை மாநகரில் பல முக்கியக் கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றில் பல பழைமையும் பெருமையும் உடையவை. அப்படிப்பட்ட சென்னை ஆலயங்களில் ஒன்றுதான் கந்தகோட்டம். இந்த ஆலயம் அமைந்த ... மேலும் பார்க்க