அமெரிக்கா முழுவதும் விமான சேவை முடக்கம்: 6,600 விமானங்கள் ரத்து, 8,600 தாமதம்! எ...
'விவசாய கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும்!' - மீண்டும் போராட்டத்தை அறிவித்த விவசாய சங்கங்கள்
கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாததை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதி படி முழுமையாக தள்ளுபடி செய்ய கோரியும் வருகிற நவம்பர் - 25 அன்று அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக 50 - க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.
இதுகுறித்து, ஆலோசனகைக்கு பின் விவசாய சங்க நிர்வாகிகள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் தேர்தல் பரப்புரையின் போது ஆட்சிக்கு வந்தவுடன் ஐந்து ஏக்கருக்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு 50 சதவிகிதம் கூட்டுறவு பயிர் கடன்களையும், 5 ஏக்கருக்கு கீழ் உள்ள விவசாயிகளுக்கு முழுமையாக கூட்டுறவு பயிர் கடன்களையும் தள்ளுபடி செய்வேன் என வாக்குறுதி அளித்ததோடு, இது உத்தரவாதம் எனவும் தெரிவித்ததோடு, நிபந்தனைகள் எதுவும் இன்றி முழுமையாக செய்வேன் எனவும் தெரிவித்தார். அதன்பிறகு, விவசாயிகள் - பொதுமக்களின் ஆதரவோடு மிகப் பெரிய அளவில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன், தமிழ்நாட்டில் விவசாயிகள் மொத்தமாக 20,000 கோடி ரூபாய் அளவிற்கு கூட்டுறவு பயிர் கடன்களை பெற்றிருந்த நிலையில், வெறும் 2,000 கோடி ரூபாய் மட்டும் முதல் கட்டமாக அறிவித்தது, விவசாயிகளுக்கு கடும் ஏமாற்றத்தை கொடுத்தது.

அதன் பின்பு விவசாயிகளும் - விவசாய சங்கங்களும் தொடர்ச்சியாக போராடியதால் ஒரு லட்சத்திற்கு மேல் உள்ள விவசாயிகளுக்கு ரூபாய் 5,000 என்பதற்கு பதிலாக, 35,000 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதன் பின்பு, 50-க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்கள் ஒருங்கிணைந்து கூட்டமைப்பை ஏற்படுத்தி, திருச்சி - சமயபுரத்தில் ஐந்து நாட்கள் தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்தியதால், விவசாய சங்க தலைவர்களோடு தலைமை செயலகத்தில் 9 -க்கும் மேற்பட்ட அமைச்சர் பெருமக்களும், போராட்டக் களத்திற்கு வந்து மூன்று அமைச்சர் பெருமக்களும் பேச்சுவார்த்தை நடத்தி 20 நாட்கள் அவகாசம் கேட்ட நிலையில், 30 நாட்களாக போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டது.
அதன் பின்பும் கொடுத்த வாக்குறுதி நிறைவேற்றப்படாததால் மீண்டும் கடந்த அக்டோபர் 22 -ம் தேதி திருச்சி - சமயபுரத்தில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் தொடங்க இருந்த சூழ்நிலையில், அதே நாளில் சென்னையில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் 75,000 ரூபாய் அனைவருக்கும் வழங்கப்படும் என அறிவித்துவிட்டு, தற்போது பல்வேறு நிபந்தனைகள் அப்படியே இருப்பதாலும், 2022, 2023, 2024, 2025 - ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய காலகட்டங்களில் பயிர் கடன் பெற்றவர்கள் கடன் தள்ளுபடி திட்டத்தில் விடுபட்டுள்ளதாலும், எல் நினோ காரணமாக தென்மேற்கு பருவ மழை பொய்த்து, தமிழ்நாட்டில் கடும் வறட்சி நிலவி வருவதாலும், விவசாயிகளுக்கு தற்போது திருப்பி செலுத்தக்கூடிய தகுதி இல்லாத சூழ்நிலையிலும், புதிய கடன்களை பெற முடியாத சூழ்நிலை இருப்பதாலும், விவசாயிகளின் தொடர்ச்சியான நஷ்டத்தையும் உணர்ந்து அரசு தள்ளுபடி செய்ய வேண்டுமென கூட்டமைப்பு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையில் முன்னேற்ற மட்டுமே ஏற்பட்டுள்ளது.

எனவே, எங்களுக்கு முழுமையாக தீர்வு கிடைக்கவில்லை. எனவே, திருச்சி - சமயபுரத்தில் நடைபெற்ற கூட்டமைப்பின் ஆலோசனைக் கூட்டத்தில் வருகிற நவம்பர் 25-ம் தேதி அன்று அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் முன்பும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் இல்லாத மாவட்டங்களில் மாவட்ட தலைநகரங்களிலும், முழுமையாக கூட்டுறவு பயிர் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யாததை கண்டித்தும், உத்தரவாதத்தின் படி முழுமையாக தள்ளுபடி செய்ய கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக, முழு பயிர் கடன் தள்ளுபடி செய்யும் வரை கோரிக்கையை முன்னெடுத்து செல்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.





















