வெங்காயம் சரியில்லையென ஊழியர் சஸ்பெண்ட்; கொதித்தெழுந்த ரேஷன் பணியாளர்கள் - பின்வ...
வெங்காயம் சரியில்லையென ஊழியர் சஸ்பெண்ட்; கொதித்தெழுந்த ரேஷன் பணியாளர்கள் - பின்வாங்கிய அரசு!
தரமற்ற வெங்காயத்தை மக்களுக்கு வழங்கியதாக நியாயவிலைக் கடை விற்பனையாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து நியாயவிலைக் கடை பணியாளர் சங்கம் போராட்டம் அறிவித்ததை அடுத்து, 24 மணி நேரத்தில் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே இன்று நடக்கவிருந்த போராட்டத்தை வாபஸ் பெற்றுக் கொண்டனர் ரேஷன் பணியாளர்கள்.
சென்னை மதுரவாயல் எண் 1 நியாயவிலைக்கடை விற்பனையாளர் யுவராணி. இந்தக் கடை காஞ்சிபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு பண்டகசாலையின் கட்டுப்பாட்டில் வருகிறது.
கடந்த சில தினங்களாக வெங்காயத்தின் விலை வெளி மார்க்கெட்டில் அதிகமாக இருப்பதால் ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிற சூழலில், மதுரவாயல் கடையிலும் வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது.
அங்கு வெங்காயத்தை வாங்கிச் சென்ற சிலர் வெங்காயம் தரமற்றவையாக இருப்பதாக புகார் செய்தார்களாம். இந்தப் புகாரைத் தொடர்ந்து சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்குச் சென்ற அதிகாரிகள், விற்பனையாளர் யுவராணியை சஸ்பெண்ட் செய்யப் பரிந்துரைக்க, அடுத்த சில மணி நேரத்தில் அவருக்கு சஸ்பெண்ட் ஆர்டர் வந்து விட்டது.
இந்த தகவல் சக நியாயவிலைக் கடைப் பணியாளர்களைக் கொந்தளிக்கச் செய்து விட, அவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதென முடிவு செய்து இன்று போராட்டம் நடத்தவிருப்பதாக அறிவித்தனர்.
இது குறித்து தமிழ்நாடு அரசு நியாயவிலைக் கடைப் பணியாளர் சங்க தலைவர் ராஜேந்திரனிடம் பேசினோம்.

''ஏற்கனவே குறைவான சம்பளத்துல வேலை பாத்திட்டிருக்கிற ரேஷன் ஊழியர்களுக்கு இந்த மாதிரியான வேலைகள் கூடுதல் சுமைதான். அதுவும் போக, தரமான வெங்காயத்தை அனுப்ப வேண்டியது அரசுதான். இறக்கும் போதே நல்ல பொருளை இறக்கிட்டா தரம் பிரிக்க வேண்டிய வேலையே இல்லையே.
ஆனா அதைச் செய்யாம அழுகல், குப்பைனு அப்படியே இறக்கிட்டுப் போயிட்டாங்க. அதுல ஓரளவு நல்ல வெங்கயாத்தைப் பிரிச்சுதான் மக்களுக்கு வழங்கினோம். சில கடைகள்ல இந்த வெங்காயத்தைப் பாரத்ததுமே மக்கள் வேண்டாம்னு போயிட்டாங்க.
இப்படியிருக்க, தரமில்லாத வெங்காயத்தைத் தந்துட்டாங்கன்னா யார் தந்தது? விற்பனையாளர் எப்படி அதற்குப் பொறுப்பாக முடியும்? மக்கள் புகார் பண்றாங்கன்னா உடனே ரேஷன் பணியாளரை சஸ்பெண்ட் செய்யறதை எப்படி ஏத்துக்க முடியும்? அதனாலதான் தமிழ்நாடு முழுக்க ஸ்ட்ரைக் செய்யப் போறோம்னு அறிவிச்சோம், அமைச்சரையும் பார்த்து மனு கொடுத்தோம்.

புரிஞ்சுகிட்டாங்களோ என்னவோ, சஸ்பெண்ட் ஆர்டரை ரத்து செய்திருக்காங்க. ஆனாலும் அந்தப் பணியாளரை இடமாற்றம் செய்திருக்காங்க. அதுவுமே ஏற்றுக் கொள்ள முடியாததுதான்'' என்கிறார் இவர்.
தவெக ஆட்சி அமைந்ததிலிருந்தே அறிவிப்புகள் வெளியிடப்படுவதும் எதிர்ப்பு வந்தால் உடனே வாபஸ் பெறப்படுவதும் அரசியல் மற்றும் அதிகார மட்டத்தில் சகஜமாகி விட்டது.
போதுமான நிர்வாக திறமையின்மையே இதற்கு காரணம் என்கிறார்கள்.
முதல்வர் விஜய்யின் அரசியல் ஆலோசகராக வெற்றிவேல் நியமிக்கப்பட்டார். எதிர்ப்பு வந்ததும் அவரது நியமனம் திரும்பம் பெறப் பட்டது. சில தினங்களுக்கும் முன் சட்டம் ஒழுங்கு குறித்த தகவல்களை தகவல் உரிமைச் சட்டம் மூலம் பெற முடியாது என அறிவிக்கப்பட்டது. பலத்த எதிர்ப்பு வந்ததும் அந்த உத்தரவும் வாபஸ் பெறப்பட்டது.
நியாயவிலைக் கடையில் பொருள் தரமில்லை என்றால் தரமான பொருள்களை அனுப்புவதுதான் தீர்வு. அந்தப் பொருளை விற்பனை செய்த ஊழியர் மீது நடவடிக்கை என்பது கேலிக்குரிய விஷயமாகி விடாதா என்று கூடச் சிந்திக்க மறுக்கும் அதிகாரிகளால் அரசுக்குத்தான் அவப் பெயர்.
இனியாவது கவனமாக இருப்பார்களா பார்க்கலாம்.
















