Doctor Vikatan: வார இறுதிநாள்களில் மட்டும் வரும் தலைவலி... எனக்கு மட்டும் ஏன் இப...
வெள்ளை அறிக்கையின் நோக்கம்... மாநில வளர்ச்சி மற்றும் மக்கள் நலனாக இருக்கட்டும்!
புதிதாகப் பொறுப்பேற்றுள்ள த.வெ.க அரசு வெளியிட்டுள்ள பொருளாதாரம் குறித்த ‘வெள்ளை அறிக்கை’ பல்வேறு கேள்விகளை உருவாக்கியுள்ளது. ‘தமிழ்நாட்டின் ஒட்டுமொத்தக் கடன் ரூ.13.18 லட்சம் கோடியாக அதிகரித்துள்ள தாகவும், 60 ஆண்டுகளில் இல்லாத அளவு, கடந்த 5 ஆண்டுகளில் அதிகளவு கடன் வாங்கப்பட்டுள்ளதாகவும், இந்தக் காலக்கட்டத்தில் கடன் இரண்டு மடங்காக உயர்ந்துள்ளதாகவும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
இதற்கு முன், 2001, 2021 ஆகிய ஆண்டுகளிலும் புதிதாகப் பொறுப்பேற்ற அரசுகள் இதேபோல வெள்ளை அறிக்கைகளை வெளியிட்டன. அந்த அறிக்கை களும் முந்தைய ஆட்சியின் மீதான விமர்சனங்களை முன்வைக்கவும், ‘நிதிநிலை மோசம் என்பதால் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிக்கல் உள்ளது’ என்று தெரிவிக்கவுமே பயன்பட்டன.
‘தமிழ்நாட்டின் கடன் நிர்ணயிக்கப்பட்ட வரம்புக்குள்தான் இருக்கிறது. சாலை கள், மருத்துவமனைகள், தொழில் பூங்காக்கள், மக்கள் நலத் திட்டங்கள் போன்ற வற்றுக்காகக் கடன் வாங்கலாம். கடந்த 5 ஆண்டுகளில் மாநிலத்தின் உற்பத்தி வளர்ச்சி இரண்டு மடங்காக உயர்ந்து ரூ.40 லட்சம் கோடி அளவில் உள்ளது. தமிழ்நாடு இரட்டை இலக்க வளர்ச்சி கண்டு இந்தியாவிலேயே முன்னிலை வகிக்கும் மாநிலமாக இருக்கிறது’ என்று திமுக தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் பொருளாதார நிபுணர்களோ, ‘‘தமிழ்நாட்டின் நிதியில் பெரும்பகுதி சம்பளம், ஓய்வூதியம், மானியம், கடனுக்கான வட்டி போன்ற அன்றாட நிர்வாகச் செலவுகளுக்குத்தான் சரியாக இருக்கிறது. கடன்கள் மக்களைத் திருப்திப்படுத்தும் திட்டங்களுக்காக வாங்கப்படுகிறதே தவிர, வளர்ச்சிக்கான முதலீடுகளுக்குப் பயன்படுத்தப்படுவதில்லை” என்கிறார்கள்.
தற்போது, நாட்டின் பொருளாதாரம் பல சவால்களைச் சந்தித்துக் கொண்டி ருக்கிறது. மக்களும் வாழ்வாதாரச் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். புதிதாகப் பொறுப்பேற்றிருக்கும் அரசு சமூகப் பாதுகாப்பு, மருத்துவம், கல்வி, உள்கட்டமைப்பு போன்றவற்றுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதேநேரத்தில் மாநிலத்தின் வருவாயை அதிகரிக்க வேண்டும், செலவுகளைக் கவனமாகக் கண்காணிக்க வேண்டும். கூடுதல் கடன் வாங்கினால், மாநிலத்தின் நிதிநிலை மேலும் மோசமாகிவிடும். அதேபோல், கடனையும், நிதிநிலையையும் காரணம் காட்டி கட்டணங்களை, வரிகளை உயர்த்தி மக்கள் மீது சுமையை ஏற்றக்கூடாது.
விரைவில், 2026-27 நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வரவுள்ளது. சமீபத்தில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய், தமிழ்நாடு 1.5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாகும் கனவை வெளிப்படுத்தியிருக்கிறார். இச்சூழலில், மாநிலத்தின் நீண்டகால நிதி ஆரோக்கியம், வளர்ச்சி குறித்து சிந்தித்து ஆக்கபூர்வமாக திட்டங்களை உருவாக்கவேண்டியது அவசியம். பேராதரவு வழங்கி ஆட்சியில் அமர வைத்த மக்கள் அதைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.
அக்கறையோடும் தொலைநோக்கோடும் எதிர்காலத்துக்கான புதிய அடித்தளத்தை உருவாக்க வேண்டும்!
- ஆசிரியர்













