சட்டமன்றக் கூட்டம்: மேகதாது விவகாரத்தில் தனித் தீர்மானம் கொண்டுவரும் முதல்வர் வி...
Doctor Vikatan: வார இறுதிநாள்களில் மட்டும் வரும் தலைவலி... எனக்கு மட்டும் ஏன் இப்படி?
Doctor Vikatan: என் வயது 50. எனக்கொரு விசித்திரமான பிரச்னை இருக்கிறது. தனியார் நிறுவனத்தில் வேலை பார்க்கிறேன். வார நாள்களில் சாதாரணமாக இருக்கிறேன். வாரக் கடைசி வந்தால் மட்டும் எனக்கு ஒரு பக்கத்தில் கடுமையான தலைவலி வந்துவிடுகிறது. இத்தனைக்கும் நான் வார இறுதி நாள்களில் வேலை செய்யாமல் ஓய்வில்தான் இருக்கிறேன். இந்தப் பிரச்னைக்கு என்ன காரணம்... எனக்கு மட்டும் ஏன் இப்படி... தீர்வே கிடையாதா?
பதில் சொல்கிறார் இங்கிலாந்தைச் சேர்ந்த குடும்பநல மருத்துவர் கே. பாஸ்கர்.

'எனக்கு மட்டும் ஏன் இப்படி' என்ற உங்களது கேள்வி நியாயமானதுதான். ஆனால், நீங்கள் நினைக்கிற மாதிரி இந்தப் பிரச்னை உலகிலேயே உங்களை மட்டும் பாதிக்கும் பிரச்னையும் அல்ல என்று புரிந்துகொள்ளுங்கள். அதற்கு முன் உங்களுக்கு ஏற்பட்டுள்ள மைக்ரேன் (Migraine) எனப்படும் ஒற்றைத் தலைவலி குறித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
தலைவலிகளில் மைக்ரேன் அல்லது ஒற்றைத் தலைவலி என்பது சற்றே கடுமையானது.
தலையின் வலது அல்லது இடது பக்கத்தில் வருவதால் இதற்கு 'ஒற்றைத் தலைவலி' என்று பெயர். இதே தலைவலி சிலருக்கு வார இறுதி நாள்களில் மட்டும் வரும். இதை 'வீக் எண்ட் மைக்ரேன்' ( Weekend migraine ) என்று சொல்கிறோம். இதை 'லெட் டௌன் மைக்ரேன்' (The Let Down migraine) என்றும் சொல்வதுண்டு. வாரம் முழுவதும் பரபரப்பாக வேலை பார்த்துவிட்டு, வாரக் கடைசியில் வேலைப் பளுவை இறக்கி வைப்பதால் ஏற்படும் தலைவலி என்பதால் இந்தப் பெயர்.

ஏழில் ஒருவரை பாதிக்கும் பிரச்னையாக உள்ளது மைக்ரேன். பெண்களில் மூவரில் ஒருவரை பாதிக்கும். பொதுவாக 30 வயதுக்குள் மைக்ரேன் பாதிப்பு தொடங்கிவிடும். ஒருவேளை 50 ப்ளஸ் வயதில் வந்தால், அந்தத் தலைவலிக்கு வேறு காரணங்கள் உள்ளனவா என்று மருத்துவரை அணுகித் தெரிந்துகொள்ள வேண்டும். தலையில் உள்ள நரம்புகள் மற்றும் ரத்தக்குழாய்கள், சில வேதியல் கடத்திகளால் பாதிக்கப்படும்போது, அது தலைவலி உள்ளிட்ட பிரச்னைகளாக வெளிப்படும். மைக்ரேன் என்பது பரம்பரையாக பாதிக்கலாம். அப்பா-அம்மாவுக்கு மைக்ரேன் இருந்தால் பிள்ளைகளுக்கும் வரலாம்.
ஐந்தில் ஒருவருக்கு 'வீக் எண்ட் மைக்ரேன்' வார இறுதியில் ஏற்படும் தலைவலி பாதிப்பு இருக்கிறது. இந்த பாதிப்புக்கான சரியான காரணங்கள் யாருக்கும் தெரியாது. பரபரப்பான வேலை, அதிகப்படியான வேலைப்பளு இரண்டும் பிரதான காரணங்களாக இருக்கலாம் என கருதப்படுகின்றன. வார இறுதியில் இந்த இரண்டும் குறைவதால், கார்ட்டிசால் போன்ற ஹார்மோன்கள் தலைவலியைத் தூண்டுகின்றன.
வேலை நாள்களில் அடிக்கடி காபி குடிப்பவர்கள், வார இறுதியில் அதைக் குறைத்துக்கொள்வார்கள். ரத்தத்தில் கஃபைன் அளவு குறைவதாலும் தலைவலி வரலாம். அதே போல வார இறுதியில் அதிக ஆல்கஹால் குடிப்பதாலும் தலைவலி வரலாம்.
வீக் எண்ட் பார்ட்டி என்ற பெயரில் கிளப், பார்ட்டிக்குச் சென்று, மங்கலான ஒளியும் பிரகாசமான ஒளியும் மாறிக் கொண்டிருக்கும் சூழலில் இருப்பது, இரவில் அதிக நேரம் விழித்திருப்பது, மறுநாள் அதிக நேரம் தூங்குவது, சர்கேடியன் ரிதம் எனப்படும் நம் உடலின் தூக்க-விழிப்பு சுழற்சியில் மாற்றம் ஏற்பட்டு தலைவலி வரலாம்.

வார இறுதி நாள்களில் நேரம் கெட்ட நேரத்தில் தாமதமாகச் சாப்பிடுவதால், ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து தலைவலி தூண்டப்படலாம்.
வாரம் முழுவதும் உட்கார்ந்தபடி வேலை பார்த்துவிட்டு, வார இறுதியில் வெளிப்புற வேலை, தோட்ட வேலை, வீட்டு வேலைகள் செய்தாலும் தலைவலி தூண்டப்படலாம்.
இதன் அறிகுறிகள் பலவிதங்களில் வெளிப்படலாம். அவை...
ஒரு பக்கத்தில் தலைவலி, சில சமயங்களில் இரண்டு பக்கங்களிலும் தலைவலி...
குமட்டல் அல்லது வாந்தி...
சத்தம் மற்றும் வெளிச்சத்தைச் சகித்துக்கொள்ள முடியாதது.
பார்வையில் மாற்றங்கள் ஏற்படுவது... சரியாகத் தெரியாதது, வண்ணக்கோடுகள் தெரிவது , ஒளிக்கீற்றுகள், மின்னல் கோடுகள் வந்து போவது, பார்வை மங்குதல்,
கொட்டாவி
உடலின் ஒரு பகுதியில் ஊசி குத்துவது போன்ற அல்லது மரத்துப்போன உணர்வு ஏற்படுதல்
வார்த்தை உபயோகத்தில் தடுமாற்றம் ஏற்படுவது
இவை எல்லாம் பொதுவாக ஏற்படும் மைக்ரேன் (common migraine) அறிகுறிகள்.
இது தவிர, ஐந்தில் ஒருவருக்கு கிளாசிகல் மைக்ரேன் ( classical migraine ) ஏற்படலாம். இது நான்கு நிலைகளில் ஏற்படும். தலைவலி ஏற்படுவதற்கு முன்பே தலைவலி வந்துவிடுமோ என்ற பயம், அதன் காரணமாக சோர்வு, மனநிலையில் மாற்றம் ஏற்படுவது முதல் நிலை. பார்வையில் ஒளிக்கீற்றுகள், உடம்பில் குத்துவது போன்ற உணர்வு ஏற்படுவது இரண்டாவது நிலை. மூன்றாவது நிலையில் தெறிக்கும் தலைவலி, குமட்டல், வாந்தி, ஒளி-ஒலியை சகித்துக்கொள்ள முடியாத நிலை போன்றவை ஏற்படலாம். இவை சில மணி நேரம் முதல் சில நாள்கள்வரை நீடிக்கலாம். நான்காவது நிலையில் தலைவலி குறைந்து, சோர்வு, உடல்வலி, மனதை அமைதிபடுத்த முடியாத நிலை, கவனச் சிதறல் போன்றவை ஏற்படலாம்.

வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் சிகிச்சைகளின் மூலம் இந்த பாதிப்பிலிருந்து மீளலாம்.
வார இறுதியில் ஒரேயடியாக ஓய்வெடுக்க நினைக்காமல் சீரான வாழ்க்கைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும். உடற்பயிற்சி, உறக்கம், உணவுப்பழக்கம், காபி, டீ குடிப்பதில் அதிக அளவிலான மாற்றங்கள் இல்லாமல் பார்த்துக்கொள்ளவும். தலைவலிக்கு பாராசிட்டமால் மாத்திரை எடுக்கலாம். வலி குறையவில்லை என்றால், மருத்துவரை அணுகி அவர் பரிந்துரைக்கும் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மாத்திரைகளும் வந்துள்ளன. அடிக்கடி மைக்ரேன் வராமல் தடுக்கவும் மாத்திரைகள் உள்ளன. மருத்துவரின் பரிந்துரையோடு மட்டும் அவற்றை எடுத்துக்கொள்ள வேண்டும். மைக்ரேனுக்கான முதல்கட்ட சிகிச்சைகளில் பெரும்பாலானவர்களுக்கு சரியாகிவிடும். ஆனால், 100-ல் ஒன்றிரண்டு பேருக்கு அது சரியாகாமலும் போகலாம். அவர்கள் நரம்பியல் மருத்துவரை அணுகி, அடுத்தகட்ட சிகிச்சைகளை எடுக்க வேண்டும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.


















